
கெஞ்சி கேட்டு பெரும் அன்பையும், மரியாதையையும் விட நம்மை அலட்சியப்படுத்தும் நபரை விட்டு ஒதுங்கி செல்வதே நல்லது. ஒருவர் நம்மை அலட்சியப் படுத்துகிறார் என்று தெரிந்தால் அவரை விட்டு விலகிப் போவது நல்லது. நம் மீது எந்த தவறும் இல்லாத சமயத்தில் அலட்சியப்படுத்தும் நபர்களைக் கண்டு நாம் ஒன்றும் வருந்தத் தேவையில்லை. நெருங்கிய உறவினராகவோ, நட்பாகவோ யாராக இருந்தாலும் அவருடன் எந்தவிதமான வாக்குவாதமும் செய்யாமல் ஒதுங்கிவிட்டால் பாதி பிரச்னை சரியாகிவிடும். "மௌனம் சர்வார்த்த சாதகம்" என்பார்கள்.
சில நேரங்களில் மௌனமாக இருப்பதே நாம் அவர்களுக்குத் தரும் மிகச்சிறந்த தண்டனையாகும். கெஞ்சி கேட்டு பெறுவதில்லை அன்பும், மரியாதையும். எனவே அது இல்லாத இடத்தில் ஒதுங்கி இருப்பதே நமக்கு நல்லது. குறிப்பாக பணியிடங்களில் நம்மை வேண்டுமென்றே அலட்சியப்படுத்துபவர்களை விட்டு தள்ளி நிற்பதே நல்லது.
இம்மாதிரியான மனிதர்களை நாமும் ஒதுக்கி வைக்க கற்றுக் கொண்டால் நாம் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கலாம். நம்மை அலட்சியப்படுத்துபவர்களுக்கும் அவர்களின் தவறை உணர வைக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். நம்மை அலட்சியப்படுத்துவதன் மூலம் நாம் அடையும் வேதனையைக் கண்டு சந்தோஷப்படுபவராக இருந்தால் அவரை விட்டு விலகி விடுவதே நல்லது.
ஒருவேளை நீங்கள் அவர்களின் கவனத்திற்கு ஏங்குவதாக இருந்தால் அவர் ஏன் நம்மை அலட்சியப்படுத்துகிறார் என்பதை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். சரியான காரணம் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால் இனி அவர்களைப்பற்றி நினைப்பதையோ, ஏங்குவதையோ விட்டுவிடலாம்.
அலட்சியப்படுத்தும் நபர்களுக்கு ஒருவேளை நாம் தேவைப்படாத ஆளாக இருக்கலாம். எனவே அவர்களை எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, இனி அவர் நம்முடன் நட்பு கொள்ள தகுதியற்றவர் என்றெண்ணி ஒதுங்கி விடுதல் அவசியம். நாமும் அவர்களை சட்டை செய்யவில்லை என்பதை சிறுசிறு அலட்சியங்கள் மூலம் உணர வைக்கலாம். ஏதோ ஒரு காரணத்தினால் அவருக்கு நம்மை பிடிக்காமல் போய் இருக்கலாம். அதற்கான காரணத்தை சுட்டிக்காட்டியிருந்தால் நம்மால் அதை சரிசெய்து கொண்டிருக்க முடியும். அதை விடுத்து அன்பில்லாத அலட்சியப்போக்கு முறையை தேர்ந்தெடுத்தது அவர்கள் தவறு. எனவே நாம் மன வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நம் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு நம்மால் ஏதும் செய்ய இயலவில்லையே என்ற எண்ணத்தினாலும் சிலர் அலட்சியப்படுத்தலாம். இது ஒரு விதத்தில் நமக்கு அவர்கள் அறியாமலே செய்யும் உதவி என்றே கொள்ளலாம். இதன் மூலம் நாம் நம் வளர்ச்சியில் அதிக முயற்சி எடுத்து மேலும் வளர உதவும். ஒருவேளை நம் உணர்வுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர் களாகவும், அக்கறை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். அவர்களே வந்து உங்களை தங்கள் தேவைக்கு எதிர்கொள்ளும் சமயம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி அவர்களுக்கு உதவி செய்துவிட்டு நகர்ந்து விடுங்கள்.
இதுதான் நம்மை அலட்சியப்படுத்துபவர்களை கையாளும் வழி. இதன் மூலம் அவர்களே படிப்படியாக மனம் மாறி நம் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு அவர்களின் அலட்சியப் போக்கு மாற வழிவகுக்கும்.
அலட்சியப்படுத்தும் நபர்களை திரும்பத் திரும்ப தேடிச்சென்று மேலும் அவமானப்பட வேண்டாம். அவர்களை இனி சந்திக்காமல் இருப்பதே நல்லது. அவர் உங்களுடன் நட்பு கொள்ள தகுதியற்றவர். உங்கள் வாழ்க்கையில் இனி அவருக்கு இடமே இல்லை என்றெண்ணி அவர்களைப் பற்றி சிந்திக்காமல் உங்கள் வாழ்க்கையை தொடர முயற்சி செய்யுங்கள். வேண்டுமென்றே நம்மை அலட்சியப்படுத்தும் நபர்களை அமைதியாக கடந்து வந்து விடுங்கள். காலம் அவர்களுக்கு பதில் கூறும். நம் அருமை தெரியும் பொழுது தானாகவே நம்மைத் தேடிவருவார்கள்.
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடுவோம்!