
உலகத்தில் பலரும் மகிழ்ச்சியற்று இருப்பதற்குக் காரணம் அவர்களுடைய வறுமை அல்ல. சிலருக்கு வசதிகள் வரவேற்புக் கம்பளம் விரித்து வைத்திருப்பதும் உண்டு. மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கும் சிலருக்கு பணமோ பங்களாவோ இல்லாமல் காணமுடியும். அடுத்தவேளை சாப்பாட்டிற்குக் கூட உத்தரவாதம் இன்றியும் அவர்களின் மகிழ்ச்சி குறைவதில்லை. மனதில் எந்த பாரமும் இல்லாதவராக இருந்தாலே மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.
நாம் எல்லோரும் எப்போதோ நமக்கு நிகழ்ந்த அவமானத்தையோ அவலத்தையோ தேக்கி வைத்திருப்பதால்தான் சுகமாக வாழ முடியவில்லை என்பதை உணரவேண்டும். எனக்கும் ஒரு வாய்ப்பு வரும். அப்போது பார்த்துக்கொள்கிறேன் என்று நம் வன்மத்தை சாம்பிராணி நெருப்பாக ஊதி ஊதி பெரிதாக்கும் நம்முடைய தன் முனைப்பே நம் உயிரைக் குடிக்கும் ஊழித்தீயாகிறது.
நம் பழிவாங்கும் எண்ணங்கள் எடை தாங்காமல் நம்மையே புரட்டிவிடும்போது ஏற்படும் பிரளயமே நம் அழிவை ஆரம்பித்து வைக்கிறது. வன்மம் இதயத்துள் கடுகு விதையாக நுழைந்து கல்மரமாக ஆகிறது. கணக்கு தீர்க்கும் வரை களைப்பு தீராது என்று காயங்களை அடைகாப்பவர்களுக்கு எத்தனை சொர்க்கபுரி கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைய முடியாது.
நம்முடைய தேவைகளை நிறைவுகொண்டால் மட்டுமே மகிழ்ச்சி என்று மனிதன் வாழும்வரை பழிவாங்கும் வழிகளை சிந்திக்கவே இல்லை. ஒவ்வொரு வன்ம எண்ணமும் நம் ஆக்கபூர்வமான சிந்தனையை இடித்துத் தள்ளிவிட்டுதான் உயரத்தொடங்குகிறது. இதனால் நம் ஆற்றல் விரயமாகிறது. மனிதனின் வாழ்நாள் ஒரு குறுங்கவிதையைப்போல் முடிந்துவிடக்கூடியது. அதில் இனிய சந்தங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தால் வாசிப்பு பேரின்ப மாக இருக்கும். ஒரு மனிதனுடைய பழிவாங்கும் உணர்வால் உலகமே துன்பப்பட்ட நிகழ்வுகள் உண்டு.
ஜப்பானில் அணுகுண்டு வீசிய இடங்களில் முளைக்கும் நாற்றுக்கள் இன்றும் கருகிதான் காட்சியளிக்கின்றன பழிவாங்கும் உணர்வு நம் புலன்களையே புறக்கணிக்கப் செய்கிறது. அகங்காரமும், ஆணவமும் மோர்கடையத் திரளும் வெண்னையாக உருவாகின்றன. மகிழ்ச்சி என்பது எல்லா புலன்களையும் ஒரே புள்ளியில் தாளகதியுடன் இயக்கச் செய்வதுதான். முதுகில் பிள்ளைப்பூச்சி ஊறும்போது இனிய சங்கீதத்தை ரசிக்க முடியாது. சாப்பிடும்போது கல் மாட்டிக் கொண்டால் சாம்பார் ருசிக்காது. துர்நாற்றம் வீசும் இடத்தில் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட முடியாது.
மனம் மகிழ்ச்சியாக இருந்தால் தயிர்சாதம் கூட வயிற்றைக் குளிர்விக்கும். இனிய நினைவுகளே நம்முடைய வாழ்வை இன்பமயமாக்கும். ஒரு சின்ன பயிற்சி போதும். நம் அத்தனை கசடுகளையும் நீக்க முடியும். ஒரு வெள்ளைத் தாளில் நம்மை அவமானப்படுத்தியவர்கள் பெயரையெல்லாம் வரிசையாக எழுதலாம். அதற்குப் பிறகு அவர்கள் எப்படி தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அந்த தண்டனையையும் பெயருக்கு நேரே எழுதலாம்.
பிறகு அவர்கள் நமக்குச் செய்த நன்மைகளை அந்தப் பெயருக்கு நேரே எழுதவேண்டும். நாம் பழகிய தருணங்கள், பகிர்ந்த நிகழ்வுகள், அனைத்தையும் யோசித்தால் நாம் எவ்வளவு மோசமான தீர்ப்பை அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம் என்பது புரியும்.
நமக்கு எந்த நன்மையும் செய்யாதவர்கள், நம் வாழ்வோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் செய்த அவமானத்தைப் பொருட்படுத்தத் தேவையில்லை. நன்மை செய்திருந்தால், அதன் முன் அவர்கள் இழைத்த அவமானம் ஒன்றும் பெரிதல்ல. மேலாண்மையில் ஒரு வாதம் உண்டு. லாபம் அதிகரிக்க வருமானம் அதிகரிக்க வேண்டும். அது இயலாவிட்டால் செலவாவது குறையவேணடும். மகிழ்ச்சிக்கும் சமன்பாடு உண்டு. அது அதிகரிக்க கொண்டாட்டம் கூட வேண்டும். அது முடியாவிட்டால் துன்பமாவது குறைய வேண்டும்.