
மனித மனம் உண்மையிலேயே விசித்திரமானது. சந்தோஷமும், உற்சாகமும் பொங்கும் வேளையில் நம்மை கையில் பிடிக்க முடியாது. அதுவே விரக்தி என்று வந்துவிட்டால் ஒரு குண்டூசி அளவு துன்பம் கூட பெரிய மலையாக கண் முன் தோன்றி நம்மை மலைக்க வைத்து விடும். கடல்போல் பரந்த மனதிற்குள் கடல் அலைகள் போல் எந்த திசையில் இருந்து எந்த புயல் கிளம்பும் என்று தெரியாமல் திடீரென்று அமைதி குலைந்து விரக்தி ஏற்படும்.
மனம் நிலை கொள்ளாது இங்கும் அங்கும் அலைபாய்ந்து வாழ்வே வெறுத்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். விபரீதமான யோசனைகளும், வெறுப்பும் தோன்றும். திரும்பவும் மனதை பழைய நிலைக்கு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பெரும்பாடுபட வேண்டி இருக்கும்.
உண்மையில் விரக்தி என்பது நம்பிக்கை இழந்த நிலையாகும். ஒருவர் மீதோ அல்லது ஒன்றின் மேலோ உள்ள நம்பிக்கை தளர்ந்து விடும் பொழுது ஏற்படும் உணர்வுதான் விரக்தி நிலை. இந்த விரக்தியின் ஊற்று எதிர்பார்ப்பு. விரக்தியை எதிர்பார்ப்பிற்கும், யதார்த்தத்திற்கும் இடையே ஏற்படும் இடைவெளி என்று கூட சொல்லலாம்.
நாம் ஒன்றை கடைசிவரை நம்முடன் வரும் என்று எதிர்பார்த்து இருப்பதும், ஆனால் ஏதோ ஒரு சமயத்தில் அது நம்மை விட்டு விலகுவதும் ஏற்படும்பொழுது நம் எதிர்பார்ப்புக்கு முரணாக யதார்த்தம் நிகழ்வதால் நம்மை விரக்தி தொற்றிக் கொள்கிறது.
நிராகரிக்கப்படுவதும், நம்பியவர்கள் கைவிடுவதும், அவமானப்படுத்துவதும் நிகழும்பொழுது விரக்தி மனப்பான்மை ஏற்படுகிறது. சிலர் குறுக்கு வழியில் இந்த மனப்பான்மையை போக்குவதாக எண்ணி இணையதளத்தில் நிறைய நேரத்தை செலவிடுவதும், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும், தேவையில்லாமல் பொருள்களை வாங்கி குவிப்பதும், பிறரை பற்றி புரளி பேசுவதும் என விரக்தி நிலையை கடக்க எண்ணுகிறார்கள். இவை சில நிமிடங்கள் மட்டுமே நலம் தரும். இவற்றை விடுத்து எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பெறவேண்டும்.
இந்த விரக்தி மனப்பான்மையை போக்க தியானம், நல்ல புத்தகங்கள் படிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பது, பயணம் செய்வது என்று மனதை வேறு ஒரு செயலில் ஈடுபாடு கொள்ளச்செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இல்லையெனில் பயமும், விபரீதமான கற்பனைகளும் சேர்ந்து மனதை ஆட்டிப்படைத்து நம் மனஅமைதியை குறைத்து விரக்தி நிலைக்கு கொண்டு சென்றுவிடும். இம்மாதிரி விரக்தி ஏற்படும் சமயங்களில் தனித்திருப்பதை தவிர்த்து விடுதல் நல்லது. நண்பர்களுடன் சேர்ந்தோ அல்லது ஒரு குழுவுடன் சேர்ந்தோ பொதுப்பணிகள் செய்வது நம் மனநிலையை மாற்ற உதவும். நம்மை ஆசுவாசப்படுத்த உதவும்.
விரக்தி மனப்பான்மையானது நம்மை தனிமையை நாடுவதில் ஆர்வம் உள்ளவராக போக்குகாட்டி, நம்முடைய துணிவையும், தைரியத்தையும் கெடுத்து எதற்கும் பயனற்றவர்களாக ஆக்கிவிடும். எனவே சுறுசுறுப்பாகவும், விடாமுயற்சியுடனும், எதிலும் ஒரு நிதானமான போக்கையும் கடைப்பிடித்து இந்த விரக்தி மனப்பான்மையிலிருந்து வெளிவந்து விடவேண்டும். இல்லையெனில் நம்மை முடக்கிப் போட்டுவிடும்.
இந்த மனப்பான்மை முன்பெல்லாம் வயதானவர் களையும், நோயாளிகளையும் பற்றியிருந்தது போய் இப்பொழுது இளைஞர்களையும் தாக்குகிறது. நல்ல வேலை கிடைக்கவில்லையா, நல்ல சம்பளம் இல்லையா, சரியான துணை அமையவில்லையா, எதற்கும் விரக்தி நிலை அடைந்து வாழ்வே வெறுத்து விட்டதுபோல் உணர்ந்து சோம்பி திரிவார்கள். இந்தப் போக்கு சரியானதல்ல.
எந்திரத்தனமான வாழ்க்கைக்கு பழகிப்போன உள்ளங்கள் சின்ன சின்ன ஆசைகளும் நிறைவேறாத நேரங்களில் கோபமும் விரக்தியும் அடைவது இயல்பானது தான். ஆனால் அதிலேயே மூழ்கி விடாமல், மனம் தளர்ந்து விடாமல் இருக்க பயிற்சியும் செய்ய வேண்டும். தியானம் பழகுவதும், நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பதும், நல்ல நட்பு வட்டங்களை உருவாக்கிக் கொள்வதும் விரக்தி மனப்பான்மையை விரட்டி அடித்துவிடும்.
இழந்த பொருட்களை மீட்டு விடலாம். ஆனால் இடிந்த மனத்தை நம்மால் மீட்பது சிரமம். எனவே மனதை எக்காரணம் கொண்டும் தளர்வுறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அன்பே சிவம் என்பது போல் அனைவருடனும் அன்புடன் பழகுவது மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.
மாதம் ஒருமுறை அருகில் உள்ள சிறந்த இடங்களை சென்று பார்ப்பதும், திறந்த வெளியில் காலாற நடப்பதும், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சியை செய்வதும், வாழ்வில் அவ்வப்பொழுது நடக்கும் சின்னஞ்சிறு மகிழ்ச்சி நிறைந்த சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதும், நமக்கு பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு செயலை ஏற்படுத்திக் கொள்வதும் நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.