

கடலில் உப்பாக இருக்கும் கடல்நீர்தான், வான் செல்லும்போது, நன்நீர் கருமேகங்களாக உருமாற்றம் அடைந்து பூமிக்கும், அதில் உயிர் வாழும் எல்லாவற்றுக்கும் வாழ்வாதாரமாக பயன் தருகிறது. பாறையாக இருக்கும் கல் தான் தெய்வச்சிலையாக மாறி, கோயில் கருவறை சன்னதியில் அமர்ந்து, நாம் வணங்கிப் போற்றி வழிபடும் தெய்வமாக உருமாற்றம் அடைகிறது. இப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் அமைய, வழிவகுத்து பயன் அடைய முயலுங்கள்.
எப்படி என்றால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளிகளும், அறிவால், அன்பால், பண்பால், நேர்மையால், உழைப்பால் உங்களை நீங்களே செதுக்கி, உயர்ந்த உள்ளமாக, ஒழுக்க சீலர்களாக, உயர்ந்த நிலையில், உயர்ந்த மனிதனாக உருவாக்கம் பெற்று, மற்றவர்கள் போற்றும் உள்ளங்களுக்குள் தடம் பதித்து வாழ கற்றுக்கொள்ள நினையுங்கள்.
ஒவ்வொரு செயலிலும் உங்களுடைய ஆளுமை இருக்க, நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும். அதற்காக உங்கள் மனதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, மற்றவர்களிடம் ஆலோசனை கேட்ககூடாது என்பதில்லை. ஆனால், அவற்றை கண்மூடி அப்படியே ஏற்கும், நிழல் பிரதியாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். அவற்றில் எதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நன்மை பயக்கும் என்பதை, சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்டு, நிறைவேற்ற முனைப்பு காட்டுங்கள்.
அப்போதுதான் அந்த ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கையை செப்பனிடும் கருவியாகவும், மனதில் தெளிவு பிறக்கும் எண்ணங்களையும் தோற்று விக்கும். எத்தனை பேர்களிடம் ஆலோசனை கேட்டாலும், இறுதியில் செயலாற்றும் முடிவு உங்களதாக இருப்பதுதான், உங்களை அடுத்த நகர்வுகளுக்கு, இட்டுச் சென்று, செழுமைபடுத்தும் என்பதை உணருங்கள்.
உங்களை, நீங்களே உயர்வாக நினைத்து பார்த்தல், மிக மிக அவசியம். இது ஒன்றும் தான் என்ற அகந்தை அல்ல. அப்போது தான், தன்னால் இவ்வளவுதான் முடியும் என்ற அவநம்பிக்கை அகலம், புதுப் புது ஆற்றலும் செயல்களும் உங்கள் கண்முன்னே தெரியும். இது, உங்கள் முயற்சிக்கு, உங்கள் சக்தி மட்டுமே தீர்மானிக்கும் இடத்தில் உங்களை பண்படுத்தும்.
தன்னைச் சுற்றி சிறிய வட்டம் போட்டு வாழப் பிறந்தவன் அல்ல நீங்கள் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு, உலகமே வியக்கும் வண்ணம் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு, முன்னேறும் தடங்கள் பதித்து வாழ்ந்து காட்டுங்கள்.
எத்தனை முறை விழுந்தாலும், அத்தனை முறையும் கைகளை தட்டிவிட்டு, எழுந்து நிற்கப் பாருங்கள். உத்வேகத்துடன் செயலாற்றும் திறமை உங்களிடம் இருக்கு என்பதை நன்கு உணருங்கள். அப்படி நிகழும் பட்சத்தில், நீங்களே, வெற்றி இலக்கை அடைய தகுதியானவர்கள் என்பதை உணருங்கள்.
எல்லாமே உங்களுக்கு கிடைத்தாலும், உயர்வின் பலப்படிகள் கடந்து, உச்சம் தொட்டாலும், மனமும் உள்ளமும், நிலை மாறாமல், அன்பிலும் பண்பிலும் வழுவாமல் வாழ்ந்து காட்டுங்கள். மனிதம் தலை சுமந்து, உலகில் தலை நிமிர்ந்து, உங்களை பார்த்து, வாழ்க்கை படித்து கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு என்றென்றும் ஆசானாக இருக்கப் பழகுங்கள்.
உங்கள் புகழும் நினைவும் பன்மடங்கு அதிகரித்து, நிலைத்து, வாழ்ந்து காட்டும் மனிதர்களாக கடைசி வரை நீடித்து நில்லுங்கள்.