
வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல மனிதர்களைப் பற்றிய புத்தகங்களைப் படித்துவிட்டேன். அவர்களை கவனித்து அவர்களைப் போலவே செயல்படுகிறேன். ஆனால் ஒரு பலனும் இல்லையே என்று சிலர் கூறுவதுண்டு. உங்களின் ஆசை உயர்ந்ததே உங்களுக்கு சச்சின் டெண்டுல்கர் போல் ஆகவேண்டும் என்ற ஆசையா?. இன்னொருவர் மாதிரி செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று யார் சொன்னது? உங்கள் திறமையை முழுமையாக எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்று பழகுவதுதானே முக்கியம்.
உங்கள் வாழ்க்கையை ஏன் அப்படி வீணடிக்கிறீர்கள். ஒருவர் தன் இரு நண்பர்களுடன் ரயில் நிலையம் வந்தார். மூவருக்கும் சேர்த்து ஒரே ஒரு பயணச்சீட்டு வாங்கினார். கிராமத்திலிருந்து வந்த மூவர் ஒரே டிக்கெட்டில் எப்படி 3 நபர்கள் பயணம் செய்ய முடியும் என்று பிரமித்து அவர்களையே கவனித்தனர்.
டிக்கெட் பரிசோதகர் வருவதைப் பார்த்ததும் டிக்கெட் வாங்கியவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரே டாய்லெட்டுக்குள் போய் ஒளிந்து. கொண்டனர். மற்றவர்களை பரிசோதித்த டிக்கெட் பரிசோதகர் டாய்லெட் கதவைத் தட்டி உள்ளே யார், டிக்கெட் ப்ளீஸ் என்றார். . வெளியில் ஒரு கை டிக்கெட்டுடன் நீண்டது அதை சரிபார்த்து அவர் போய்விட்டார். பிறகு மூவரும் வெளியே வந்து உட்கார்ந்தனர். கிராமவாசிகளுக்கு அவர்கள் தந்திரம் புரிந்துவிட்டது. "ஆஹா, இந்த ஐடியா பிரமாதமாக உள்ளதே" என நினைத்து ஊர் திரும்பும்போது மூவரும் ஒரே டிக்கெட் மட்டும் வாங்கினர்.
பின்னாலேயே கிராமவாசிகள் முன்பு சந்தித்த மூன்று நண்பர்களும் வந்தனர். ஆனால் அவர்கள் ஓரு டிக்கெட் கூட வாங்காமல் ரயில் ஏறுவதை கவனித்து கிராமவாசிகளுக்கு குழப்பமாகிவிட்டது. . டிக்கெட் பரிசோதகர் வருவதைப் பார்த்து மூன்று கிராமவாசிகளும் ஒரு டாய்லெட்டில் புகுந்து கொண்டனர். கிராமவாசிகள் சந்தித்த மூவரில், இருவர் எதிரில் இருந்த டாய்லெட்டில் புகுந்து கொண்டனர். ஒருவர் மட்டும் கிராமவாசிகள் இருந்த டாய்லெட்டைத்தட்டி டிக்கெட் ப்ளீஸ் என்று கேட்க டிக்கெட் பரிசோதகர் என நினைத்து ஒருகை டிக்கெட்டை நீட்ட வெளியே இருந்தவர் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு எதிரில் இருந்த அவருடைய இரு நண்பர்கள் புகுந்திருந்த டாய்லெட்டில் புகுந்துவிட்டார்.
அடுத்தவர்போல் செய்து பார்க்க நினைத்தால் இருந்ததையும் இழந்து நிற்கும் கிராமவாசிகள் கதிதான் நமக்கும் வந்து சேரும். இன்னொருவரை ஒப்பிட்டுக்காட்டி அவர் போல் இருக்கவேண்டும் என்று பெரியோர்களால் சொல்லப்பட்டு வளர்ந்தால் அது ஒரு விபரீதமான நோய்.
ஒரு ஜென்குரு இருந்தார். அவர் யார் என்ன கேள்வி கேட்டாலும் ஒற்றை விரலை நீட்டுவார். அதைப் பார்த்தாலே கேட்டவருக்கு பதில் கிடைத்துவிடும். இதைப் பார்த்த சீடன் ஒருவன் " அட, இவ்வளவுதான் விஷயமா" என்று அவரைப் போலவே விரலைக் காட்டத் துவங்கினான். ஒருநாள் தற்செயலாக அந்த ஜென் குருவே அவனிடம் கேள்வி கேட்டார். பழக்க தோஷத்தில் அவரிடம் ஒற்றை விரலை நீட்ட அந்த குரு அதை வெட்டித் தள்ளிவிட்டார் அவனுக்கு ஞானோதயம் கிடைத்துவிட்டது.
இத்தனை கோடி மனிதரில் ஒரு மனிதனுக்கு இருக்கும் திறமை இன்னொரு மனிதனுக்குக் கிடையாது. குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்ளும் முறை வேறு. வேறொருவர் புரிந்துகொள்ளும் முறை வேறு. வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை நமக்கு உந்து சக்தியாக மட்டுமே இருக்க முடியும. ஆனால் அதையே வெற்றியின் சூத்திரமாக எடுத்துக் கொள்ளப்பார்ப்பது முட்டாள்தனம். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், உங்கள் திறமை என்னவென்பதை அறிந்து அதை பட்டை தீட்டி முழுமையாக செயல்படுத்துங்கள்.