

எந்த வகை தானம் என்றாலும் பெற்றுக் கொள்பவர் முகத்தில் புன்முறுவலை உண்டாக்கும் என்பது இயற்கையின் நியதி.
அதைப் போல் பாராட்டுத்தலை பெற்றுக் கொள்பவர்கள் முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலிப்பதை காணலாம்.
தானங்களில் பல வகை உண்டு. கொடுப்பவர்கள் மனம் உவந்து கொடுக்கும் பொழுது பெறுபவர்கள் தங்கள் நன்றியை மனதார தெரிவிக்கும் பொழுது அவர்களுடைய அந்த தருண மன நிம்மதி முகப்பொலிவில் மின்னுவதை பார்க்கலாம்.
அப்படிப் பார்த்தால் பிறரை மனம் மகிழந்து பாராட்டுபவர்கள் அத்தகைய பாராட்டை எந்த வகை பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பாராட்டுவது தானத்திற்கு ஒப்பாக கருதுவது கன பொருத்தமாகும்.
குறிப்பாக பாராட்டுதல் தன்னிச்சையாக இருக்க வேண்டும். (appreciation should be spontaneous)
பாராட்டுதல்களை பெற்றுக் கொள்ள போகிறவர் அதை சிறிதும் எதிர்பார்க்காத சமயத்தில், உண்மையான உணர்வோடு மனம் மகிழ்ந்து அவரைப் பாராட்டினால், அத்தகைய பாராட்டை பெற்றுக் கொள்பவர் முகம் பூரித்து மந்தகாச புன்னகை வெளிப்படும் என்பது உறுதி.
அந்த குறிப்பிட்ட தருணம் பாராட்டுதலை பெற்றவருக்கு மேலும் சாதிக்க வேண்டும் என்ற உந்துகோலாக அமையும். (serve as a motivating factor)
சரியான நேரத்தில் சரிவர பாராட்டுதல் என்பது ஒரு வகை கலை. ஆனால் வெகு சில நபர்களாலேயே அந்த செயலை திறமையாக செயல்படுத்த முடிகின்றது.
பிறரின் சாதனைகள், முயற்சிகள், நல்குணங்கள், மற்றவர்களுக்கு தேவைக்கு ஏற்ப உதவி கரம் நீட்டுவது, போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் உரிய பாராட்டுதல்களுக்கு உரியவர்கள் ஆவார்கள்.
அத்தகையவர்களை பாராட்டுவதற்கு தயங்க கூடாது.
மனமார உடனுக்குடன் பாராட்டுதலை தெரிவித்து விட வேண்டும்.
பாராட்டும் செயல்பாட்டை தள்ளிப்போடவே கூடாது.
உடனுக்குடன் பாராட்டுதல் அதற்கு உரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி மேலும் சாதிக்க தூண்டுகோலாக அமையும்.
நேரம் கடந்த அல்லது தள்ளிப் போடப்பட்டு தெரிவிக்கும் பாராட்டுதல் நீர்த்து போவதுடன் பாராட்டுதலின் முக்கியத்துவத்தையும் இழந்து நிற்கும்.
பாராட்டுதல் இயற்கையாக உள்ளன்போடு இருத்தல் அவசியம். (natural appreciation).
அதுவே செயற்கையாக, ஏனோ தானோ என்றும், கடனுக்காகவும் , மேலோட்டமாகவும் ( உதட்டளவில்) பாராட்டுதல் இருந்தால், அத்தகைய பாராட்டுதலை தெரிவிக்காமல் இருப்பதே மேல்.
அளிக்கும் பாராட்டுதல் பரிசாகவும் அடுத்த கட்டங்களுக்கான நகர்வுகளுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அமைய வேண்டும்.
பாராட்டுதலில் சிறிய சிறிய உன்னத பாயிண்டுகளை கூர்ந்து கவனித்து சுட்டிக்காட்டி வெகுவாக புகழந்து பேசினால் அத்தகைய பாராட்டுதல் மெருகு அடையும், சிறப்பாகவும் அமையும்.
இத்தகைய பாராட்டுதலுக்கு உரியவரை (பெற்றுக் கொள்பவர்) பெருமிதம் அடைய வழிவகுக்கும்.
ஆக மொத்தம் பாராட்டுதல்களை அளிப்பவர், பெறுபவர் இருவருக்குமே மனமகிழ்ச்சி, மனநிம்மதி கிடைக்கும் படி அமைந்தால் அது சிறந்த பாராட்டுதலுக்கு உதாரணமாக திகழும்.
உரிய தருணத்தில், உரிய நபருக்கு, உரிய பாராட்டுதலை தானமாக அளிப்பது சிறந்த பண்பாகும். அதை வளர்த்துக் கொண்டு தாராளமாக அளித்து மகிழவும்.