
இந்தியாவில் ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் மக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விடும். ஏன்னா ஒவ்வொரு மாதமும் புதுப்புது விதிமுறைகளை அரசு அமல்படுத்தி வருவதால் இந்த மாதம் எந்த மாதிரியான மாற்றங்கள் வரப்போகிறது, அதனால் மக்கள் தங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்திற்கு என்ன செலவுகள் வரப்போகிறது என்ற கவலை இப்போதே ஏற்படத்தொடங்கி விட்டது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 1-ம் தேதி) முதல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன. அவை குறித்து இங்கே பார்க்கலாம்...
வெள்ளிக்கு ஹால்மார்க் : உலகிலேயே இந்தியப் பெண்கள்தான் அதிக தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கி அணிகிறார்கள். தங்க நகைகளில் உள்ள ஹால்மார்க் தங்கத்தின் தூய்மையைப் பற்றி நமக்குச் சொல்லும். இப்போது, தங்கத்தைப் போலவே, வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க்கை கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசு இந்த நடைமுறை இன்று முதல் (செப்டம்பர் 1-ம்தேதி) வருவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த ஹால்மார்க் முத்திரை நீங்கள் வாங்கும் வெள்ளி பொருட்கள் எவ்வளவு தூய்மையானது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். வெள்ளியில் 6 இலக்க HUID ஹால்மார்க்கிங் பொருந்தும்.
சிலிண்டர் விலை : சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் கேஸ் சிலிண்டர். சிலிண்டரின் விலை ஏறும்போது அது சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும். மாதந்தோறும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும். கமர்சியல் சிலிண்டர் விலை(வணிக பயன்பாட்டு சிலிண்டர்) கடந்த மாதம் ரூ.1,823.50க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த நான்கு மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் வணிக LPG எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.51.50 குறைப்பதாக அறிவித்தன, புதிய விலையின்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் டெல்லியில் ரூ.1,580-க்கு விற்பனை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகும்.
வருமான வரி கணக்கு தாக்கல் : மாத சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரியை(ITR Filing Deadline) தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு செப்டம்பர் 15-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு இந்த மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளதால் காலம் தாழ்த்தாமல் விரைவில் வருமான வரியை தாக்கல் செய்வது சிறந்தது.
என்பிஎஸ் இருந்து யூபிஎஸ்க்கு மாற்றம் : மத்திய அரசு ஊழியர்கள் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து யூபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (Unified Pension Scheme - UPS) மாறுவதற்கான கடைசி தேதி இந்த மாதம் (செப்டம்பர்) 30-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த காலக்கொடு ஜூன் 30-ம்தேதி வரை என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வரும் (செப்டம்பர்)30-ம்தேதி வரை அதாவது கிட்டதட்ட 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
ஸ்பெஷல் பிக்ஸடு டெப்பாசிட் திட்டங்கள் (Special fixed deposit plans): ஐடிபிஐ மற்றும் இந்தியன் வங்கி வழங்கி வரும் சிறப்பு எஃப்டி திட்டங்களும் இந்த மாதத்துடன் (செப்டம்பர் 30-ம்தேதிக்குள்) முடிவடைய உள்ளது. எனவே இந்தியன் வங்கியின் சிறப்பு டெபாசிட் திட்டம் 444, மற்றும் 555 நாட்கள் எஃப்டி திட்டங்கள் மற்றும் ஐடிபிஐ வங்கியின் சிறப்பு டெபாசிட் திட்டம் 444, 555 மற்றும் 700 நாட்கள் திட்டங்களில் வரும் செப்டம்பர் 30க்குள் முதலீடு செய்ய வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் விரைவில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்த இரண்டு வங்கிகளும் கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டில் விதி மாற்றங்கள் (SBI Credit card new rule): இந்தியாவில் முன்னணி அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) இன்று முதல்(செப்டம்பர் 1-ம்தேதி ) வாடிக்கையாளர்களுக்கு திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் அறிவித்துள்ளது.
இந்த விதிமுறையின்படி ஆட்டோ-டெபிட் தோல்வியுற்றால் இனிமேல் 2% அபராதம் விதிக்கப்படும் என்றும் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. அதேபோல் எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தி டிஜிட்டல் கேமிங் தொடர்பான செலவுகளுக்கும் மற்றும் அரசாங்க வலைத்தள பரிவர்த்தனைகள் தொடர்பான செலவுகளுக்கும் (government website transactions) அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதே நேரத்தில், வெகுமதி புள்ளிகளின் (Reward Point)மதிப்பு குறைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. எனவே அபராதங்களைத் தவிர்க்க எஸ்பிஐ கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் செலவினங்களை கவனமாக கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க : மத்திய அரசு ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான இலவச வசதியை மூன்று மாதங்களுக்கு நீட்டித்திருந்த நிலையில் கடைசி காலக்கொடு வரும் 14-ம்தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக, அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான ஆவணங்களை யுஐடிஏஐ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனே உங்கள் ஆதார் கார்டை புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பதிவு தபால் சேவை விரைவு தபால் சேவையாக மாற்றம் : 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தபால் துறை வழங்கி வந்த பதிவு தபால் சேவையை இன்று (செப்டம்பர் 1-ம்தேதி) முதல் விரைவு தபால் (ஸ்பீட் போஸ்ட்)சேவையுடன் இணைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வசதியை அதிகரித்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.