
நமக்கு என்று இலட்சியங்கள். சின்ன சின்ன ஆசைகள் மனதில் ஏற்படும் குறை, நிறைகள் இன்னும் எத்தனையோ அத்தனையும் நம் மனதுக்குள்ளயே இருக்கட்டும்.
நம் மனதில் இருப்பதை நமக்கு வேண்டியவர்கள் என நினைத்து சொல்லிவிடுவோம். அவர்கள் அதை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அதை இன்னும் பலரிடம் கூறி நம்மை நகைப்புக்குரியவராக ஆக்கிவிடக்கூடாது.
நம் இலட்சியத்தை அப்படிப்பட்டவர்களிடம் கூறுவதால் எந்த ஒரு நன்மையும் ஏற்பட்டுவிடாது.
உங்களின் இலட்சியப் போராட்டத்தில் ஏற்படும் தோல்விகள் உங்களுக்குள் இருக்கட்டும். தொடர்ந்து போராடுங்கள். முயற்சி செய்யுங்கள் வெற்றியின் பலனைப் பெறுவீர்கள்.
நமக்கு வேண்டியவர்களிடம் மனம் விட்டுப்பேச விரும்பினால், உங்களின் வெற்றிகளை மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் தோல்விகளை வெளிக்காட்ட வேண்டாம்.
அவை உங்களுக்குள் இருக்கட்டும் ஏனென்றால் எப்பொழுதும் உங்களை வெற்றி பெற்ற மனிதராகவே காட்டிக்கொள்ளுங்கள். எப்பொழுதும் அப்படியே நினைத்துக்கொள்ளுங்கள்.
நாம்தான் கஷ்டப்படுகிறோம் என நினைத்து விடாதீர்கள் அவற்றை எப்போதும் மனதில் அனைபோட்டுக் கொண்டும் இருக்காதீர்கள்.
கடந்த துயரங்களையே நினைத்துக் கொண்டிருப்பதை உடனே மறந்துவிடுங்கள் வருங்காலத்தில் வளமுடன் வாழத் துவங்குங்கள். எதிர்காலம் உங்களுக்காகவே வரவு கூறிக் காத்துக்கொண்டிருக்கிறது.
தாவரங்களைப் பார்த்தீர்களா! தன் இலைகள் அனைத்தும் பழுத்து உதிர்ந்துவிட்டாலும் மீண்டும் வசந்தம் வந்ததும் இவைகள் துளிர்த்து பசுமையாய் அழகாய்க் காட்சியளிக்கின்றன.
அதுபோல்தான் நாமும் புதிய தெம்புடன் உற்சாகமாய் இருக்கவேண்டும் என்றும் மனதில் உற்சாகத்தை இழந்து விடாதீர்கள். உற்சாகமும், நம்பிக்கையுமே மனிதனின்நிரந்தரச் செல்வங்கள். இவை இருந்தாலே போதும் எதையும் சாதித்துவிடலாம்.
நமக்குள் குறைகளும் இருக்கலாம். அது என்ன என்று நமக்கும் தெரியும் நம்மிடம் உள்ள குறைகளைப் பிறர் எடுத்துக் கூறினால், அதைத் திருத்திக் கொள்ளவும் யோசிப்போம். அதை நமக்கு நாமே உணர்ந்து திருத்திக்கொண்டால் நல்லதுதானே! குறைகள் இருந்தும். நாம் மாற்றிக்கொள்ள முன்வராவிட்டால். அது நமக்குத்தான் நஷ்டம்.
உங்களைப் பற்றிய தவறான விமர்சனமும் எழும். முன் கோபம் இருப்பதனால்தானே. டென்ஷனும் உடனே வந்துவிடுகிறது. இதை நன்கு யோசித்து வெளியேற்றி விடவேண்டும்.
இப்படி இருப்பதால் யாருக்கும் இலாபம் இல்லை தொடர்ந்து இந்தச் செயலைப் பார்ப்பவர்கள். நம்மை விட்டு ஒதுங்கவும் முயற்சிப்பார்கள்.
நம் பிரச்னைகள் நமக்குள் தீர்க்கப்பட வேண்டும். அதுபோல நம் சுமைகளை, அடுத்தவர்கள் சுமக்கவேண்டும் எனவும் நினைக்காதீர்கள்.
எப்பொழுதாவது பயம் வந்துவிட்டாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாதீர்கள், தைரியமுடனும், கவனமுடனும் செயல்படுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
நாம் தைரியமுள்ள மனிதர் என நினைத்து க்கொள்ளுங்கள். அந்தத் தெம்பு ஒன்றே போதும், துணிந்து எதையும் சாதித்துவிடலாம்.
உங்களுக்குள் உள்ள குறைகள் என்ன என்று சிந்தித்து முடிவு செய்யுங்கள். அதன் பின்னர் குறைகளை எப்படி நீக்கலாம் என யோசித்து. செயலில் இறங்குங்கள்.
உடனடியாக எதுவும் முடியாவிட்டாலும், உங்களின் முயற்சி விரைவில் பலன் அளிக்கும்.
ஊக்கத்துடன் செயல்படுத்துங்கள். விரைவில் குறைகள் நீக்கப்பட்டு. புதிய மனிதராய்த் தோன்றுவீர்கள்.
நமக்குள் இருக்கும் குறை, நிறைகளைச் சிந்தித்துப் பாருங்கள். நல்ல குணங்களையும், நல்ல செயல்களையும் மேலும் சிறப்புடன் வளர்த்துக்கொள்ளுங்கள்.