
பிறர் மீது நம்பிக்கை வைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சவாலான விஷயம் தான். ஆனால், அதே நேரம் எவர் மீதும் நம்பிக்கை இல்லாமலும் ஒருவர் வாழ்வதும் அவ்வளவு சுலபம் இல்லை. காலை எழுவதிலிருந்து இரவு நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது வரை நம்பிக்கை ஒருவருக்குள் இருந்தால் தான் மனிதனாக அடுத்தடுத்த நாட்களில் நிம்மதியாக செயல்பட முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கையை ஒருவர் மீது நாம் வைக்கப் போகிறோம் என்றால் என்னென்ன விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?
1. அவர்களின் வார்த்தைகள் செயல்களுடன் இணைக்கின்றன
பிறரின் மீது உருவாகும் நம்பகத்தன்மையின் மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்று அவர்கள் சொல்வதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் இடையிலான ஒற்றுமையே. வாக்குறுதிகளைப் பின்பற்றுபவர்கள், காலக்கெடு அல்லது உறுதிமொழிகளை மதிப்பவர்கள் என்று சிறிய விஷயங்களில்கூட அவர்களின் நம்பகத்தன்மையை நிரூபிப்பார்கள். இறுதியில் நாம் கவனிக்கும்போது அவர்களின் செயல்கள் அவர்களின் வார்த்தைகளுக்கு முரணாக இருக்காது.
2. அவர்கள் பேசுவதைவிட அதிகமாக கேட்பார்கள்
நீங்கள் உணர்ந்த அந்த நம்பகமான நபர் பிறரோடு இருக்கும் உரையாடல்களில் தேவையின்றி ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் பிறர் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். சிந்தனைமிக்க கேள்விகளையும் இடையில் கேட்பார்கள். இறுதியில் பிறரின் நிலையில் இருந்து யோசித்து பேசுவது போன்ற குணங்களும் வெளிப்படலாம்.
3. அவர்கள் பிறரின் எல்லைகளை மதிப்பார்கள் (Respect Boundaries)
அது தனிப்பட்ட இடமோ, ஒருவரின் ரகசியமோ என்று எதுவாக இருந்தாலும் பிறரின் எல்லைகளை (Boundary) மதிக்கும் நபர்கள் உங்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு மதிப்பதைக் காட்டுகிறார்கள். இந்தக் கட்டுப்பாடு ஒருமைப்பாட்டின் அமைதியான ஆனால் சக்திவாய்ந்த குறிகாட்டியாகும்.
அவர்களும் தவறுகளைச் செய்கிறார்கள்; யாரும் சரியானவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் தவறு செய்யும் போது அதை ஒப்புக்கொண்டு, உண்மையாக மன்னிப்புக் கேட்டு, தேவையான திருத்தங்களைச் செய்பவராக இருந்தால், அது அவர்களின் பொறுப்புணர்வை பறைசாற்றும். இதுவே, நமக்கு அவர்கள் மீது நம்பிக்கையை வளர்க்க வேண்டிய சரியான கட்டமாகும்.
4. அவர்கள் வெளிப்படையானவர்களா அல்லது ரகசியமானவர்களா?
நம்பகமான நபர்கள் தங்களின் தெளிவற்ற பதில்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளவோ அல்லது கேள்விகளைத் திசை திருப்பவோ மாட்டார்கள். அவர்கள் தங்கள் நோக்கங்கள், கடந்த கால அனுபவங்கள், அவர்களின் வரம்புகள் (Limitations) பற்றி வெளிப்படையாக இருப்பார்கள்.
இந்த வெளிப்படைத்தன்மை அவர்களின் மீது தெளிவை வளர்க்கிறது. இறுதியில் அவர்களை பற்றிய தவறான புரிதல் அல்லது அவர்களால் துரோகம் ஏற்படுமோ என்ற அபாயத்தையும் நமக்குள் குறைக்கிறது.
மேலே குறிப்பிட்டதையும் சேர்த்து ஒருவர் மீது நம்பிக்கையை வளர்க்க இதையும் தாண்டி பல விஷயங்கள் இருந்தாலும், இவை அனைத்தும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு ஒரு முடிவை தந்து விடாது.
ஒவ்வொரு நாளும் மேலே குறிப்பிட்ட விஷயங்களைச் சம்பந்தப்பட்ட நபர் எவ்வாறு கடந்து செல்கிறார் என்பதைக் கவனியுங்கள். இந்தப் பயிற்சி ஒரு வருடம் கூட போகலாம். இறுதியில் உங்களுக்குள் உருவாகியிருக்கும் அந்த அசைக்க முடியாத தெளிவே, நம்பிக்கையின் அடையாளமாகும்.