
'அவருக்கென்ன நல்ல திறமைசாலி. எடுத்ததெல்லாம் வெற்றிதான். நாமெல்லாம் அவரைப்போல செயல்பட முடியாது' என்று குறிப்பிட்ட சிலரைப் பற்றி பலர் பொதுவெளியில் பேசுவது உண்டு. உண்மையில் திறமைசாலிகள் என்பவர்கள் தனித்த அடையாளத்துடன் திகழ்பவர்கள்தான். ஆனால் ஒரு சிலரால் மட்டும்தான் திறமைசாலிகளாக மிளிர முடியும் என்பது உண்மை அல்ல.
சிறப்பாக செயல்புரியும் மனிதர்களை திறமைசாலிகள் என்கிறோம். திறமை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே உதித்தானதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் உலகில் திறமைசாலிகள் ஒருவகை என்றால் தனது திறமையை வெளிப்படுத்தாத அல்லது உபயோகித்துக் கொள்ளாத மனிதர்கள் இரண்டாவது வகை.
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது தனித்திறமை நிச்சயமாக இருக்கும். ஒன்றுக்கும் உதவாத மனிதன் என்று யாரும் இவ்வுலகில் இல்லை. சரியாக மதிப்பெண்கள் வாங்காத குழந்தைகளுக்கு கூட படம் வரைதல் பாடுதல் விளையாட்டு என்று ஏதாவது ஒன்றில் திறமை இருக்கும். இன்னும் சிலருக்கு பலவிதமான திறமைகள் இருக்கும் ஆனால் அவற்றை பயன் படுத்தாமல் இருப்பதால் அவை வெளிப்படாமலேயே போய் திறமைசாலிகளாக அவர்கள் மிளிர முடியாமல் போகிறது.
திறமை இருந்தும் வெற்றிபெற முடியாததன் காரணங்கள்:
பயம்:
சில மனிதர்களுக்கு நிறைய திறமைகள் இருக்கும். அவர்களால் வாழ்வில் வெற்றி பெறவும் புகழ் அடையவோ முடியாததற்கான காரணங்கள் உண்டு. தன்னுடைய திறமையை வெளிக்காட்டாமல் அதாவது அதை உபயோகப்படுத்தாமல் வீணடிப்பதன் முதல் காரணம் பயம்தான். ஒரு முயற்சியில் இறங்கி தோல்வி அடைந்து விடுவோமோ என்று அச்சப்பட்டு கொண்டு அந்த செயலை செய்ய முடியாமல் போய் திறமைசாலிகள் சிலர் முடங்கி விடுகிறார்கள். ஒரு வேலையை ஆரம்பிக்காமலேயே அதை முடிவுக்கு கொண்டு வருவதில் சமத்தர்கள் இவர்கள்.
சோம்பேறித்தனம்:
சோம்பேறித்தனம் காரணமாக செயலில் இறங்க மாட்டார்கள் சிலர். சோம்பல் பட்டுக்கொண்டு அந்த வேலையை தள்ளிப் போட்டுக் கொண்டே திறமையையும் வீணடித்து நேரத்தையும் காலத்தையும் வீணடித்துக் கொண்டு இருப்பவர்கள் பலர் உண்டு.
தன்னம்பிக்கையின்மை:
மூன்றாவது காரணம் தன்னம்பிக்கை இல்லாதது. திறமை இருந்தும் தைரியம் இருந்தும் தான் இதில் தோற்று விடுவோமோ, நம்மால் ஜெயிக்க முடியாது என்று நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களால் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாது.
அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள்:
நல்ல திறமை இருந்தும் சரியான நேரம் காலம் அமையவேண்டும், அதிர்ஷ்டம் இருந்தால் தான் எதுவும் ஒர்க் அவுட் ஆகும் என மூடத்தானமாக நினைப்பவர் பலருண்டு. வெற்றி என்பதற்கு புகழ் பெற்ற மேதைகள் சொல்லும் ஃபார்முலா என்ன தெரியுமா? 99% உழைப்பு, 1% அதிர்ஷ்டம் என்பதுதான்.
உண்மையான திறமைசாலி:
என்னதான் திறமைகள் இருந்தாலும் தான் ஒரு புதிய விஷயத்தை அல்லது ஆசைப்பட்ட செயலை இலக்கை அடைவதற்கு பல்வேறு தடைகளும் சிக்கல்களும் ஏற்படலாம். போராடித்தான் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதில் தோல்விகள் வந்தாலும் மீண்டு வரலாம் என்கிற நேர்மறை எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுகிறான். மீண்டும் மீண்டும் முயற்சிக்க அவன் தயங்குவதே இல்லை. ஆகவே வெறும் திறமை மட்டும் ஒருவருக்கு வெற்றியைத் தேடித்தந்து விடாது. மேலே குறிப்பிட்ட பண்புகளுடன் முயற்சித்தால்தான் இலக்கை அடைய முடியும். அதுவே உண்மையான திறமைசாலியின் அடையாளம் ஆகும்.