

அனைவருக்கும் நினைவாற்றல் மிக அவசியமான ஒன்று. அதிலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்த பாடங்களை நினைவுபடுத்தி தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டி இருக்கிறது. சில மாணவர்களுக்கு திறமை அதிகமாக இருந்தாலும் நினைவாற்றல் குறைவாக இருக்கும். பரிட்சை நேரத்தில் அந்த மூன்று மணிநேரம் தான் அவர்களுக்கு சவாலான நேரம். அந்த நேரத்தில் தன்னுடைய முழு திறமையையும் எழுத்தில் கொண்டுவர முடியாமல் தோல்வியுறுவது உண்டு.
பெரியவர்களுக்கும் பல வேளைகளில் கொடுத்த கடன் மறப்பதில்லை. ஆனால் வாங்கியது மறந்துவிடுகிறது. திருப்பிக் கொடுக்க முன்வராமல் மறந்துவிட்டது என மூளை மீது பழியை போட்டுவிடுவது உண்டு. ஆனால் மூளை ஒருமுறை பெற்ற சமிக்ஞைகளை முழுவதுமாக அழித்துவிடுவதில்லை என்பது அறிவியல் உண்மை. மனிதனின் மூளை பல சிறு பகுதிகளைக் கொண்டது.
கம்ப்யூட்டரில் சமிஞைகள் பல பைட்டுகளாக சேமித்து வைக்கப்படுவதுபோல் மூளையின் பகுதிகளும் தூண்டல்களை சேமித்து வைக்கின்றனவாம். மீண்டும் தேவைப்படும்பொழுது அனைத்தும் நினைவிற்கு கொண்டு வரப்படுகின்றன என்கின்றனர். அப்படி நினைவாற்றலை அதிகரிக்க நாம் என்ன செய்யலாம்.
சிந்து பைரவி படத்தில் சிந்துக்கு பாட்டு சொல்லித் தருவதற்காக எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவருக்குத் துணி காயவைப்பது, சமையல் அறையில் வேலை இருப்பது போன்றவை தான் நினைவிற்கு வரும். தவிர பாட்டு கற்கும் ஆர்வம் இருக்காது. அதற்குக் காரணம் மூளையில் தினசரி செய்யும் வேலைகளை படிய வைத்திருப்பதுதான்.
அதுபோல் மனதில் பதியாத பாடங்களை தொடர்ந்து சில நாட்களுக்கு சொல்லிக்கொண்டே வந்தால் அது ஆழமாக மனதில் பதிந்துவிடும். அப்படி ஆழமாக பதிந்தது மறக்காததாக ஆகிவிடும்.
கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி வேரிலிங்க் மனிதனின் அபார நினைவாற்றலுக்கு காரணம் பற்றி ஆராய்ந்து பொழுது மூளையில் உள்ள கால்பெய்ன் என்ற நொதியே நீண்ட காலம் நினைவாற்றலுக்கு காரணமாக இருக்கிறது என்று கண்டறிந்தார்.
நாம் ஒரு பொருளை பார்க்கும் போதும் கேட்கும்போது ஏற்படுகின்ற உணர்ச்சிகளை மூளை பெற்றவுடன் அங்குள்ள புரதபொருட்கள் சிதைவடைகின்றன. இதனால் உண்டாகும் வேதிவினை புதுப்புது தொடர்புகளையும் இணைப்புகளையும் ஏற்படுத்துகிறது. இதற்கு மூல காரணமாக அமைவது கால் பெய்ன்தான். இந்த கால்பெய்ன் சமையலிலும் கூட உதவி புரிகிறது.
அதனால்தான் கணக்குகளை தவறாகப் போடும் மாணவர்களை ஆசிரியரும் பெற்றோரும் வெண்டைக்காய் சாப்பிடு என்று கூறுவார்கள். அப்படி கூறுவதன் காரணம் வெண்டைக்காயில் கால்பெய்னை ஊக்குவிக்கும் மூலப் பொருள் இருப்பது இதற்கு முக்கியமான காரணம்.
வேரிலிங்க் எலியின் மூளையில் உள்ள இந்நொதியை ஊக்குவித்த பொழுது அதன் நினைவாற்றலில் மாறுபாடு ஏற்படுவதை கண்டறிந்து, மனிதனின் மூளையிலும் இந்நொதியை ஊக்குவிப்பதன் மூலம் அவனுடைய நினைவாற்றலை மாற்றி அமைக்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நினைவாற்றல் மனிதனின் மனநிலை, சூழ்நிலை, உண்ணும் உணவு ஆகியவற்றையும் பொறுத்தது. ஆதலால் ஒரு மனிதன் ஒரு மனநிலையில் ஆழ்ந்து அமர்ந்து படிப்பது, அந்த இடத்தின் தன்மை படிக்கும்போது நடந்த சூழ்நிலை இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டால் படித்தது மறக்காது என்பது தெளிவு. முக்கியமாக உண்ணும் உணவு மூளையில் பெரிய மாற்றத்தை உண்டாக்குவதால், அதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இவற்றினால் எதையும் மறக்காமல் செய்ய முடியும் என்பது தெள்ளத்தெளிவாக அறிய முடிகிறது. இவ்வாறு மனிதனின் நினைவாற்றலை மாற்றி அமைக்க முடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.