தயக்கமா...? மயக்கமா...? அதை தகர்ப்போமா...? தெளிவோமா?

தயக்கம் என்பது ஒரு தடை சுவர் தான்! அதை தாண்டி போக தயாராவோம்.
hesitation
hesitationimg credit - sanjeevdatta.com
Published on

நம் வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் இந்த தயக்கம் தடுப்பு சுவராக இருப்பதை மறுக்க முடியாது. வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடத்தில் இன்னும் எத்தனையோ இடங்களில் தயக்கம் தலை நீட்டுகிறது.

எதனால் இந்த தயக்கம் ஏற்படுகிறது?

நன்றாக படிக்கும் மாணவர் ஒருவர், வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும், நாம் சொல்லும் போது ஏதாவது தடுமாற்றம் ஏற்பட்டால் எல்லோரும் சிரிப்பார்களே? என்ற தயக்கத்தில் பதில் தெரியாதவர் போல அமைதியாக இருக்கிறார். அதற்காக ஆசிரியரிடம் திட்டும் வாங்குகிறார்.

ஒரு கல்லூரியில் வேலைக்கான நேர்முகத் தேர்வில் ஒரு விஷயத்தை சொல்லி அதை பற்றி விவாதிக்க சொல்கிறார்கள். அது அவர்கள் கல்லூரியில் படித்த பாடம்தான். அதில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவனும் கூட்டத்தில் இருந்தான். ஆனால் அது பற்றி உரையாடுவதில் அவனுக்கு தயக்கம் ஏற்பட்டது. மற்றவர்கள் தன்னைவிட அதிகம் அறிந்தவர்களாக இருந்தால், ஏதாவது கேட்டு விடுவார்களோ? இந்த யோசனையுடன் அமைதியாக இருந்தான்.

அவனைவிட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் விவேகமாய் பேசி சமாளித்தார்கள். அவர்களுக்கு கூட வேலை கிடைத்தது. ஆனால் இவனது தயக்கத்தால் தேர்வில் நிராகரிக்கப்பட்டான்.

தயக்கம் என்ற பண்பு ஒருவருக்குள் ஏன் எழுகிறது? சில பெற்றோர்கள், குழந்தைகளை, "வாயைத் திறக்காமல் சமர்த்தாக இரு! அப்போது தான் நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பாய்!" என்று சொல்லியே வளர்க்கிறார்கள். எதுவும் பேசாமல் இருப்பதுதான் நல்ல பழக்கம் என்று குழந்தை மனதில் எண்ணம் வலுக்கிறது. பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் உண்டாகி விடுகிறது.

ஆரவாரமும் மகிழ்ச்சியுமாக வளரும் குழந்தைகளை "சத்தம் போட்டால் தொலைத்து விடுவேன்" என்று பெற்றோரும், ஆசிரியர்களும் மிரட்டும் போது பயத்தால் அப்போதே தயக்கம் உருவாகிறது!

இதையும் படியுங்கள்:
தயக்கம் வருவது எதனால்? தயக்கத்தைப் போக்கும் வழிகள் இதோ!
hesitation

தங்கள் குறையை பிறர் சுட்டி காட்டும் போதும், பலர் முன்னிலையில் யாராவது கிண்டல் செய்யும்போதும், இந்த தயக்க உணர்வு பெருகிக்கொண்டே வருகிறது. இறுதியில் அதுவே தாழ்வு மனப்பான்மையாக உருவெடுக்கிறது!

தயங்கித் தயங்கிப் பேசும் மனிதர்களும் அடிப்படையில், அளவற்ற ஆசைகளும், குறிக்கோள்களும் கொண்டவர்கள் தான். தம்முடைய கூச்ச சுபாவத்தினால் அத்தனையும் கட்டி போடுகிறார்கள். இதனால் இவர்கள் மனதிற்குள் பெரும் போராட்டமே நிகழ்கிறது!

கூட்டமாக இருக்கும் ஒரு இடத்தில் பலருக்கு மத்தியில் இருக்கும்போது இவர்கள் பதட்டமடைகிறார்கள். பொது இடங்களில் செயல்படும் போது தடுமாறுகிறார்கள். பேச நினைத்ததை பேச முடியாமல் நாக்கு குழறுகிறார்கள். இதனால் பெரும்பாலும் தனித்து வாழ்வதை விரும்புகிறார்கள். சில விஷயங்களையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். திறமைகள் இருந்தும் தோல்வியாளர் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
தயக்கம் இன்றி பழகுங்கள் வெற்றி நிச்சயம்!
hesitation

இது போன்ற தயக்கம் கொண்டவர்கள் பலரை பல இடங்களில் பார்க்கிறோம். நம் கஷ்டத்தை இவரிடம் சொன்னால் தப்பாக நினைப்பார்களோ ? பிரச்சனையை மனதிற்குள் பூட்டி வைத்து ஆறுதல் தேடாமல் மருகுவார்கள். இவரிடம் இந்த உதவியை கேட்டால் செய்யாமல் மறுத்து விடுவாரோ? என்ற தயக்கத்தில் கேட்கவே மாட்டார்கள். ஒருவேளை கேட்டு இருந்தால் அது எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை எனக்கு தெரியவில்லை? என்று சொன்னால் அறிவு குறைந்தவன் என நினைப்பார்களோ? என்று தெரியாத விஷயத்தை தெரிந்தது மாதிரி நடிப்பவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் கடைசி வரை கற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

துணிச்சலால் தயக்கத்தை கடந்து வருவதுதான் இந்த அடையாளத்தை தவிர்ப்பதற்கான ஒரே வழி!

எந்த சூழல், அல்லது எந்த விஷயம், உங்களுக்கு தயக்கத்தையும் பயத்தையும் தருகிறதோ, அதில் இருந்து விலகி போகாதீர்கள். அதை முடிந்த அளவிற்கு எதிர்கொண்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்!

'நம் தயக்கத்தினால் பல நல்ல விஷயங்களை இழக்கிறோம்' என்பதை உணர வேண்டும். ஒரு விஷயம் தெரியவில்லையா? 'நமக்கு தெரியவில்லை, என்று சொல்வதற்கு தயக்கமோ, வெட்கமோ வேண்டாம்.

தயக்கத்தினால் நட்பை இழப்போம். பல நல்ல வாய்ப்புகளை பறிகொடுப்போம்.

தயக்கத்தை வளர்த்து, வளர்த்து நல்ல குடும்ப சூழ்நிலையை குழப்பமானதாக மாற்ற வேண்டாம்.

தயக்கம் என்பது ஒரு தடை சுவர் தான். அதை தாண்டி போக தயாராவோம்!

தயக்கத்தை உடைத்து தவிர்ப்போம்... இதிலிருந்து விடுபட்டு மயக்கம் தெளிவோம்!

துணிச்சலுடன் தயாராவோம் ! எதிலும் வெற்றி அடைவோம் !

இதையும் படியுங்கள்:
தயக்கம் எனும் தடை கற்களைத் தாண்டி... வெற்றியை நிலைநாட்டுவது எப்படி?
hesitation

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com