நாமொன்று நினைக்க, வேறொன்று நடக்கிறதா? தவறான பஸ்ல ஏறிட்டோம்ன்னு தோணுதா?

வீட்டை சுத்தப்படுத்தும் சின்ன விஷயமோ, புது வீடு கட்டும் பெருமுயற்சியோ இலக்கின் மேல் கவனம் வைத்து உழைத்தால், வெற்றி உங்கள் பக்கம் தான்.
A goal in life..
Motivational articles
Published on

தினசரி காலை படுக்கையிலிருந்து எழும்போதே, மனசு அன்னைக்கு என்னென்ன வேலைகள் செய்யணும்ன்னு அட்டவனை தயாரிக்கும். அதற்கான முயற்சிகளும் ஆரம்பமாகும். சின்னதோ, பெரியதோ எந்த ஒரு முயற்சிக்கும் மனசளவில் இலக்கை நிர்ணயித்து, முதல் ஸ்டெப் வைக்கும் போது, இருக்கிற கவனமும், உற்சாகமும், உழைப்பும் வெற்றிக்கோட்டை பாதம் தொடும் வரைக்கும் இருக்கணும்.

தடங்கல்கள் தடையில்லாமல் வரத்தான் செய்யும். நாமொன்று நினைக்க, வேறொன்று நடந்து சோர்வு அதிகரிக்கும். சட்டையே பண்ணக்கூடாது. நூலளவு துரும்பு கிடைத்தாலும் பற்றிக் கொண்டு முன்னே செல்ல மெனக்கெட வேண்டும்.

என் வாழ்க்கையிலேயே உதாரணம் இருக்கு சொல்றேன். 1979ம் வருடம் அஞ்சல் வழிக் கல்வி மூலமாக, மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் இளங்கலை முதலாமாண்டு சேர்ந்தேன். பாடங்கள் எல்லாம் தபாலில் வந்து விட்டன. ஆர்வமுடன், படிக்கவும் ஆரம்பித்து விட்டேன்.

சிலபஸ் புரிந்து, பிக்அப் ஆகும்போது உடல் நலனில் மாற்றம் ஏற்படவே ஆரோக்கியம் கருதி படிப்பை நிறுத்தும் சூழ்நிலை வந்தது. வேறு வழியின்றி மனக்கஷ்டத்துடன் நிறுத்தி விட்டேன். கொஞ்ச நாட்களில் உடல்நலம் நார்மலாகி விட்டது.

இதையும் படியுங்கள்:
வெற்றி வேண்டுமா? தன்னம்பிக்கையை ஆயுதமாக்குங்கள்!
A goal in life..

வருஷம் போச்சேன்னு வருத்தப்பட்டு, அடுத்த ஆண்டு தொடரலாம்ன்னு மனசை சமாதானப்படுத்திக் கொண்டேன். யுனிவர்சிட்டியில், யாருடைய கவனக்குறைவோ தெரியவில்லை. ஆனால் அவர் எனக்கு நன்மையே செய்தார். 1980 பிப்ரவரியில் யுனிவர்சிட்டியிலிருந்து, எக்ஸாம் பாரம் தபாலில் வந்து விட்டது.

மேற்கொண்டு என்ன செய்வது? யோசித்துப் பலரிடம் விசாரித்ததில் எக்ஸாம் எழுத வாய்ப்பு உள்ளதுன்னு தெரிந்து கொண்டேன். கணவரை சம்மதிக்க வைத்து, பணத்தைக் கட்டி , ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மூன்றே மாதங்களில் படித்து, தேர்வும் எழுதி வருஷத்தை வேஸ்ட் பண்ணாமல் பாஸாகி விட்டேன். அடுத்த இரண்டு வருடங்கள் படிப்பை தொடர்ந்து, "கோமதி பிஏ" ஆகிட்டேன். டிகிரி சர்டிபிகேட் கையில் கிடைக்கும் போது, மனசெல்லாம் மகிழ்ச்சி. பட்டம் வாங்கணும்ங்கிற இலக்கு தான் முக்கியமாக இருந்தது. வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தியதால் பட்டதாரி ஆக முடிந்தது.

சிலர் சலித்துக் கொள்வார்கள், எனக்குத் தான் திறமையே இல்லையே.. உண்மை என்னன்னா அவங்களுக்குன்னு வெளிப்படாத திறமை கண்டிப்பாக இருக்கும். அதைக் கண்டு பிடிச்சு அதிலேயே ஈடுபட்டா இலக்கு கை நீட்டும். மெனக்கெடணும் அவ்ளோ தான். எனக்கு அதெல்லாம் சரி வராதுன்னு பின் வாங்குற லிஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள். செய்வன விரும்பிச்செய்யுங்க. ஆரம்பம் ஆயாசமாக இருந்தாலும், போகப் போக அதனுள் ஓர் ஈர்ப்பு வந்து விடும். சிகரத்தை நோக்கி விரைவாக ஏறுவீர்கள்.

இலக்கைத் தொட வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர்களுக்கு நேரமும் முக்கியம். முடிந்தவரை பெரிய வேலைகளைத் தானே செய்யாமல், தகுதியுள்ள பணியாளர்களிடம் பிரித்துக் கொடுங்கள். நிறைய நேரம் மிச்சமாகி, இலக்கை அடையும் காலம் அண்மையில் இருக்கும்.

அதுபோலவே, தவறான பஸ்ல ஏறிட்டோம்ன்னு தெரிஞ்ச உடனே அடுத்த ஸ்டாப்ல இறங்கிடணும். விட்டுட்டோம்ன்னா, எவ்வளவு தூரம் பயணம் செய்தோமோ அவ்வளவு தூரம் திரும்பி வரும்போது நேரத்தை மிச்சப்படுத்த முடியாது.

ஸ்லிம்மான உடம்பு தான் உங்க இலக்கா.. கஷ்டப்பட்டாவது பிரம்ம முகூர்த்தமான அதிகாலை எழுந்து, விடாமல் நடைப்பயிற்சி செய்யுங்கள். கச்சிதமான, திடகாத்திரமான உடம்புக்கு உத்திரவாதம்.

இதையும் படியுங்கள்:
தோல்வியில் வெற்றி! அமைதியால் வென்ற மிஷெல் ஒபாமா!
A goal in life..

வீட்டை சுத்தப்படுத்தும் சின்ன விஷயமோ, புது வீடு கட்டும் பெருமுயற்சியோ இலக்கின் மேல் கவனம் வைத்து உழைத்தால், வெற்றி உங்கள் பக்கம் தான். இலக்கில் கண் வைத்து உலகை வெல்லுங்கள். ஆல் தி பெஸ்ட்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com