ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள்… எந்த விதமான வெற்றியும் தேடி வராது!

No success will come.
Motivational articles
Published on

சிலர் எப்போதும் சவால்களைக்கண்டு ஓடி ஒளிந்து கொள்வதையே பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் சிறு வயதிலிருந்து பெற்றோர்கள் அவர்களை சவால்களை நோக்கி அணுகவிடாமல் சாக்கு போக்கு சொல்லி சமாளித்த விதம்தான்.  எந்த ஒரு தோல்வியான சூழ்நிலையையும் சமாளிக்கும் விதங்களை ஏற்கக்கூடிய விளக்கங்களாகவே வைத்திருப்பார்கள் அந்த பெற்றோர்கள்.

உதாரணமாக இளவயதில் மற்றவர்களுடன் விளையாடுவதில் முரண்பாடுகள் ஏற்பட்டால் உடனே மற்ற குழந்தைகளைதான் அந்த பெற்றோர்கள் குறை கூறுவர். தன் பிள்ளையின் தவறு என்ன? அதில் அடிப்படை பிரச்னை என்ன? என்று பார்க்க மாட்டார்கள். அதேபோல் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் கற்றுத் தந்த ஆசிரியர் சரியில்லை என்பார்கள்.

தவிர தன் மகனோ மகளோ சரியாக படிக்கவில்லை என்பதை உணரமாட்டார்கள். கல்வி கற்றபின் பணியில் சேர்ந்து ஏதோ ஒரு பிரச்னையால் பணியில் இருந்து நீக்கப்பட்டாலும் 'நீ என்னப்பா செய்வ உன் முதலாளி சரியில்லை'  என்றுதான் மகனுக்கு ஒத்து ஓதுவார்கள்.

இதுதான் ஓடி ஒளியும் வித்தை. ஆனால் இந்த வித்தை விளையாட்டை வாழ்க்கையில் நீண்ட நாட்கள் விளையாடினால் என்ன ஆகும்? வெற்றி ஓடிப்போய் தோல்விதான் தேடிவரும். வாழ்க்கை என்பது விளையாட்டு அல்லவே.

அனைவருக்கும் உண்டான பொது வாழ்க்கையில் சவால்கள் இருப்பது போலவே நமக்கும் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு ஏன் நாம் வாழ்க்கையை நேருக்கு நேராக சந்திக்கக் கூடாது? இந்த சமாளிப்பு வேலைகள் எல்லாம் எத்தனை காலத்திற்கு? என்று ஒரு கட்டத்தில் சிந்தித்தால் அதன்பின் வெற்றி தானாக தேடிவரும்.

இதையும் படியுங்கள்:
இந்த ஏழு உணர்வுகளைத் தூக்கி எறிந்தால் வெற்றி நிச்சயம்!
No success will come.

ஒரு காட்டில் இரண்டு முயல்கள் வசித்தன. வழக்கம்போல் அந்த காட்டில் நரி ஒன்று அந்த முயல்களை வேட்டையாடுவதற்காக வந்தது. முயல்கள் அந்த நரியின் கண்கள் படாமல் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த முயல்களுக்கு அடுத்து எங்கே ஓடுவது என்று தெரியவில்லை.

அதில் ஒரு புத்திசாலி முயல் தன்னுடன் வந்த முயலைப் பார்த்து "நாம் ஏன் ஓடவேண்டும்? திரும்பி நின்று அந்த எதிரியை ஏதேனும் தந்திரம் மூலம் நாம் ஏன் தோற்கடிக்க கூடாது கொஞ்சம் யோசனை பண்ணலாமே?" என்று  கூறியதை மற்ற முயலும் ஏற்றுக்கொண்டு அந்த நரியை தங்கள் தந்திரத்தின் மூலம் புறங்காட்டி ஓடவிட்டு தப்பித்தன.

இப்போதுதான் அந்த முயல்களுக்கு தெரிந்தது. ஆபத்து வரும்போது ஓடி ஒளியாமல் எதிர்கொண்டு நின்று அறிவை வைத்து சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று. இந்த முயல்கள் போல்தான் நம்மில் பெரும்பாலானார் இருக்கின்றோம். ஆபத்து என்று வரும்போது அதை எதிர்கொள்ள அச்சப்பட்டு அல்லது தயங்கி ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி ஓடி ஒளிகிறோம்.

உண்மையில் அந்த பிரச்னையை எதிர்கொண்டு அதன் அடிப்படை பற்றிய தெளிவான புரிதல்களை ஆராயத்துவங்கினால் நம்முடைய பலம் என்ன என்று நமக்கு புரியும். மலை போன்ற பயம் தந்த பிரச்னை அப்போது நமது கண்களுக்கு சிறிய கடுக்காய் போன்று காட்சியளிக்கும். தீர்வும் எளிதாக கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள்!
No success will come.

ஓடி ஒளிவது தற்காலிக தீர்வைதான் தரும். தவிர நிரந்தர தீர்வைத் தராது.  துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்பது பழமொழி. துணிந்தவன் கண்ணுக்கு பாம்பு கூட சிறு கயிறாகத்தான் தெரியும். எதிர்புறம் வரும் பாம்பை தள்ளிவிட்டு தன் லட்சியத்தை நோக்கி ஓடுவான். ஆகவே பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியாமல் எதிர்த்து நின்று வெற்றியைத்தேடி வரச்செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com