

வாழ்க்கையில் ஏற்றங்கள் மற்றும் இறக்கங்கள் இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை. அதாவது இனிப்பும் காரமும் சேரந்தது போல் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் ஒரு இறக்கதததை சந்திக்கும் போதுதான், ஏற்றத்தை நோக்கி மனம் சுறுசுறுப்பாக சிந்திக்க தொடங்குகிறது. ஏற்றம் வரும் போது, மனம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறது. ஆகவே சூழ்நிலை தகுந்தவாறு மனம் தன்னை எப்போதும் தயாராக வைத்து இருக்கிறது. நீங்கள் அந்த நிலைகளில் எப்படி செயலாற்றும் தன்மை மாறுபடும் போது மனமும் தன்னை மாற்றிக் கொள்கிறது.
வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஏற்றங்களும் இறக்கங்களும் மாறி மாறிதான் வரும். ஏற்றத்தில் சந்தோஷப்படுவதும், இறக்கத்தில் வேதனைப்படுவதும் இயல்பான நிலையே. ஆனால், இரண்டையும் ஒன்றாக பார்க்க வேண்டும். அதேமாதிரி உங்கள் வாழ்க்கையில் வேதனைகளும் சோதனைகளும் இருக்கத் தான் செய்யும். அப்போது உங்கள் துன்பம் என்னும் சகதியில் விழுந்து, அதனோடு சிக்கி ஆழ்ந்து போகாமல் நேர்மறை எண்ணங்கள் கொண்டு சரிசெய்து வாழ்ந்து வாகை சூடி காட்ட வேண்டும்.
குதிரக்கு அதன் பயணத்தின் போது கடிவாளம் போடுவது போல், நீங்களும் உங்கள் மனதை, அங்கும் இங்கும் அலைய விடாமல், ஒருநிலை படுத்தி வையுங்கள். அலைபாயும் மனதில் ஒருபோதும் தெளிவான சிந்தனை பிறக்காது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் தங்கள் மனதிலிருந்து முதலில் இரண்டு பேய்களை விரட்டி அடியுங்கள். அளவுக்கு மீறிய ஆசை மற்றும் தீவினை தரும் ஒழுக்கமற்ற செயல். இவை இரண்டும் தான், ஒரு மனிதனின் வாழ்க்கையை சகுனி போல் புகுந்து, தாழ்வு நிலைக்குத் தள்ளி, உங்களை பதம் பார்க்கிறது.
வாழ்க்கையில் ஒரு மனிதன், தன் மனசாட்சி படி நடக்கும் போது, மனம் தெளிந்த நீரோடையாக, புறக் காரணங்களில் பயணித்து, நேர்மறை எண்ணங்களோடு, பல இலக்குகளை தாண்டி சாதனை விழுதுகளை பற்றுகிறது. எனவே பிறழ் தவிர்க்கும் மனசாட்சி முன்னிலை படுத்தி முன்னேற்றம் காணுங்கள்.
வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் என்ற இரண்டும் மட்டுமில்லாமல், இருந்த இடத்திலேயே, அதாவது ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் இருந்த இடத்திலே இருப்பதாகவும் ஒரு நிலை வரும். அப்போது மிகவும் ஜாக்கிரதையாக தன்னுடைய வாழ்க்கையை எந்த திசையில் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் செயல் ஆற்ற வேண்டும்.
வாழ்க்கையில் மேடும் பள்ளமும், தடைக்கற்களும், முட்களும் நிறைந்துதான் இருக்கும். வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்லும் நீங்கள் தான் தடம் மாறாமல், மனதை தளர்ந்து போக விடாமலும், பாறையில் மோதி விடாமலும் பார்த்து, சரியான திசை நோக்கி, சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.
வாழ்க்கையில் போராட்டங்கள் வரும் போகும். மனதில் மட்டும் போராட்டம் வரக்கூடாது. மனப்போராட்டம் வீழ்ச்சிக்கான ஆரம்பம். அதனால் எந்த நிலையிலும், வாழ்க்கையில் மனதை மட்டும் வலிமையோடு வைத்திருங்கள்.
இன்றைய போட்டி மற்றும் போராட்டம் மிகுந்த வாழ்க்கைச் சூழலில், உங்கள் மனதை ஒருபோதும் வீழ்ச்சி அடையாமல் வைத்து இருப்பது தான் உங்கள் முதல் சாதனை. மனதின் வலிமையோடு எதிர்நீச்சல் போடத் தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்!