ஒரு மனிதனின் வெற்றிக்கு அவனுடைய அறிவு வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, அதைப்போலவே அவனுடைய குண நலனும் மிகவும் முக்கியமாக இருக்கிறது. நாம் பெரும்பாலும் மற்றவர்களிடம் பழகும் போது கூட அவர்களிடம் இருக்கும் குண நலன்களை பொறுத்தே நட்பு பாராட்டுவதா?அல்லது விலகிச் செல்வதா? என்பதை தீர்மானிக்கிறோம். அப்படி பார்க்கும்போது ஒரு மனிதனை சக மனிதனிடம் எளிதில் இணக்கமாக வைப்பது அவருடைய குணநலன்களே.
மனிதர்கள் அனைவரும் பொதுவான குணங்களைத் தாண்டி சில தனித்துவமான குணநலன்களை அதிகமாக பெற்றிருப்பார்கள். அவர்களிடம் உள்ள நேர்மறையான குணநலன்கள் அவர்களை வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி வெற்றியாளர்களாக மாற்றும். சில எதிர்மறையான குண நலன்கள் அவர்களை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாமல் நாளடைவில் அது மிகப் பெரிய ஏக்கத்தையும், குற்ற உணர்வையும் கொடுத்துவிடுகிறது.
சமீபத்தில் நண்பர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தபோது அவருடைய 8 ம் வகுப்பு படிக்கும் மகன் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கி இருப்பதாகச் சொன்னார். பையன் பரிசு வாங்குவதில் ஒரு தந்தைக்கு இருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அவரது முகத்தில் காண முடிந்தது. அவர் பேசும்போது எனக்கு சிறுவயதிலிருந்தே மேடைப் பேச்சுகளில் பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும். நான் தனியாக இருக்கும் போதெல்லாம் அன்றைய காலகட்டங்களில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த பலரைப் போல் குரலை மாற்றியெல்லாம் பேசிப் பார்த்துள்ளேன் என்று கூறினார். அப்படியானால் நீங்கள் ஏன் அந்த திறமையை வெளிப்படுத்தவில்லை என்று கேட்டேன். என்னவென்று தெரியவில்லை எனக்கு சிறுவயதிலிருந்தே தயக்கம் அதிகமாக இருந்தது.
எனக்கு அதிகமாக நண்பர்கள் கூட கிடையாது. எல்லோரும் பத்து வார்த்தை பேசும் இடத்தில் நான் ஒரு வார்த்தை தான் பேசுவேன். நான் எப்படியாவது மற்றவர்கள் முன் பேச்சாளராக வர வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம் இருந்தது. ஆனால் எனக்குள் இருக்கும் தயக்கத்தால் என்னால் இன்று வரை அந்த வெற்றியின் ருசியை அனுபவிக்கவே முடியவில்லை என்று கூறி தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகளில் பலரைப் போல் குரலை மாற்றி பேசி காட்டினார்.
பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. "அடப்பாவி, என்னையா மனுசன் நீ , உனக்குள் இப்படி ஒரு திறமை இருந்திருக்கிறது என்பதை ஏன் இவ்வளவு காலம் திரையிட்டு மூடி வைத்துள்ளாய் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னவோ தெரியவில்லை பலர் முன் பேசுவது என்றாலே என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு நடுக்கம் வந்து விடுகிறது. பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும் அந்த தயக்கத்தை தாண்டி என்னால் வெளிவர முடியவில்லை என்று சொன்னார். நான் அடையாத அந்த வெற்றியின் சந்தோஷத்தை எனது மகன் அடைகிறான். அதை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்று கூறி ஒரு தந்தையாக அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அவரிடம் விடை பெற்று திரும்பும் போது தான் எனக்குள் தோன்றியது ஒரு வேலை அவர் தன்னுடைய திறமைகளை சரியான இடத்தில் வெளிப்படுத்தி இருந்தால் இன்று முதல் பரிசு வாங்கிய அந்த மாணவன் ஒரு மிகப்பெரிய பேச்சாளரின் மகனாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பான். அவனுக்கு கிடைக்கும் ஏராளமான அனுபவங்கள் மூலம் அவன் இன்னும் வாழ்வில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருப்பான்.
இந்த வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்குமானது. நாம் நம்முடைய காலங்களிலே நம்முடைய திறமைகளை சரியான இடத்தில் வெளிப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு படிப்போ, வயதோ ஒரு தடையாக இருக்கக் கூடாது. இந்த சமூகத்தின் நலத்திற்கு ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பும் மிகவும் அவசியம். நான் தவறவிட்டதை என் மகன் செய்வான் என்பது கூட ஏதோ ஒரு விதத்தில் நாம் நம்முடைய கடமைகளை புறக்கணிப்பதை போன்று தான். எனவே நாம் அனைவரும் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நன்கு பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
நம்மிடையே இருக்கும் எதிர்மறையான குணநலன்கள் நாம் செல்லும் பாதையில் இருக்கக்கூடிய சிறுசிறு தடை கற்களை போன்றதே. அந்தத் தடை கற்களை தூக்கி எறிந்து விட்டால் நம்முடைய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கலாம், அவ்வாறு தூக்கி எறியவில்லை எனில் அந்தத் தடை கற்களுக்காக நாம் நமது பயணத்தையே ரத்து செய்தது போல் ஆகிவிடும்.
நாம் அனைவரும் நம்முடைய நிறை குறைகளை ஆராய்ந்து சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, நீக்க வேண்டிய களைகளை நீக்கி இந்த வாழ்க்கை என்னும் தோட்டத்தில் இந்த சமூகத்திற்கு மிகவும் பயன் தரக்கூடிய வகையில் நலமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இந்த சமூகம் நம்மிடையே எதிர்பார்க்கும் ஒரு மிகப்பெரிய கைமாறு நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும்.