
‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்ற ஒளவையாாின் வரிகளுக்கேற்ப எழுத்தறிவித்தவரே!
வியத்தகு வித்தகரே! விரல் பிடித்து விஜயதசமியில் நெல்லில் ‘அ’ எனும் எழுத்தை எழுதப் பழக்கிய பகலவனே!
மணலில் விரல் பிடித்து பாடங்களை மனதில் பதியம் போடவைத்த வையகமே!
அழகுத் தமிழில், ‘அன்னை’ என எழுத வைத்த அறிவின் சிகரமே!
அடம் பிடித்து அழும் எனை அன்பால் அரவனைத்து ஆசையாய் பேசி, கல்வி பயிற்றுவித்த பன்முகமே!
கண்டிப்புகளை கண்ணியமாய் கல்வியோடு பயிற்றுவித்த விக்கிரமாதித்தனே!
மடைமைதனை போக்கி, மடை திறந்த வெள்ளம் போல பேச வைத்த வைராக்கியமே!
விாிவுரையாளனே! அடிக்காமல் அன்பால் பாடம் நடத்தி எனை அரவணைத்த அன்புக்கரமே!
மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் குருவாய் பாடம் போதித்த குருவருளே!
குறை செய்தாலும் நிறைய சொல்லிக் கொடுத்த குமரகுருபரனே!
குணக்குன்றே! குவளையமே! அகர முதல எழுத்தை அசராமல் சொல்லித் தந்த சொக்கநாதரே!
சொல்லின் செல்வமே! சொக்கத்தங்கமே! ஆதி பகவனை கல்வியால் உணர வைத்த வையகமே! உத்தம சீலரே!
கல்விதனை கச்சிதமாய் சொல்லிக் கொடுத்து, கனதனவான் ஆக்கிய காருண்யமே!
வாழ்நாளில் பெரும் பதவி பெற எங்களுக்குக் கல்வி பயிற்றுவித்த விமலாதித்தனே!
ஒழுக்கம் பயிற்றுவித்து, ஊர் போற்ற உருப்பட வைத்த உலகமகா உதயமே!
தெள்ளு தமிழை தேன் போல ஊட்டி விட்ட ஒப்பிலாமணியே! கறைபடியா கரமே!
உண்மை பேச சொல்லிக்கொடுத்த தங்கமகனே! தாய் தந்தையரை மதிக்கக் கற்றுக்கொடுத்த கொன்றை வேந்தனே!
உம்மை ஆசிாியர் தின நன்னாளில் செப்டம்பர் திங்கள் ஐந்தில் ஐயம் இல்லாமல் வாழ்த்துவதில் மகிழ்ச்சியே!
நல்லாசிாியரே, நலம் பல பெற்று நலமுடன் வாழ நல்வாழ்த்தை நவில்கிறேன்!
வாழ்க நீ எம்மான் வையத்துள் வாழ்வாங்கு வாழியவே!