
நல்ல சிந்தனையை உருவாக்கக்கூடிய எழுத்தாளர்கள் இந்த நாட்டின் உயிர்மூச்சும், துடிப்பும் ஆகும். எழுத்தாளனாக சாதிக்க முடியாதது இந்த நாட்டில் ஒன்றுமில்லை.
'ஆயிரம் ஈட்டி முனைகளுக்குச் சமம் ஒரு பேனாவின் முனை என்றான் ஓர் அறிஞன்.
எத்தனை எத்தனையோ பேர் சாதிக்க முடியாத பெரும் காரியங்களையெல்லாம் வறுமையில் வாடிய ஏழை எழுத்தாளன் சாதித்திருக்கிறான் என்பது சரித்திர வரலாறு.
ஓர் எழுத்தாளனின் ஒவ்வொரு வாசகமும் முத்தாகவும் மணியாகவும் அமைந்து மக்களை நல்வழிப்படுத்தி தெளிந்து சிந்தனையளர்களாக ஆக்கவேண்டும்.
இன்றைய சமூகத்தில் ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாமல் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள யார் யாரிடமோ எந்தெந்த வழியிலோ சென்று பார்க்கிறான்; முடியவில்லை.
காரணம், யாரிடம் சிக்கலைத் தீர்த்துக் கொள்ளச் செல்கிறானோ அவரிடமே வேறு ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். அதனால் மேலும் சிக்கலுக்குள்ளாகி மனத்தைக் குழப்பிக்கொண்டு வாழ்க்கையை பெரும் பாரமாக நினைத்துக் கொள்கிறான். முடிவில் மனநோய்க்கு ஆளாகிவிடுகிறான்.
ஆகவே மனிதன் ஒவ்வொருவனும் ஏதோ ஒரு வகையில் மனநோயாளியாக, நடைப்பிணமாக இருந்து வருகிறான். இந்தப் பரிதாபத்திற்குண்டான நிலைமையை மாற்ற அவர்களுக்கு உங்களின் எழுத்து அருமருந்தாக அமையவேண்டும்.
ஆணாகட்டும், பெண்ணாகட்டும் பெரும்பாலும் படித்த இளைஞர்களும், மாணவ, மாணவிகளும் ஒருவித சலனத்திற்கும் மேலைநாட்டு மோகத்திற்கும் அடிமைப்பட்டு, காதல் போதையில் கட்டுத்தளர்ந்து தங்கள் வாழ்வையே நாசப்படுத்திக் கொள்வதும் அல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்வையும் அல்லவா சின்னா பின்னமாக்குகிறார்கள். இப்படிப்பட்ட இளைய தலைமுறைக்கும் மாணவர் உலகத்துக்கும் உங்களின் எழுத்து நம்பிக்கைஊட்டுவதாக அமையவேண்டும்.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டது. படித்த பல இளைஞர்கள் வேலைக்குப் பஞ்சாய் பறக்கின்றனர். திறமைக்கும், நேர்மைக்கும், வேலை கிடைப்பதில்லை.
இந்த நிலை தீரவேண்டுமானால் பட்டம் பெற்ற இளைஞர்கள் அரசாங்க வேலைதான் கிடைக்க வேண்டும் என்ற நிலைமையை மறந்து அதற்காக லஞ்சமாகத் தருகின்ற பணத்தை சிறுமூலதனமாக வைத்து சிறுதொழில் செய்ய முன்வர வேண்டும்.
இப்படிச் செய்வதால் நீங்கள் முதலாளியாக ஆகிவிடுவீர்கள்; வேலையில்லாத் திண்டாட்டம் விரைவில் தீரும்.
ஆனால், அரசாங்க வேலைக்குத்தான் செல்லவேண்டும் என்று இருந்தால் நிலத்தை விற்று, வீட்டை விற்று ஏன் உங்களையே சேர்த்து விற்று லஞ்சம் கொடுக்கிறாற்போல் ஆகும். இப்படிப்பட்ட அவலநிலை ஏற்படாமல் இருக்க சுயமாகத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காணுங்கள் என்று உங்களின் எழுத்து தெம்பூட்டுவதாக இருக்கவேண்டும்.
நீங்கள் கூறும் கருத்துக்கள் மக்கள் மனத்தில் பசுமரத்தாணி போல் நன்றாகப் பதியவேண்டும். உங்களின் சொற்களும், கருத்துக்களும் செறிவுடையதாகவும், வளமுடையதாகவும் இருக்க வேண்டும்.
உங்களின் சிந்தனையில் எழுகின்ற கருத்துக்கள் அனைத்தும் புரட்சிகரமானதாக இருக்கலாம்.
நீங்கள் சொல்லும் செய்திகள் நேர்மையாகவும், நேரடியாகவும் மக்களுக்குச் சேரக்கூடியதாக இருக்கவேண்டும்.
எழுத்துப் புரட்சி நாட்டில் எழுந்தால்தான் ஏற்றம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.