
சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நாமாக இருக்க வேண்டும். அதற்கு உழைப்பு என்பது ஆணிவேராக இருப்பது அவசியம். ஒரு முன்னேற்றமும் இல்லாமல் வாழ்க்கை இப்படி பின்னோக்கி செல்கிறதே என்று மனம் தளராமல், பின்னோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்னோக்கி பாயும் என்பதை மறக்கவேண்டாம்.
வாழ்க்கைப்பாதை மிகவும் கடுமையானது என்று எண்ணாமல் பாதை குறித்த நம் பார்வையை மாற்றி யோசித்து முன்னேற முயலலாம். சரியான தருணத்திற்காக காத்திருக்காமல் நாமே தருணத்தை சரியானதாக மாற்ற உழைப்பின் மூலம் முயற்சித்தால் போதும்.
உழைப்பு உடலை வலிமையாக்கும். இளமையில் உழைப்பை விதைக்க முதுமையில் வெற்றியை அறுவடை செய்யலாம் என்பார்கள். எந்தவிதமான பிரச்னைகளுக்கும் நம்முடைய கடின உழைப்பு ஒன்று மட்டுமே தீர்வாக அமையும். மகத்தான செயல்களை செய்து சாதிக்க விரும்பினால் அதற்கு உழைப்பு ஒன்று மட்டுமே மூலதனமாகும். பிறர் மீது நம்பிக்கை வைப்பதை விட நம் உழைப்பில் நம்பிக்கை வைத்தால் பதவியும் அதிகாரமும் தானாகவே வந்து சேரும். அடிமையைப்போல் உழைப்பவன் அரசனைப்போல் வாழ்வான் என்ற பழமொழியே உண்டு.
உழைப்பிற்கு என்றுமே தகுந்த மரியாதையும் பெருமையும் உண்டு. துருப்பிடித்து தேய்வதை விட உழைத்து தேய்வது மேலானது என்று சுவாமி விவேகானந்தர் அவர்கள் கூறியுள்ளார். வாழ்வு உழைப்பினால் ஆனது. வாழ்க்கையின் இயல்பே உழைப்புதான். வாழ்நாளின் குறிக்கோள் இன்னதென்று நிர்ணயம் செய்து கொண்டு உறுதியுடன் தொடர்ந்து உழைக்க வாழ்வில் உன்னத நிலையை அடைய முடியும். உழைக்காது வாழ்பவர்கள், பிறர் உழைப்பை திருடுபவர்கள் பிறருக்கு சுமையாக இருக்கிறார்கள்.
ஆழ்கடலின் மேல் புல் பூண்டுகள் மிதக்கும். செத்தைகள் மிதக்கும். ஆனால் முத்துக்கள் ஆழத்தில்தான் கிடைக்கும். முத்தை விரும்புபவர்கள் ஆழ்கடலில் மூச்சடைக்கி மூழ்கித்தான் முத்தை எடுக்க வேண்டும். அதுபோல் வாழ்க்கையில் வெற்றியை விரும்புபவர்கள் கடுமையாக உழைக்கத்தான் வேண்டும்.
உழைப்பும் சுறுசுறுப்பும் இணையானவை. சுறுசுறுப்பு இருப்பின் அது உழைப்பைத் தூண்டும். சாதிக்க வைக்கும். உழைப்பில் இரண்டு வகை உண்டு. அறிவு உழைப்பு, மற்றொன்று உடல் உழைப்பு. இரண்டு உழைப்புகளிலுமே உயர்ந்தது தாழ்ந்தது என்பது எதுவும் கிடையாது.
அறிவைக் கொண்டு உழைத்து முன்னேறுவதும், உடலை வருத்திக் கொண்டு முன்னேறுவதும் என இரண்டுமே போற்றப்படுபவைதான். மதிக்கப்படுபவைதான். அறிவு உழைப்பும் உடல் உழைப்பும் இணைந்து செயல்பட்டால்தான் நாடு வளரும். எனவே இதில் ஒன்றை ஒன்று தாழ்த்துவதோ உயர்த்துவதோ தவறு. சிலர் அதிர்ஷ்டத்தை நம்பி உழைப்பை கைவிடுகின்றனர். இது முற்றிலும் தவறு. அதிர்ஷ்டத்திற்கே உழைப்புதான் நுழைவாயில் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
உழைப்பு என்பது தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். கற்பனைத் திறனைக் கொண்டு புதுமையான சிந்தனைகளை புகுத்தி சமூக அக்கறையுடன் உழைப்பை வெளிப்படுத்த நாமும் உயரலாம் நம் நாடும் உயரும். உழைப்பின் வேர்கள் கசப்பானவை. ஆனால் அதன் கனிகளோ இனிப்பானவை. மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும்
உழைப்பு நம் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் நம் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும்.