ஆயிரம் சதுர அடி வீடே இருந்தாலும்... நாம் வாழும் 'அந்த' நிரந்தர இடம் எது தெரியுமா?

எப்போதும் மனதோடு மௌனமாக உறவாடும் நாம் மட்டும்தான் நம் எண்ணங்களை அலசி ஆராய்ந்து, தேவையற்ற குப்பைகளை அகற்றி, அதைச் சுத்தமாக வைத்திருக்க முடியும்.
Permanent address - How to clean your mind
Permanent address - How to clean your mindAI Image
Updated on

காலை நடைபயிற்சியின் போது கடற்கரையில் ஒருவரை சந்திக்கிறீர்கள். அவர் உங்களிடம், உங்கள் இருப்பிடம் என்ன, எங்கே வசிக்கிறீர்கள் என்றால் உடனே பெருமையாக, “நான் இங்கே தான் அடையாறில். கஸ்தூரிபாய் நகரில் வசிக்கிறேன்.”

அல்லது

“நானா? இங்கே சாஸ்திரி நகரில் ஒரு பெரிய கேட்டட் கம்யூனிட்டி இருக்கிறதே? அதிலேயே நீச்சல் குளம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், லைப்ரரி எல்லாம் இருக்கிறதே? அங்கே தான் வசிக்கிறேன்.”

அல்லது

“இந்திரா நகரில் எனக்கு ஒரு பங்களா இருக்கிறது. அதில் வசிக்கிறேன். நடைபயிற்சிக்காக தினமும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வருகிறேன்”என்றெல்லாம் பதில் சொல்லுவோம்.

Mind
MindAI Image

ஆனால் உண்மை அதுவல்ல என்று தெரியுமா உங்களுக்கு? எவ்வளவு பெரிய பங்களாவோ, கேட்டட் கம்யூனிட்டியோ நமது விலாசமாக இருந்தாலும், அது நமது உண்மையான உறைவிடம் அல்ல என்ற நிதர்சனம் நமக்கு உறைக்கும்போது அந்த உண்மை நம்மை கன்னத்தில் வந்து அறையும்.

நாம் சில வேலைகளுக்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது நமது நிரந்தர விலாசம், தற்காலிக விலாசம் என்று கேட்பார்கள். அதில் நாம் இப்போது வசிக்கும் சென்னை விலாசத்தை தற்காலிக விலாசம் என்றும் சொந்த ஊர் விலாசம் ஒன்றை நம்முடைய நிரந்தர விலாசம் என்றும் குறிப்பிடுவோம். ஆனால் நம்முடைய நிரந்தர விலாசம் என்ன தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

“நாம் உண்மையாக வசிப்பது நமது மனதில் தான்! அது தான் நமது நிரந்தரமான விலாசம்”!

ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்!

“எங்கள் பிளாட் இரண்டாயிரம் சதுர அடி!” என்று சொல்லிக்கொள்கிறோமே, நம் வீட்டைப் பற்றி. அதுபோல நம் மனதின் விஸ்தீரணத்தை நம்மால் அளக்க முடியுமா?

‘அடேயப்பா!’ வாமன அவதார பெருமாளைப் போல மனது ஆதிகால பாதாளம் வரை பாயும். அதேபோல நேரே மேலே சென்று பிரபஞ்சத்தின் உச்சியை தொட முடியுமா என்றும் பார்த்து வரும்.

இதையும் படியுங்கள்:
மனச் சுமையை இறக்கி வைக்க ஓர் எளிய பயிற்சி: கலங்கிய குட்டை தரும் பாடம்!
Permanent address - How to clean your mind

ஒன்று தெரியுமா? நீங்க என்ன தான் உங்கள் நாலு படுக்கையறை கொண்ட குடித்தன வீட்டை பார்த்து பார்த்து சீர் செய்து அலங்கரித்து சுத்தமாக வைத்து கொண்டாலும், நமது வாழ்க்கை சீராக அமைய நமது மனதை சீரமைப்பது, சுத்தமாக வைப்பது மிக மிக முக்கியம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனதிற்குள் தான் நாம் பல்வேறு விஷயங்களை வருஷக் கணக்கில் குப்பையாக சேர்த்து வைத்து கொண்டு மிகவும் சீர்கேடான நிலையில் அலங்கோலமாக வைத்திருக்கிறோம். மனதின் ஒரு மூலையில் பார்த்தோமானால் நாம் சேர்த்து வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள், அந்த எதிர்பார்ப்புகள் சரிவர நிறைவேறாததால் மனதின் மற்றொரு மூலையில் குவிந்து கிடக்கும் வருத்தங்கள். இதெல்லாம் போதாதென்று மனதிற்குள் ஒரு கார்ப்பெட்டை விரித்து அதற்கடியில் நாம் ஒளித்து வைத்து காப்பாற்றி வரும் ரகசிய கோபதாபங்கள், ஏக்கங்கள், எப்போதும் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்த்து சேர்த்து வைத்திருக்கும் மனக்குறைகள், அதனால் ஏற்படும் பகைமை, பொறாமை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் கலவைகள்! அப்பப்பா! மலைத்து போகிறது! எத்தனையெத்தனை குப்பைகள்? அப்படியே விட்டால் கறை படிந்து நாற்றமெடுக்க ஆரம்பித்து விடாதோ? இவையெல்லாம் நம் வாழ்க்கையின் அவலங்கள் தானே?

இதையும் படியுங்கள்:
மனம் எனும் பெர்முடா முக்கோணம்: மாயைகளை முறியடிக்கும் மந்திரம்!
Permanent address - How to clean your mind

யோசித்து பாருங்கள். வீட்டை சுத்தம் செய்ய என்ன செய்வோம்? ஆட்களை கூப்பிட்டு வந்து கூலி கொடுத்து, வீடு முழுக்க ஒட்டடை அடித்து, கறை நீக்க ‘வேனிஷையும், நாற்றம் நீங்க ‘பிளீச்சிங் பவுடரையும்’ போட சொல்லுவோம். ஆனால் மனதை சுத்திகரிக்கும் வேலைக்கு எந்த ஆளை கூப்பிட்டு கொண்டு வர முடியும்?

நீங்கள் கவனித்து பார்த்தீர்களானால், நாம் எப்போதும் மனதோடு தான் உறவாடிக் கொண்டிருப்போம். மௌனமாக பேசி கொண்டிருப்போம்.

அப்போ நாம் தானே அவ்வப்போது மனதில் அலைபாயும் எண்ணங்களை அலசி ஆராய்ந்து, நாம் நிம்மதியாக வாழ எது சரி, எது தப்பு என்று சீர் தூக்கி பார்த்து நம் எண்ணங்களை சீரமைத்து, தேவையில்லாத எண்ணங்கள் உள்ளே கறைகளாக படியாமல், நாற்றமெடுக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்?

நம் மனதை சுத்தம் செய்வது நம்முடைய வேலை மட்டும் தானே?

நாம் மட்டும் தானே அந்த வேலையை செய்ய முடியும்?

அந்த சுத்தத்திற்கு பொறுப்பாளியும் நாம் மட்டும் தானே?

ஏனென்றால் நம் மனம் தானே நமது நிரந்த வசிப்பிடம்?

logo
Kalki Online
kalkionline.com