
ஒருவர் நம்மை விரும்புகிறாரா அல்லது வெறுக்கிறாரா என்பதை அவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும் விதத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். நம்மை எப்போது பார்த்தாலும் வலிய வந்து பேசுபவர்கள் நம்மை கண்டதும் காணாததுபோல் சென்று விடுவார்கள். நாமே அவர்களிடம் சென்று பேசினாலும் அதை விரும்பாமல் ஒதுங்கி சென்று விடுவார்கள். நான்கு பேர் இருக்கும் இடத்தில் மற்றவரிடம் விழுந்து விழுந்து பேசுபவர்கள் நம்மை வேண்டுமென்றே ஒதுக்கி விடுவார்கள். கண்டு கொள்ள மாட்டார்கள்.
நாம் செய்கின்ற ஒவ்வொரு சிறு தவறையும் கூட ஊதி பெரிதாக்கி பேசுவார்கள். நம்மை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஒரு ஜென்ம விரோதிபோல் நம்மை நடத்துவார்கள். என் மேல் எதாவது தவறு உள்ளதா என்று நாமே வலிய சென்று கேட்டால் கூட முகம் கொடுத்து பேச மாட்டார்கள். நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு ஏளனம் தெரியும்.
நாம் வருகிறோம் என்று தெரிந்தால் வீட்டில் இருக்காமல் எங்கேயாவது வெளியில் சென்று விடுவார்கள். நண்பர்கள் வட்டத்தில் இருந்தால் நம்மைக் கண்டதும் மெள்ள நழுவி விடுவார்கள். நேரில் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் பிறகு பேசுகிறேன் என்று கூறுவார்கள். இப்படி நம்மை புறக்கணிப்பவர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுவது நல்லது.
முகம் கொடுத்து பேசமாட்டார்கள். உங்களைப் பற்றி யாராவது பெருமையாக பேசினால் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பதுடன் உங்களைப் பற்றி தவறாகவும் பேசுவார்கள். நம்மை பார்க்கும் பார்வையே கடுகடுவென முறைப்பாக இருக்கும். உங்கள் போன் கால்களை எடுக்க மாட்டார்கள் சில சமயம் பிளாக் கூட செய்து விடுவார்கள். பாடி லாங்குவேஜ் மூலம் அவர்களுடைய வெறுப்பை காட்டுவார்கள்.
இரண்டு நாட்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்பவர் களிடம் பேசாமல் இருந்து பாருங்கள். உங்களை விரும்புவர்களாகவோ, மிகவும் மதிப்பவர்களாகவோ இருந்தால் ஃபோன் போட்டு விசாரிப்பார்கள். அதுவே உங்களை வெறுப்பவர்களாக இருந்தால் ஏன் பேசவில்லை என்று விசாரிக்க மாட்டார்கள். நம்மை பெரிதாக கண்டு கொள்ளவும் மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நான் விலகி இருப்பதே நல்லது.
ஒருவருக்கான ஆசைகள் நிராசைகளாகும் போதும், அவர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை உருவாக்கி கொள்ளும் போதும் மனக்கசப்புகள் உருவாகி நாளடைவில் அது வெறுப்பு என்ற தவிர்க்க முடியாத உணர்வாக மாறி சுயநலமாக தனது ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் மட்டுமே கருத்தில் கொள்வார்கள். இப்படி நம்மை வெறுப்பவர்களிடமிருந்து விலகிக் கொள்வதே நமக்கு நல்லது.
நம்மை வெறுப்பவர்களிடமிருந்து விலகி இருக்க பழகுவோமா நண்பர்களே!