
உலகே மாயம், வாழ்வே மாயம், என்ற ஒரு பாடல், அதுபோல எல்லாம் இன்பமயம், என்ற நிலைமாறி பொய் மயமாகிவிட்டது.
இது மேலும் மேலும், விஸ்வரூபம் எடுத்து வருவது கண்டு அச்சப்படவேண்டியதாகவே உள்ளது.
அதேபோல ஒரு கவிஞர் "ஓஹோ ஹோகோ" மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று என வரும். அதுபோல இந்த உலகில் பொய், பொய், பொய், எங்கும் பிரகாசமாய் வியாபித்து வருவதும் வேதனைதான். பொய் சொல்ல வேண்டியதுதான் அதற்கு சில காரணகாாியங்கள் உண்டு.
அதற்காக பொய்யையே வாழ்வின் ஒரு அங்கமாக்கிவிடக்கூடாதே!
அதுதான் இன்றைய உலகில் கொடிகட்டிப்பறக்கிறது.
கடைக்கு பழம் வாங்கப்போனால் கெமிக்கல் கலக்காத பழம் என வியாபாாி கூசாமல் பொய் சொல்கிறாா். நல்ல குடும்பங்க, பொண்ணு தங்கமுங்க, குடும்ப பொறுப்பு அதிகம், அதோட அப்பா அம்மா ரொம்ப கண்ணியமானவங்க, தரகர் வாங்கிய தொகைக்கு பங்கம் இல்லாமல் பேசிவிட்டாா்.
பையன் நல்ல கெட்டிக்காரங்க தப்பான பழக்கவழக்கம் எதுவும் இல்லீங்க, குடிப்பழக்கமே தொியாதுங்க, அங்கேயும் நம்ம கதாநாயகர் பொய்யானவர் புகுந்து விளையாடுவதும் இயல்பே.
நான் மேலே பேசிவிட்டேன் வேலை உங்க பையனுக்குத்தான், என்ன பணம் கொஞ்சம் கூடுதலாக செலவாகும் அங்கேயும் பொய் நீக்கமற நிறைந்துவிட்டதே!
இந்த மாதிாி பிளாட் எங்கேயும் கிடைக்காதுங்க, இருபது அடியில தண்ணீா் கொட்டுங்க, மழைநீரே தேங்காதுங்க, நல்ல இயற்கையான காற்று வசதிங்க, அங்கேயும் பொய் மூட்டை மூட்டையாய் குவிந்து கிடக்கிறது. இதெல்லாம் ஒரு சாம்பிள்தான். பொய்களின் நடமாட்டம் எங்கெல்லாமோ புகுந்து கிடக்கிறது.
இப்படி தினம் தினம் பொய்யில்தான் நாம் உலா வரவேண்டிய சூழல்.
சாாி நீங்க போன்செய்யும்போது குளித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு விதமானபொய். நீங்க கடனாகக்கேட்ட பணம் இரண்டுநாளில் கிடைத்துவிடும்.
நம்ம கடையில எல்லா ஸ்வீட்ஸ்களும் ஒாிஜனல் நெய்யில செஞ்சதுங்க எவ்வளவு தேன் ஒழுகும் வாா்த்தையானது, வந்து மாயாஜாலம் காட்டுகிறது. ஸ்வீட்ஸ் பூராவும் அவ்வப்போது freshஆ போட்டதுங்க, ஸ்பெஷலாக செஞ்சதுங்க, இவைகளையெல்லாம் ஸ்டால்ல அழகா அடுக்கவே மாஸ்டருக்கு ஆறுநாள் தாங்க ஆச்சு.
நகைகள் எல்லாம் ஒரிஜனல் தங்கம்தாங்க,கலப்படமே கிடையாதுங்க. மருத்துவமனைகளில், பொய் மருந்துகளில் பொய், ஜாதகம் பாா்த்தால் அதிலேயும் சில பொய், இப்படி எத்தனை எத்தனை பொய். கத்தரிக்காய்ல பூச்சியே கிடையாதுங்க, கசக்காதுங்க இப்படி சொல்லிமாளாது, சொல்லில் அடங்காத பொய்களோடு நாம் உலாவருகிறோம். நிலவுபோல உன் முகம், நீதான் என் இதயம் கவர்ந்தவள், காதலியிடம் காதலனின் பொய்யுறை பாடபுத்தக நோட்ஸ்போல.
இப்படி பொய்யிலேயேதான் வாழவேண்டுமா? உண்மையே இருக்காதா. உலகநாடுகளில் கடன் வாங்குவதுபோல உண்மையை கடன் வாங்க வேண்டியுள்ளதே!
காலம் கலிகாலம், கலி முத்திபோய்விட்டது, இனிமேல் இப்படித்தான் என நம்மை நாமே தேற்றிக்கொண்டு வாழ்வதில் அர்த்தம் ஏதுமில்லையே!
"உண்மையிலேயே உண்மை பேசுவோம்" அதுதான் நமது சந்ததிகளுக்கும், ஏன் நிஜமான வாழ்க்கைக்கும், நல்லது.
பொய்யுறை தேவையில்லை உண்மை கசக்கும், கசப்பும் வாழ்க்கைக்கு தேவைதான். பொய்யை விலக்குவோம் உண்மையை பகிா்வோம்!