

வாழ்க்கைல எல்லோருமே ஜெயிக்கத் தானே ஆசைப்படுவோம். அடுத்து என்ன செய்யலாம்... யோசிப்போம்... திட்டமிடுவோம். லட்சியத்தை பட்டியலிடுவோம், ஆரம்பிப்போம். இந்த இடத்துல தான் குழப்பம் வரும். முடிவு சரியா? தவறா? அடுத்த கட்டம் போகலாமான்னு கேட்டு தயக்கம் தடுக்கும். தயக்கத்தை உதறுங்கள். தொடங்குங்கள். தொடரும் முன்னேற்றம்.
எந்த விஷயத்திலும் குறிக்கோள் தெளிவாக இருந்தால் மட்டும் போதாது. தயக்கமற்ற முயற்சியும் அவசியம். வடை சுட்டு விற்கணும். தினசரி நூறு வடை விற்கணும்ன்னு சபதம் எடுத்தால் மட்டும் போதாது. கூச்சப்படாமல், வீதியில் இறங்கி, கூவி விற்கணும். அப்போ தான் கோல் போட முடியும். அப்படியும் போணியாகலியா... அடுத்த ஸ்டெப் டோர் ஸ்டெப்ஸ் தான். வீட்டுக் கதவைத் தட்டுங்கள் அல்லது அழைப்பு மணியை அழுத்துங்கள். பலர் முகம் சுளிப்பார்கள். சிலர் வாங்குவார்கள். அதுவே நமக்கு லாபம் தானே... யோசிக்காமல் களத்தில் இறங்கணும்.
பயமும், தயக்கமும் சேர்ந்து பிரஷரை ஏற்றுவது பெரும்பாலும் வேலைக்கான இன்டர்வியூவுக்குத் தயாராகும் சமயத்தில் தான். இந்த வேலை "எனக்கு இல்ல... எனக்கு இல்லன்னு" திருவிளையாடல் தருமி ரேஞ்சுக்கு புலம்பி, தயாராகச் சுணங்கினால் எப்பூடி..? சுணக்கத்தைச் சுருட்டி வச்சுட்டு கிளம்புங்க. வேலைக்கான ஆர்டர் உங்களுக்காக காத்திருக்கும்.
தயக்கமின்றி பதில் சொன்னால் பரிசு பெறலாம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்கள். சென்ற வருடம் மாதர் சங்கத்தில் க்விஸ் போட்டி நடந்தது. அதில் ஒரு கேள்வி, ‘உருகுதே மருகுதே’ பாடலில் பாடிய பெண் பாடகியின் பெயர் என்ன? அதற்கான சரியான விடை சொன்னால் பத்து மதிப்பெண் வாங்கி முதலிடம் கிடைக்கும். நான் சொன்னேன் ஸ்ரேயா கோஷல் என்று. அருகில் இருந்த சகோதரி அவசரப்பட்டு தப்பாக சொல்லி எதிரணிக்கு வாய்ப்பை தராதே என்று என் கையை அழுத்தினாள். ஒரு செகண்ட் தப்பாக இருக்குமோ சந்தேகம் வர, சொல்ல யோசித்தேன். வருவது வரட்டும் என என்னையே தேத்திக்கிட்டு, ஸ்ரேயா கோஷல் என கெத்தாக எழுந்து நின்று கூறி, மார்க் வாங்கி, எங்க குரூப் முதலிடம் பெற வைத்தேன்.
சிரமம் இல்லாத வெற்றி இல்லை. கஷ்டப்படத் தயங்கி சந்தர்ப்பங்களை கை நழுவ விடக்கூடாது.
முயற்சி செய்யும் முன்னரே நடக்காது என நினைத்து தயங்க வேண்டாம்.
நம்ம செயலில் Perfection எதிர்பார்த்து தயங்க வேண்டாம். நம்மாலும் நன்றாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றவர்களின் விமர்சனங்களை நினைத்து தயங்க வேண்டாம். ஆரம்பிக்கும் முன்னே, மத்தவங்க என்ன சொல்லுவாங்களோன்னு நினைச்சா, அம்புட்டுதேன்.
சோம்பலும் தயக்கத்தின் இன்னொரு வெர்ஷன் தான். காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் போதே, இன்றைக்கு வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்க வேண்டும் என்று நினைப்போம். ரொம்ப நாள் கழித்து, அழைத்த சிநேகிதியுடன் நெடுநேரம் பேசி விட்டு, மிஷினின் அருகில் சென்றதும், நாளை பார்த்துக் கொள்ளலாமே சோர்வு எட்டிப் பார்க்க மனசு பின்னுக்கு இழுக்க தயங்கி ஓகே சொல்லி விடுவோம். ஆனா பாருங்க.. அடுத்த ரெண்டு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க, அதிக துணிகள் சேர்ந்து விடும். வேலைப் பளுவும் கூடி விடும்.
தயக்கம் காரணமாக வாய்ப்பை நழுவ விட்டு பின்னர் வருந்தி பயன் என்ன..? தயக்கம் தவிர்த்தால் தரணி ஆளலாம். சரி தானே.