திரும்பத் திரும்ப வரும் பிரச்னைகளை நிவர்த்தி செய்வது எப்படி?

How to solve problems?
Motivational articles
Published on

திரும்பத் திரும்ப வரும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக்காண முயலுங்கள்.‌ அவ்வாறு நிரந்தரத் தீர்வைக் காணும்போது அந்தப் பிரச்னை திரும்பத் திரும்ப நமது வாழ்க்கையில் தொந்தரவைக் கொடுக்காது. 

நிவாரணம், நிவர்த்தி வித்தியாசம்.

ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வரலாம்.‌ அந்தத் தலைவலிக்கு அவர் தலைவலி மாத்திரை சாப்பிடுவது என்பது அப்போதைய நிவாரணம்தான். அதாவது தற்காலிகத் தீர்வுதான். அந்தத் தலைவலிக்கு காரணம் அவருடைய கோப‌ குணமாக இருக்கலாம். அவர் தனது கோபகுணத்தை மாற்றி சாந்தமான குணமாக மாறும்போது அவர் அந்தப் பிரச்னையில் இருந்து நிவர்த்தி அடைகிறார். அதாவது நிரந்தரமானத் தீர்வை அடைகிறார். கோபத்தைக் குறைக்க, அவர் தியானம் கற்றுக்கொள்ளலாம். வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையின் சினம் தவிர்த்தல் பயிற்சியைப் பழகலாம். இவ்வாறு நிரந்தரத் தீர்வைக் காணும்போது அந்தப் பிரச்னை மறுபடி முளைக்காதிருக்கும்.

இது குறித்து ஒரு கதையைப் பார்ப்போம்.

ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தினைச் சுற்றி ஆறு ஓடியது. பட்டணத்திற்கு சென்ற மக்கள் அந்தக் கிராமத்திற்கு திரும்ப வேண்டும் என்றால் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதாவது ஆற்றினை நீந்திக் கடக்க வேண்டும். இவ்வாறு நீந்தி கடப்பதானது தனிநபரின் திறனைச் சார்ந்ததாக இருந்தது.‌ எல்லோராலும் எளிதாக பட்டணத்திலிருந்து நீந்தி ஆற்றைக் கடக்க இயலவில்லை. வயதானவர்களுக்கு இது சற்று கடினமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
மனிதனை மதித்தால் அவன் செயல்பாடு அதிகரிக்கும்!
How to solve problems?

ஒரு மனிதர் இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண எண்ணினார். அவர் உடனே மரப்பலகைகள் கொண்டு ஒரு படகு தயாரித்தார். அந்தப் படகின் மூலமாக மக்களால் பட்டணத்தில் இருந்து கிராமத்திற்கு படகோட்டியின் துணையுடன் வர முடிந்தது. ஆனால் இங்கும் ஒரு பிரச்னை நிலவியது. ஒரு சமயத்தில் படகில் நான்கு அல்லது ஐந்து நபர்கள் மட்டுமே பயணப்பட முடிந்தது. மற்ற நபர்கள் பட்டணக் கரையில் படகுக்காக காத்திருக்க நேர்ந்தது. 

ஒரு மனிதர் இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண ஆற்றின் வேகத்தை, ஆழத்தைக் கணக்கிட்டார். ஒரு பாலத்தைக் கட்ட முடிவெடுத்தார். பொறியியல் வல்லுனர்களின் துணையைக் கொண்டு அந்தப் பாலம் அருமையாக கட்டி முடிக்கப்பட்டது. இப்பொழுது மக்களுக்கு பட்டணத்திற்கு சென்று வருவது எளிதாகிவிட்டது. வயது முதிர்ந்தவர்கள் கூட எளிமையாக பாலம் வழியாக பட்டணம் சென்று வர முடிந்தது.

இப்போது நாம் மேற்கண்ட கதையில் மூன்று நபர்களைக் கண்டோம். முதல் நபர் ஆற்றை நீந்தி கடந்தார். அங்கு அவரால் மட்டுமே நீந்தி கடக்க முடிந்தது. இரண்டாவது நபர் படகை உருவாக்கினார். படகின் மூலமாக அவர் மட்டுமன்றி இன்னும் நான்கு ஐந்து பேர் அதன்மூலம் ஆற்றைக் கடக்க முடிந்தது. மூன்றாவது நபர் பாலத்தை உருவாக்கினார். பாலத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான மக்கள் எளிதாக ஆற்றினைக் கடக்க முடிந்தது. வாகனங்களும் பாலத்தில் பயணித்ததால் வெகுவிரைவாக ஆற்றைக் கடக்க முடிந்தது. 

இதையும் படியுங்கள்:
வியாபாரத்தில் வெற்றி பெற திறமையானவர்களைத் தேர்ந்தெடுங்கள்!
How to solve problems?

நாம் திரும்பத் திரும்ப வரும் பிரச்னைகளுக்கு மூன்றாவது நபரைப் போன்று நிரந்தர தீர்வைக்காண முயலவேண்டும். எப்போதாவது வரும் பிரச்னைக்கு நிவாரணத்தைத் தேடலாம். ஆனால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் திரும்பத் திரும்ப வரும் பிரச்னைக்கு நாம் நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் அந்தப் பிரச்னையால் ஏற்படும் எதிர்கால விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

நாம் எப்போதாவது வரும் பிரச்னைக்கு நிவாரணத்தைத் தேடுவோம். நாம் திரும்பத் திரும்ப வரும் பிரச்னைகளுக்கு நிவாரணத்திற்கு பதிலாக நிவர்த்தியைத் தேடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com