
- அனிஷா வி. எஸ்.
இளைஞர்கள் எப்போதும் ஊக்கத்துடன் இருக்க பின்பற்ற வேண்டிய எளிய வழிகள்:
இன்றைய உலகம் கடுமையான போட்டிகள் நிறைந்ததாக இருக்கிறது. தொழில்நுட்பம், கணினி, மின்னணு, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற சமூகத்துறைகளில் இளைஞர்கள் பலவிதமான சாவல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில், வேலை, குடும்பம், படிப்பு, வாழ்க்கை இலக்கு ஆகியவற்றை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில், மனச்சோர்வும் ஊக்கக் குறைவும் இயல்பாக ஏற்படுகின்றன.
அதேசமயம், இளைஞர்கள் தங்களது இலக்கை எட்டுவதற்கான பயணத் தொடக்கத்தில் உற்சாகமாக இருந்தாலும், சிறிது காலத்திற்கு பிறகு ஊக்கம் குறைந்து காணப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றிகள் உடனடியாக கிடைத்திருக்காது. இதன் விளைவாக, தங்கள் லட்சிய கனவுகளை விட்டுவிடும் நிலை வரை சென்று மனசோர்வு அடைகின்றனர்.
ஆனால், ஒருவர் தங்களுக்கான ஊக்கத்தை வெளியிலிருந்து தேடாமல், தங்களுக்குள் இருந்தே வளர்க்க வேண்டும். அதன் வகையில், இன்றைய இளைஞர்கள் ஊக்கத்துடன் இருப்பதற்கான பயனுள்ள வழிமுறைகள் இங்கே காணலாம்.
கனவை உறுதிப்படுத்த வேண்டும்:
நம் கனவு ஏன் முக்கியம் என்பதை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அந்த 'ஏன்' என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நம் செயல்களை திட்டமிட வேண்டும். உங்கள் கனவுகளை தினமும் நினைவில் வைத்துக்கொண்டு உறுதியாக செயல்படுங்கள்
பெரிய இலக்குகளை சிறிய படிகளாக மாற்றுங்கள்:
உலகை வெல்வது உங்கள் கனவாக இருக்கலாம். ஆனால் அதற்கான பாதை சிறு சிறு முன்னேற்றங்களால் நிறைந்துள்ளது. உங்கள் இலக்கை அடைய திட்டமிட்டு, அதை சிறு படிகளாக பிரித்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு படியும் உங்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்.
நல்ல சூழலை உருவாக்குங்கள்:
நாம் யாருடன் இருக்கிறோம் என்பதிலும், எப்படி இருக்கிறோம் என்பதிலும் வித்தியாசம் ஏற்படும். உங்களை ஊக்குவிக்கும் நண்பர்கள், வழிகாட்டிகள், கனவுகளை மதிக்கும் குடும்ப உறுப்பினர்கள் போன்ற நல்ல சூழலை நம்மை சுற்றி உருவாக்கி கொள்வது முக்கியம்.
ஒவ்வொரு நாளையும் புதிதாக தொடங்குங்கள்:
நேற்று தோல்வியடைந்திருந்தாலும், இன்று ஒரு புதிய வாய்ப்பு என எண்ணி அந்த நாளை தொடங்க வேண்டும். கடந்ததை நினைத்து வருந்தாமல், இன்று செய்யக்கூடியதை சரியாக செய்துவிட வேண்டும்.
நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள்:
நேரம் மேலாண்மை, நல்ல பழக்கங்கள் மற்றும் திட்டமிடல் ஆகியவை செயல்திறனை உயர்த்தும்.
புதிய விஷயங்களை தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்:
கற்றல் என்பது ஒரு வாழ்நாள் பயணம். புதிய புத்தகம், ஆன்லைன் பாடம், நல்ல செய்திகளைப் பின்பற்றும் பழக்கம் இவை அனைத்தும் ஒருவரை சோர்வின்றி வைத்திருக்கும்.
வாழ்க்கையில் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நாட்கள் வெற்றியுடன் மகிழ்ச்சியாக இருக்கும்; சில நாட்கள் தோல்விகள் மற்றும் தடைகளை சந்திக்கும் சவாலான சூழலாக இருக்கும். ஆனால் அந்த சவால்களை தாண்டி செல்லும் மன நிலைதான் நம்மை வெற்றியை நோக்கி வழிநடத்துகிறது.
நமக்குள் நம்பிக்கையும், முயற்சியும் இருந்தால், ஊக்கம் எப்போதும் நம்மோடு பயணிக்கும்.