உங்களை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் மந்திரக்கோல்... எது தெரியுமா?

lord Shiva & sages
lord Shiva & sages
Published on

இன்றைய காலகட்டங்களில் நம்மில் பலரும் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்கிறோம். அதன் காரணமாக நம்முடைய மனநிலை பல நேரங்களில் தம்மை மிகவும் உயர்ந்தவர்களாகவே போற்றி பாவிக்கிறது. ஆனால் உண்மையில் நாம் வாழ்வில் உயர வேண்டுமானால் அதற்குரிய மந்திரக்கோல் நம்மைப் பற்றி நமக்கு இருக்கும் தாழ்வான எண்ணங்களே! இதனை ஒரு சிறு கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வசிஷ்டர் என்ற முனிவர் ராமாயணத்தில் தசரதனுக்கு அரச குருவாக இருந்தவர். அவருக்கு ஒருமுறை சிவபெருமான் ஒரு அற்புதமான வரம் ஒன்றை அளித்தார். அந்த வரத்தின்படி அவர் ஏதேனும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு முன்பாக அவருடைய நாற்காலி அந்த இடத்திற்கு சென்று விடும். உரிய இடத்தை அடைந்தவுடன் வசிஷ்டருக்கு தான் எங்கு அமர வேண்டும்? என்ற தேடல் இல்லாமல் அமர்ந்து கொள்ளலாம்.

இன்று நம்மிடையே பதவியாசை ஒரு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது போலவே அன்றும் இருந்தது. வசிஷ்டருடன் இருந்த சக முனிவர்கள் அவருக்கு வழங்கப்பட்ட இந்த விசேஷ வரத்தை நினைத்து பொறாமைப்பட்டனர்.

எனவே அவர்கள் அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் சென்று, எங்களுடன் ஒருவராகத்தான் வசிஷ்டரும் இருக்கிறார். அப்படி இருக்கையில் அவருக்கு மட்டும் இப்படி ஒரு விசேஷ வரத்தை தாங்கள் அளிக்க என்ன காரணம்? என்று கேட்டனர். சிறிது நேரம் அமைதியாக சிந்தித்த சிவபெருமான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை கொடுத்தார்.

அதன் அடிப்படையில் அந்த முனிவர்கள் ஒவ்வொருவரும் 48 நாட்களுக்குள் அவர்களை விட உயர்ந்தவர் ஒருவரை தேடிக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார் சிவபெருமான். அனைவரும் ஒருமனதாக சம்மதித்து அந்த இடத்தை விட்டு சென்றனர்.

இதையும் படியுங்கள்:
அடாவடித்தனம் எதற்கு?
lord Shiva & sages

சிறிது நேரத்திற்கு பின் அங்கு வசிஷ்டரும் வந்தார். மற்ற முனிவர்களுக்கு கொடுத்தது போலவே வசிஷ்டருக்கும் சிவபெருமான் ஒரு வேலையை கொடுத்தார். வசிஷ்டரை பார்த்து நீங்கள் 48 நாட்களுக்குள் உங்களை விட தாழ்ந்தவர் ஒருவரை தேடி கண்டுபிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். வசிஷ்டரும் சம்மதம் தெரிவித்து விட்டு சென்று விட்டார்.

நாட்கள் கடந்தன. குறித்த நாளில் அனைவரும் சிவபெருமான் முன்பு வந்து சேர்ந்தனர். முதலில் மற்ற முனிவர்களை பார்த்து சிவபெருமான் உங்களை விட உயர்ந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு மற்ற முனிவர்கள் அனைவரும், நாங்கள் எவ்வளவோ தேடிப் பார்த்து விட்டோம். ஆனாலும் எங்களை விட உயர்ந்தவர் ஒருவரை எங்களால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினர். பின் வசிஷ்டரை பார்த்து உங்களுக்கு கொடுத்த வேலை என்னவாயிற்று? என்று கேட்டார் சிவபெருமான்.

அதற்கு வசிஷ்டரும் சிறிதும் தயங்காமல் ஐயா, எவ்வளவோ தேடிப் பார்த்து விட்டேன். ஆனாலும் என்னை விட தாழ்ந்தவர் ஒருவரை இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! என்று கூறினார்.

இதைக் கேட்ட மற்ற முனிவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிந்தனர். தன்னைப் பற்றிய தாழ்ந்த எண்ணங்களே மற்றொருவரை அன்பாகவும் மரியாதையுடனும் நடத்த உதவுகிறது. யார் ஒருவர் தன்னைப் பற்றிய உயர்வான எண்ணங்களுடனும், தான் என்ற அகந்தையுடனும் அலைகிறார்களோ அவர்கள் அனைவரும் சக மனிதர்களிடமிருந்து விலகியே நிற்கின்றனர்.

எனவே தன்னைப் பற்றிய எந்தவொரு தலைக்கணமும் இல்லாமல் இருப்பதே பிறரை அரவணைத்துச் செல்வதற்கான மிகப்பெரிய மந்திரக்கோலாகும்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி மன்னிப்பு கேட்கும் நபரா நீங்க?
lord Shiva & sages

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com