மனதுக்கு கொடுங்கள் அதிகாலை உற்சாகம்!

Morning excitement
Morning excitement
Published on

இன்றைய நாகரிகமான சூழலில் நாம் தூங்கும் பழக்கமும், எழும் பழக்கமும் பல்வேறு வகையான மாற்றங்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலானோருக்கு நிசப்தமாய் கழியும் இரவுகளே சிலருக்கு கடினமாய் வேலை செய்யும் பகலாய் மாறி இருக்கிறது. இரவு நேர வேலைகளில் ஈடுபடுபவருக்கு இரவு என்பதே பகலாக உள்ளது.

நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான நேரங்களில் நம் மனதானது உற்சாகமின்றி களைப்பாகவே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வாரம் முழுதும் வேலை செய்துவிட்டு வார விடுமுறை நாட்களில் பொழுதை கழிப்பதற்காக பல்வேறு விதமான இடங்களை தேடிச் செல்கிறோம். அப்படியானால் வார நாட்களிலும் கூட நம்முடைய மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள நாம் என்ன செய்யலாம்?

இயல்பாகவே நாம் உடலை  கவனித்துக் கொள்ளும் அளவுக்கு மனதை கவனித்துக் கொள்வதில்லை. ஆனால் எந்த ஒரு மாற்றமும் மனதில் இருந்து தான் துவங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் சிறிய ஒரு செயலினால் உங்கள் மனதை உங்களால் எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ள முடியும். காலை எழுந்தவுடன் நீங்கள் டீ, காபி அருந்துவீர்கள். முதலில் உங்களது உடலுக்கு தான் நீங்கள் தீனி போடுகிறீர்கள். அதை தவிர்த்து, காலை எழுந்தவுடன் உங்களது மனதுக்கு உணவளியுங்கள். அதன்பின் நிறைய மாற்றங்களை காணலாம்.

அதற்கு முதலில் நாம் அதிகாலையில் எழ வேண்டும். அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலான காலகட்டங்களில் எழுந்திருப்பது மனதுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுக்கும். அந்த நேரத்தில் எந்த ஒரு வேலையும் அவசரமாக செய்ய வேண்டிய சூழல் பெரும்பாலும் நமக்கு இருக்காது. மொட்டை மாடிக்கு சென்று இந்த உலகின் படைப்பினை நன்கு ரசிக்கலாம். சிலு சிலுவென வீசும் காற்றும், பொழுது புலர்வதை உணர்த்தும் பறவைகளின் ஒலியும் கேட்க கேட்க காதுகளுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். ஊரே அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதில் நாம் மட்டும் ஒரு கவிஞரைப் போல் இந்த உலக வாழ்வினை உற்று நோக்கிக் கொண்டிருப்பது எவ்வளவு சுகமான அனுபவம் தெரியுமா!

பொதுவாகவே சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள். சுவர் என்பது நம்முடைய உடல். ஆனால் நம்முடைய உடலையும் கட்டுப்படுத்தும் சக்தி நம்முடைய மனதுக்கு உண்டு.

 உடல் நலத்தை கவனித்துக் கொள்வதைப் போல பல மடங்கு மனநலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் பெரும்பாலும் பயணம் செய்யும்போது, வேலைகள் செய்யும்போது கூட பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வோம். ஆனால் அது கூட ஒரு வகையான செயற்கையான ரசனை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பேருந்தில் பயணம் செய்யும்போது நம் கண்ணுக்கு முன் ஆயிரக்கணக்கான காட்சிகள் விரிந்து கொண்டிருக்கும். ஆனால் நாம் நம் கண்களுக்கு திரையிட்டு விட்டு வெறும் பாடலை மட்டும் ரசித்து வாழ்வதில் மனம் என்ன ஒரு ஆனந்தத்தை அடைய முடியும்.

இதையும் படியுங்கள்:
மனதில் உறுதி இருந்தால் வெற்றி உத்திரவாதம்!
Morning excitement

இப்பொழுதெல்லாம் பேருந்துகளில் ஹெட்செட் போடாத நபர்களை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. எல்லோரும் ஹெட்செட்  போட்டுக் கொண்டு ஏதோ ஒரு பாடலை கேட்டுக் கொண்டு தான்  இருக்கிறோம். அப்படியானால் நம்மிடையே ரசனை அதிகரித்து விட்டது என்று அர்த்தமா?

ஒரு பயணத்தை முழுமையாக அனுபவிக்கும் ஒருவரால் தான் அந்த பயணத்தில் இருக்கக்கூடிய சிக்கல்களை தெளிவாக கண்டறிய முடியும். அதற்கான தீர்வுகளை நோக்கி சிந்தனையை விரிவுபடுத்த முடியும். இயற்கையாய் நடக்கும் எந்த ஒன்றையும் அனுபவிக்க மறுத்து செயற்கையாய் நமக்கு நாமே ஒரு திரையை கட்டிக் கொண்டு வாழ்கிறோம்.

மனிதன் இயற்கையாய்  அனுபவித்த பல விஷயங்களின்  மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் செயற்கையாக பல பொருள்களை படைத்தான். ஆனால் நாம் அனைவரும் இயற்கை என்ற ஒன்று  இருப்பதையே  மறந்துவிட்டு அனைத்து பொருட்களையும் செயற்கையாகவே பயன்படுத்திக் கொள்ள கற்றுக் கொண்டிருக்கிறோம். 

இதையும் படியுங்கள்:
சில மாறுதல்கள் சிறப்பான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்!
Morning excitement

வாழ்க்கை என்பது ஒரு பயணம் போன்றது தான். எல்லோருக்கும் அதே 24 மணி நேரம்தான், ஒவ்வொருவரும் அந்த 24 மணி நேரத்தை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொறுத்து நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் ஆனந்தமாகவும் தேவையற்றதாகவும் மாறுகிறது. எல்லாவற்றையும் ரசிக்கக் கூடிய ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது. ரசனைகளை அதிகப்படுத்தினால்  வாழ்க்கையானது வானில் சிறகினை விரித்துச் செல்லும் பறவையைப் போல மிகவும் உற்சாகமாக இருக்கும். முடிந்தவரை உடலை தாண்டி மனதுக்கும் உணவிட முயற்சி செய்யுங்கள், வாழ்க்கையை ரசித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com