மனம் எனும் பெர்முடா முக்கோணம்: மாயைகளை முறியடிக்கும் மந்திரம்!

Mind - Bermuda Triangle
Mind - Bermuda Triangle
Published on

நாம் பெர்முடா முக்கோணம் பற்றி சரித்திரத்தில் படித்திருப்போம். நம் மனமே ஒரு முக்கோணமாக செயல்படுகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா?

எதை எடுத்தாலும், எதைப் பார்த்தாலும் எதை செய்வதற்கு முன்பும் நாம் கெட்டதே நடக்கப் போவதாக எண்ணி நம் சிந்தனையை குழப்பும் குட்டையாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இதற்கான காரணத்தை ஆராயும் போது சில வெளிப்படையான உண்மைகள் நமக்கு புரிய வருகிறது.

அந்த உண்மைகள்...

ஏன் நாம் சிந்திக்கிறோம்?

நம் சிந்தனை என்பது நம்மை செழுமைப் படுத்துவதற்கா? அல்லது வருமை / இன்மை படுத்துவதற்காக?

மனதில் நம்பிக்கை என்பது ஒரு தெளிந்த நீரோடையாக இல்லாமல் சலனப்பட்டு சாக்கடையாக மாறுவதற்கு என்ன காரணம்?

பயம்?

பயம் ஏன் வருகிறது?

எங்கிருந்து வருகிறது?

எதனால் வருகிறது?

எப்படி வருகிறது?

****************

Yuval Noah harari தன்னுடைய மாபெரும் படைப்பான மனித இனத்தின் வரலாறு ஒரு பார்வை என்கிற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்...

"மனிதர்கள் இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட பிறகு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் எப்போதுமே சவால்களை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது.

அந்த இன்னல்கள் முதலில் மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அச்சம் வர காரணம்!

இரண்டாவது காரணம் உண்ண உணவு?

அதற்கான போராட்டம்!

இப்படியே அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்ததால் அது மனித இனத்தின் ஒரு கூராகவே நம்முடைய மரபு அணுக்களில் பல படிமங்களாக படிந்து அதைப் போக்கிக் கொள்ளவே அவன் தன்னுடைய பழக்கங்களில் மாறுதல்கள் உண்டு பண்ண சில சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் தனக்குத் தானாகவே ஏற்படுத்திக் கொண்டான்.

மனிதனுடைய மனமானது எப்போதும் நேர்மறையில் இருந்து எதிர்மறைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பெர்முடா முக்கோணம்.

இந்த மாய முக்கோணத்தில் மனமானது மாட்டிக்கொண்டு தவிக்கிறது.

முதலில் இந்த பெர்முடா முக்கோணம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

பெர்முடா முக்கோணம் என்பது வடக்கு அட்லாண்டிக் கடலின் ஒரு சிறப்பான முக்கோண வடிவப் பகுதி. இதில் மூன்று முக்கிய புள்ளிகளாக பொதுவாக புளோரிடா தீபகற்பம், பெர்முடா தீவு மற்றும் போர்ட்டோ ரிக்கோ அல்லது பஹாமாஸ் போன்ற பகுதிகள் கருதப்படுகின்றன.

இந்தப் பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் சில சமயங்களில் திடீரென காணாமல் போவதாகவே பல இடங்களில் எழுதப்பட்டு, பேசப்பட்டு வருகிறது.

இதனால் இது 'சாத்தானின் முக்கோணம்' என்ற பெயருடன் பயம்‑கலந்த கதைகளுக்கு இடம் தந்துள்ளது.

இத்தனை கதைகளுக்கு பின்னால் உண்மையில் மர்மம் எதுவும் இல்லை என்பதை அறிவுகள் அமைப்புகள் நிராகரித்துள்ளன.

கடும் காற்று, சூறாவளிகள், கப்பல்/விமான செயல்பாடுகளில் ஏற்படும் தவறுகள், கடும் கடல் சீற்றங்கல் மற்றும் சூழ்நிலைகள் போன்ற சாதாரண இயற்பியல் காரணங்களால்தான் இந்த விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்."

*************

இதை எளிதாக புரிய வைக்க வேண்டுமானால் நான் இவ்வாறாக சொல்லி என் கருத்தை பதிவிடுகிறேன்...

இங்கே கடும் காற்று சூறாவளி என்பது நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் கப்பல்கள் மற்றும் விமானங்கள். காணாமல் போவதாக கூறப்படும் கூற்றுகள் நம் மனதினுடைய பயத்தினுடைய விளைவுகள். இந்த மனதை நாம் சிந்தனை செறிவின் மூலமும் , அறிவின் ஆற்றல் மூலமும், செழுமைப்படுத்தி, மனதில் சிறுமைகளை, போக்கிக் கொள்ள வேண்டும்.

மனம் என்பது மாமருந்து!?

அதனை அளவுக்கு அதிகமாக சிந்தித்து செயலிழக்க செய்வது அறிவீனத்தின் உச்சம்!

மாறாக அதை மாற்று சிந்தனைகள் மூலம் திருப்பி விடுவதன் மூலம் நாம் நம் மீதும், நம் ஆற்றலின் மீதும் நம்பிக்கை எனும் விதையை விதைக்க முடியும்.

கண்ணதாசன் எழுதிய காதல் காவியமே இதற்கு சாட்சி...

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

ஆழ்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்...

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம்...

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி

இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்

காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com