பிறப்பால் அனைவரும் சமம் என்பதே மனித குலத்தின் அடிப்படையான தத்துவம். ஆனால் உண்மையிலேயே மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறோமா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமான உண்மை. காட்டில் உள்ள விலங்குகளை போன்று ஒருவரை பார்த்து ஒருவர் அச்சப்படுதலும், அவர்களிடம் நம்முடைய இயல்பை மறைத்து வாழ்தலும், ஒருவருடைய குணாதிசயத்திற்கு ஏற்றார் போல் நம்மை மாற்றிக் கொள்ளுதலும் இப்படி பல்வேறு வகையாக ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தனித்துவத்தை இழந்து பொய்யான ஒரு போலி பிம்பங்களோடு வாழ்வின் பல சூழல்களில் வாழ்ந்து வருகிறோம்.
ஒவ்வொரு மனிதனும் தனக்குள் களையெடுக்க வேண்டிய எதிர்மறையான குணங்களில் மிடுக்கை பார்த்து மிரண்டு போகிற இந்த குணமும் ஒன்று. பகட்டான ஆடைகள், நுனி நாக்கில் ஆங்கிலம், ஆடம்பரமான வீடு, பெரிய கார், கம்பீரமான பதவி, செல்வாக்குள்ள சொந்த பந்தங்கள் இவற்றை எல்லாம் பார்க்கும்போது நம்மில் பலருக்கு தானாகவே தாழ்வு மனப்பான்மை தாவி வந்து மனதில் ஒட்டிக் கொள்கிறது. இப்படி பலவற்றை பார்த்து சில நேரங்களில் நம்மை உயர்த்தியும், பல நேரங்களில் நம்மை தாழ்த்தியும் நம்முடைய தனித்துவத்தை இழந்து விலங்குகளை விட ஒரு மோசமான சூழலை நமக்கு நாமே கட்டமைத்துக் கொள்கிறோம், என்பது நம்முடைய சமூகத்திற்கே உரிய ஒரு மிகப்பெரிய அவலம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் உண்மையிலேயே ஒரு மனிதனிடம் நட்பு பாராட்டுவதற்கும், அன்பை பரிமாறிக் கொள்வதற்கும் மனிதன் என்ற தகுதியைத் தவிர வேறு எந்த தலையாய தகுதியும் தேவையில்லை என்பதை நாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோம்? மனிதர்கள் என்பதற்கு நம்மிடையே இருக்கக்கூடிய உருவ ஒற்றுமையும், உன்னதமான உள் உணர்வுகளுமே போதுமானது. ஒருவருடைய ஆற்றலால், ஆடம்பரத்தால் ஏற்படுத்திக் கொண்ட எந்த ஒரு செல்வாக்கையும் பார்த்து அவர்களிடம் பழகாமல் இயல்பாக பழகுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது அவர்களுக்கு இருந்த கல்வியறிவை பார்த்து அவர்களை ராஜாக்கள் ஆக்கி நாமே மந்தைகளாகிப் போனோம். பின் மெல்ல சுய அறிவைப் பயன்படுத்தி பல்வேறு போராட்டங்களைத் தாண்டி நம்முடைய நாட்டை நாமே ஆளும் உரிமையை பெற்றோம். ஆனால் இப்பொழுதும் கூட நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோமோ என்று கேட்டால் பல்வேறு வகையான போலி புனைவுகளுக்கு மதிப்பளித்து நம்மை நாமே வாழ்வின் பல்வேறு தருணங்களில் தாழ்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் கசப்பான ஒரு உண்மையாகும்.
மாபெரும் புரட்சி கவிஞரான பாரதியார் தன்னுடைய கவிதைகளில் ஒன்றான நொண்டிச் சிந்து என்ற பகுதியில் பாரதிய ஜனங்களின் தற்கால நிலைமை என்ற பெயரில் நம்முடைய மனோபாவத்தை மிகவும் கடுமையாக சாடியிருப்பார்.
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.
மனித குலத்தில் களைந்தெடுக்க வேண்டிய களைகளில் ஒன்றாக பாரதியார் அடையாளம் காட்டிய மிடுக்கை கண்டு மிரளும் இந்த குணத்தை அவர் கடுமையாக சாடி 100 ஆண்டுகளை கடந்தபின்னும் கூட இன்றும் நம்மால் இந்த எதிர்மறையான குணத்தை கடந்து வர முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரும் அவலமே. அடிப்படை உரிமை, அடிப்படை கடமை என 1008 சட்ட திட்டங்கள் இருந்தாலும் கூட அடிப்படையான ஒரு நிலைப்பாட்டை நோக்கி நாம் எப்படி பயணிக்கப் போகிறோம் என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது?
ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த மிடுக்கை கண்டு மிரளும் குணத்தை மாற்றி அமைப்பது என்பது மனித குலத்தில் பல மகத்தான சாதனைகளை புரிவதற்கு நிச்சயம் ஒரு மாபெரும் அடித்தளமாக இருக்கும். அதற்கு மனிதர்களாகிய நாம் அனைவரும் மற்றவர்களிடம் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் பாராமல் பழகக் கூடிய மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த ஒன்றையும் மரியாதை, செல்வம், அதிகாரம் என்ற பெயரில் குழப்பிக் கொள்ளாமல் அதில் உள்ள நேர்மறையான பண்புகளையும், எதிர்மறையான பண்புகளையும் நன்கு பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.
"வெந்ததைத் தின்று விதிவந்தவுடன் சாவது அல்ல" மனித வாழ்க்கை, அதையும் தாண்டி நல்ல சமூக மாற்றங்களை நோக்கி ஒவ்வொரு நாளும் அடியெடுத்து வைப்பது தான் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள தலையாய கடமை என்பதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.