
நமது தாத்தாவும் பாட்டியும் கவலைகளே இல்லாமல் இருந்தார்கள் என நினைக்கிறீர்களா? தவறு. உலகின் முதல் மனிதர்களான ஆதாம் ஏவாள் இறைவன் தடையை மீறி கனியை உண்டபோது துவங்கிய பிரச்னைகளும் கவலைகளும் இந்த உலகம் உள்ளவரை தொடர்ந்தே வரும். ஆகவே பிரச்னைகளும் அதனால் எழும் கவலைகளும் இல்லாத காலமும் இல்லை மனிதரும் இல்லை எனலாம்.
ஆனால் ஒரு வித்தியாசம். நமது முன்னோரிட மிருந்த மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் இன்று நம்மிடையே இருக்கிறதா? அன்று 10 பிள்ளைகள் பெற்றும் அனைவருக்கும் சோறு ஊட்டி தாலாட்டி வளர்த்த நிலை இன்று ஒரே ஒரு பிள்ளை பெற்றும் இருப்பதில்லை.
இதற்கெல்லாம் என்ன காரணம்? வேகமாக நகரும் இந்த அவசர விஞ்ஞான உலகத்தில் தினம் ஒரு கவலை தினம் ஒரு பிரச்னை ஏதோ ஒரு ரூபத்தில் நமது வேகத்தை முடக்கி விடுகிறது. இந்த கவலைகளை நம் மனதிலேயே வைத்திருந்து திடீரென்று ஒரு நாள் வெடித்து விடுகிறோம். இதுதான் இன்று நடக்கிறது பெரும்பாலான வீடுகளில். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்த ஸ்ட்ரெஸ் பாதிப்பை அனுபவிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க என்றோ இழந்ததை எண்ணி எண்ணி மனதில் பாரங்களை சுமந்து கவலையில் ஆழ்ந்து தனது திறமைகளை வீணடிப்பவர்களும் உண்டு. இழந்தது மீண்டும் திரும்புமா?
'இழந்தவற்றைப் பற்றியது ஒன்றுமல்ல; இன்னும் என்ன கொண்டுள்ளீர்கள் என்பதுதான் முக்கியமானது' . சூசன் காலே எனும் தன்னம்பிக்கை பயிற்சியாளர் சொன்ன கருத்துபடி இன்னும் என்ன கொண்டுள்ளீர்கள் என்பதையே சிந்திக்க வேண்டும்.
நம் மனது ஒரு பலூன் என்று வைத்துக்கொள்வோம். பலூனை வைத்து விளையாடுவதுவரை விளையாடுவோம் சந்தோஷமான தருணங்களை ரசிக்கும் அதே பலூன் சோகமான நிகழ்வு என்றால் சுருங்கிவிடும். ஆனால் கவலை என்னும் காற்று கொண்டு அந்த பலூனை நிரப்பிக்கொண்டே இருந்தால் இறுதியில் என்ன நடக்கும் யோசித்துப் பாருங்கள். வெடித்து சிதறும்.
பலூனை ஊதிக்கொண்டே இருந்தால் பெரிதாகத்தானே செய்யும். பிரச்னைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் கவலைகள் தானே அதிகமாகும். இப்போது வேறு கோணத்தில் சிந்திப்போம். இப்போது உங்களால் பலூனின் கனத்தை தாங்க முடியவில்லை. உடனே இறக்கியே ஆகவேண்டும்.
காற்று உள்ள ஒரு மைதானம் தேடி ஊதிய பலூனை விட்டு விட்டால்? பலூன் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து போகும். நீங்களும் இலேசான மனதுடன் திரும்பலாம். ஆம் தோற்றுப்போன நினைவுகளை பலூன்போல பறக்கவிட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்கள் கவலைகள் எல்லாம் பறந்து போய்விடும்.
பிரச்னைகளும் சவால்களும் மனிதர்களுக்கு இயற்கை தரும் தேர்வு. இடையில் நீங்கள் பெற்ற அனுபவங்களை கொண்டு தேர்வில் பாஸ் மார்க் வாங்கும்போதுதான் வெற்றியின் முதல் அனுபவம் உங்களைத்தேடி வருகிறது. சவாலாகத் தெரியும் முதல் பிரச்னை போகப்போக புரிபட்டு எளிதான தீர்வு தரும்.
ஆகவே, இனி கவலை எழுந்தால் அதை மனபலூனில் அடைத்து வைக்காமல் வெளியே சுதந்திரமாக பறக்க விடுங்கள். நீங்களும் சுதந்திரமான வெற்றியை சுவாசிப்பீர்கள்.