
நம் வீட்டுக்கு வரும் பலரின் பெயர்களை நாம் தெரிந்து வைத்திருப்பது இல்லை. தெரிந்துகொள்ள விருப்பப்படுவதில்லை. காரணம் அவரவர்கள் செய்யும் தொழிலை வைத்து அழைத்தால் போதும் என்ற எண்ணம் கூட இருக்கலாம். அதை விடுத்து துப்புரவு பணியாளர்களை அவர்களின் பெயரைச் சொல்லி அழைத்துப் பாருங்களேன். அப்படி ஒரு சந்தோஷத்தில் மிதப்பார்கள் அவர்கள்.
அதை விடுத்து சிலர் ஏ குப்பை, குப்பை என்று அழைப்பதைப் பார்த்திருக்கிறோம். அப்பொழுது அவர்களின் முகம் கடுகடுவென்று இருக்கும். இருக்காதா பின்னே எல்லோரும் பணியாளர்கள்தானே. ஆதலால் இதுபோல் பணி செய்பவர்களின் பெயர்களைத் தான் நாம் முதன்முதலாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பிறருக்கு வணக்கம் கூறுவது, பிறரின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வது, பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையாக கேட்பது, தனது கருத்துக்களை தெளிவாகவும் பிறரின் மனம் புண்படாமல் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் எடுத்து இயம்புவது போன்றவைதான் நம்மை மிகவும் பண்புள்ளவர்களாக, ஒழுக்க சீலர்களாக வெளிப்படுத்திக் காட்டும்.
"விண்ணப்பங்களை மறுப்பது என்பது மனித இயல்பு. முடிந்தவரை அவற்றை பரிசீலித்து உதவுவது மனிதப் பண்பு. பண்பு என்பது பக்குவத்தின் விளைவு, மனிதனுக்கு மனிதன் வெளிப்படுத்த வேண்டிய குணம்" என்கிறார் லேனா தமிழ்வாணன்.
நாம் பேசுவதை பிறர் காது கொடுத்து கேட்கிறார்கள் என்பதற்காக அங்கு இருக்கும் ஒரு மணி நேரமும் நாம் மட்டுமே பேசுவதாக இருக்கக் கூடாது. மற்றவர்கள் பேசுவதற்கும் இடம் கொடுக்க வேண்டும். ஒரு பெரியவர் அப்படித்தான் வீட்டிற்கு வந்திருக்கும் பொழுது எல்லா நேரத்தையும் அவரே ஆக்கிரமித்துப் பேசினார். குழந்தைகள் அனைவரும் அதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
கடைசியாக என்ன யாருமே எதுவுமே பேசவில்லை என குழந்தைகளைப் பார்த்து அவர் கேட்க, குழந்தைகளோ எல்லா நேரத்தையும் நீங்களே எடுத்துக் கொண்டு விட்டீர்கள் தாத்தா. எங்களை பேச அனுமதிக்கவில்லையே என்று கூற, அப்பொழுது தாத்தாவும் கொஞ்சம் அசடுதான் வழிந்தார்.
மருத்துவரிடம் எல்லா வகையான மருந்துகளும் இருக்கின்றது என்பதற்காக அவ்வளவையும் அவர் சாப்பிட்டு விடுவதில்லை. அதேபோல் ஒரு மரத்தில் காய்க்கும் அத்தனை பழங்களையும் ஒருவரே சாப்பிட முடியுமா என்ன? அப்படித்தான் பேச்சும். நம்மால் பேச முடியும். பேசுவதற்கு நிறைய கருத்துக்கள் இருக்கின்றன.
ஆதலால் மணிக்கணக்கில் பேசுவதை விட்டுவிட்டு மனம் திறந்து பேசினால் உறவுகள் நிலைக்கும். மற்றவர்களும் அவர்களின் கருத்தை கூறுவதற்கும் அதற்கு ஏற்ப எதிர் கருத்தை பெறுவதற்கும் ஏதுவாக இருக்கும்.
ஒருமுறை நானும் என் தோழியும் நடை பயிற்சி மேற்கொண்டோம். அப்பொழுது வழியில் வருபவர்களுக்கெல்லாம் தெரிந்த முகமாக இருப்பதால் வணக்கம் கூறி வந்தோம். ஒரு இடத்தில் என் தோழிக்கு மிகவும் எனிமியாக நடந்து கொண்டவர் எதிரில் வர என் தோழி தன்னையும் அறியாமல் சிரித்த முகத்துடன் எல்லோருக்கும் வணக்கம் கூறுவது போல் அவருக்கும் கூற அவர் முகத்தில் வழிந்த சந்தோஷத்தைக் காணவேண்டுமே. நம்மை மன்னித்துவிட்டார் போலும் என்று நினைத்துக் கொண்டு அவரும் ஒரு நிமிடம் நின்று வணக்கம் கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பிறகு அவர்கள் பகைமையை மறந்து முன்புபோல் நட்புடன் பழக ஆரம்பித்தனர். இதுதான் வணக்கம் கூறுவதன் சிறந்த பண்பு என்பதை அப்போது புரிந்துகொண்டேன். இப்படி நடைமுறை வாழ்க்கையில் அன்றன்று நடக்கும் அனுபவங்களே நம்மை மிகவும் நேசிக்கவும், யோசிக்கவும் வைக்கிறது என்றால் மிகையாகாது.
மற்றவர்களுக்கு உடலிலோ உள்ளத்திலோ காயம் ஏற்படுத்தாத நன்னடத்தையைத் தவிர சிறந்த வழிபாடு உலகில் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.