
மகிழ்ச்சி என்பது மனத்தின் ஒரு நிலை. மகிழ்ச்சியை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் நம்மிடமே உள்ளது. இது மிகவும் எளிமையான ஒன்றாக தோன்றக்கூடும். அதை எளிதாக்குவது நம் மனதில்தான் இருக்கிறது. மகிழ்ச்சியான பாதை எத்தனை எளிமையானது. வாழ்வில் மாபெரும் விஷயங்கள் அனைத்தும் எளிமையானவை, ஆற்றல் வாய்ந்தவை, படைப்பாற்றல் மிக்கவை, அவை நலத்தையும், மகிழ்ச்சியையும் உருவாக்குகின்றன.
மகிழ்ச்சியை சிந்தனையின் மூலம் உருவாக்குவது
ஆற்றல் வாய்ந்த சக்தியும், மகிழ்ச்சியும், நிறைந்த வாழ்க்கையை நம் சிந்தனையின் மூலம் உருவாக்குவதை புனிதர் பால் வெளிப்படுத்தும் வார்த்தைகள் என்னவென்றால் உண்மையுள்ளவைகள், ஒழுக்கம் உள்ளவைகள், நீதியுள்ளவைகள், கற்புள்ளவைகள், அன்பு உள்ளவைகள், நற்கீர்த்தியுள்ள வைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்து கொண்டிருந்தால் மனமானது எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
மகிழ்ச்சியை தேர்ந்தெடுக்க
காலையில் கண் விழித்ததும், இன்றும் என்றும் தெய்வீக ஒழுங்கு என் வாழ்வை இயக்குகிறது. இன்று அனைத்தும் என் நன்மைக்காக இணைந்து செயலாற்றுகின்றன. எனக்கு இன்று ஒரு புதிய, அற்புதமான நாள். நாள் முழுதும் நான் தெய்வீகமாக வழிநடத்தப் படுகிறேன். நான் மேற்கொள்ளும் அனைத்தும் செழிப்புறும். தெய்வீக அன்பு என்னைச் சூழ்ந்துள்ளது என்று மனதிற்குள் சொல்லிக் கொள்ளவேண்டும்.
மேலும், ஆக்கபூர்வமான விஷயங்களிலிருந்து நம் கவனம் திசை மாறும்போது உடனே அதைத் திசை திருப்பி நல்ல அன்பான விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இன்று நான் மேற்கொள்ளும் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவேன். நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்க போகிறேன். என்று ஒவ்வொரு நாளையும் துவங்க வேண்டும்.
“ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனது எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது”. என்று மாபெரும் ரோமானியத் தத்துவ வியலாளரும், ஞானியுமான மார்க்கஸ் ஆரிலியஸ் கூறினார். எதிர்மறையான எண்ணங்கள், தோல்வி சார்ந்த எண்ணங்கள் அல்லது கருணையற்ற, மனத்தைச் சோர்வுறச் செய்யும் எண்ணங்கள் ஆகியவற்றில் எப்போதும் பங்கு கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மனம்போன போக்கில் எதையும் செய்ய முடியாது என்பதை மனதிற்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும்.
உண்மையான மகிழ்ச்சி எது
உண்மையான மகிழ்ச்சி என்பது ஒரு மனபோக்கு, ஒரு ஆன்மீக நிலை, ஒரு பதவி உயர்வோ, அல்லது வெளியில் இருந்து கிடைக்கும் கௌரவமோ மகிழ்ச்சியை தராது. மனதில் பதிந்துள்ள தெய்வீக உணர்வையும், சரியான நடவடிக்கையையும், கண்டறிந்து அக்கொள்கைகளை நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் நடைமுறை படுத்துவதில்தான் நம் வலிமையும், பேரானந்தமும், மகிழ்ச்சியும் அடங்கியுள்ளன.
அதிக மகிழ்ச்சியானவர்கள்
தனக்குள் இருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொணர்ந்து நிரந்தரமாக அதை கடைபிடிப்பவர்தான் அதிக மகிழ்ச்சியானவர். மகிழ்ச்சியும், நற்பண்பும் ஒன்றை ஒன்று முழுமைப்படுத்துகின்றன. மிகச் சிறந்தவர்கள் வெறும் மகிழ்ச்சியானவர்களாக மட்டும் இருப்பதில்லை, அவர்கள் வாழ்க்கை கலையிலும் வெற்றிகரமாக திகழ்கின்றனர்.
அமைதியான மனதிற்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு வழி என்னவென்றால் காலையில் எழுந்தவுடனும், இரவு தூங்கப்போகும் போதும் நமக்கு சொந்தமான பொருட்களைக் கணக்கெடுக்காமல், அவை அனைத்தையும் கடவுள் தந்த பரிசாக நினைத்து கடவுளுக்கு அற்பணித்து விடுவது நல்லது.