ஆரோக்கியமும் அன்பான உறவுகளும்!

Health and loving relationships!
happy lifestyle
Published on

வாழ்க்கையில் உறவுகள் மிகவும் முக்கியமானவை. நம் உறவுகளில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். மன ஆரோக்கியத்திற்கு நல்ல உறவுகள் முக்கியம். அன்பான உறவுகள் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். காரணம் அன்பான உறவுகள் நம்மை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணரவைக்கும். ஆரோக்கியமான உறவுகள் தானாக ஏற்படுவதில்லை. அதற்கான முயற்சிகளை நாம்தான் எடுக்க வேண்டும். உறவுகளை மேம்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் உறவுகளுடன் சமூகமாக பழகவும் நம்  ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய குடும்பங்கள் புறாக்கூடுபோல் எந்தவித உறவுகளும் இல்லாமல் கணவன் மனைவி குழந்தை என்று  சின்ன வட்டத்தில் வாழ விரும்புகின்றனர். உறவினர்களின் வருகையையோ, நெருக்கத்தையோ விரும்புவதில்லை. இது முற்றிலும் தவறு. இக்கட்டான நேரத்தில் நமக்கு உதவவும், கடினமான நேரங்களை கடந்து செல்லவும், ஆறுதல் தேவைப்படும் நேரங்களில் தோள் கொடுக்கவும், நம்பிக்கை கொடுக்கவும் உறவுகள் தேவை. உறவுகள் தான் நம்மை மன ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உதவும்.

ஆரோக்கியமான உறவுகளில் ஒருவரை ஒருவர் நேசிப்பதும், ஆதரிப்பதும் மன பலத்தை அதிகரிக்கும். நம்முடைய நல்ல நேரங்களிலும், கெட்ட நேரங்களிலும் துணைநிற்கும் உறவுகள் நமக்கு மன பலத்தை கொடுக்கும். நமக்கு ஏதாவது ஒன்று என்றால் பார்த்துக்கொள்ள இவர்கள் இருக்கிறார்கள் என்ற தெம்பு கிடைக்கும். நம்முடைய கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவும் நம்பிக்கையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இதையும் படியுங்கள்:
பிரச்னைகளைக் கண்டு பயந்தோடுவது ஏன்?
Health and loving relationships!

ஆரோக்கியமான உறவைக் கொண்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு உடல் மற்றும் மனநல பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஊக்கமும் உற்சாகம் கொடுக்கும் உறவுகள் அமைவது வரம். சில சமயம் தவறான புரிதல்கள் மூலம் பிளவுகள் ஏற்படலாம். கருத்து வேறுபாடுகளையும், விரிசல்களையும் பெரிதாக்கி கொண்டு செல்லாமல் ஒருவருக்கொருவர் காயப்படுத்திக் கொள்ளாமல், வருத்தப்பட வைக்காமல் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் சரி செய்து கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும். கிராமப்புறங்களில் "பேசாது கேட்டது உறவு" என்பார்கள். பேச்சு வார்த்தைகள் இல்லையென்றால் உறவுகள் கெட்டுவிடும் என்று பொருள்.எனவே ஒருவருக்கொருவர் பேச நேரம் ஒதுக்கி உறவுகளை திறம்பட வளர்த்துக் கொள்வது சிறப்பு. உறவுகள் கெட்டு விடாமல் பராமரிப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
அலுவலகப் பணிகளை மன அழுத்தமின்றி செய்ய சில ஆலோசனைகள்!
Health and loving relationships!

உறவுகள் என்பது இறைவன் கொடுத்த வரம். ஆனால் நாம் அனைவருமே உறவுகளை வெறுப்பதற்கும் ஒதுக்குவதற்கும் காரணங்கள் நிறைய இருந்தாலும் இப்படிப்பட்ட உறவுகள் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தப்படுபவர்களைக் கண்டால் உறவின் அருமை புரியும். எல்லா உறவுகளும் இருந்தும் யாரும் இல்லாத அனாதைகளாக நாமும் நம் குழந்தைகளும் ஏன் இருக்க வேண்டும் உறவை பேணி காப்பதில்தான் நம் ஆரோக்கியம் உள்ளது என்பதை ஏன் மறந்து போகிறோம்.

உறவுகளை வளர்க்க நேரம் ஒதுக்குவதும், தவறுகள் நிகழும் பொழுது மன்னிக்கவும், பாசமுடன் பழகுவதும், உறவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான உறவு ஆரோக்கியமான உடல் நிலையையும், மனநிலையையும்  தரும். தனிமைப்படுத்தப்பட்டவர்களை விட குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நல்ல உறவில் இருப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், நீண்ட காலம் வாழ்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. அன்பான, ஆதரவான உறவுகள் நம்மை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும். ஆரோக்கியமான உறவுகள் நமக்கு ஆரோக்கியமான மனநிலையை உண்டு பண்ணும்.

என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com