லூயி ப்ரெய்லியின் கண்களைப் பறித்த ஆணி, பின்பு கோடிக்கணக்கான பேரின் கண்களைத் திறந்தது எப்படி?

louis braille
louis braille
Updated on

பிரான்ஸ் நாட்டில் உள்ள 'கப்விரே' என்ற ஊரில் குதிரை சேணம் தயாரிக்கும் ஒரு கடையிலிருந்து சிறுவன் ஒருவன் இரு ஆணிகளை எடுத்துக்கொண்டு விரைவாக ஓடி வந்தான். அப்போது கால்கள் தடுக்கி கீழே விழுந்ததில் ஒரு கண் பார்வை பறிபோனது. சில காலங்களுக்குப் பிறகு அந்த சிறுவனின் மற்றொரு கண்ணின் பார்வையும் போய்விட்டது.

முழு குருடன் ஆன சிறுவனைச் சுற்றி இருள் சூழ்ந்தது. அந்த சிறுவனின் பெயர் லூயி பிரெய்லி. பிரெய்லிக்கு பத்து வயதானபோது, அவனை வாலென்டின் ஹே என்பவர் நடத்திய குருடர் பள்ளியில் அவரது தந்தை சேர்த்தார். பிரெய்லியின் அறிவு, ஆர்வம் முதலியவற்றைக் கண்டு ஹே மிகவும் மகிழ்ச்சியுற்றார்.

அங்கு ஹே குருடர்கள் படிப்பதற்கு புத்தகங்களை தயாரித்தார். துணியில் எழுத்துக்கள் எழுதப்பட்டு, அவற்றை தனித்தனியாக வெட்டி காகிதத்தின் மேல் ஒட்டி வைத்திருக்கும் எழுத்துக்களை விரல்களால் தடவி பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

மூன்று அங்குல உயரமும் இரண்டு அங்குல அகலமும் கொண்டதாக ஒவ்வொரு எழுத்தும் இருக்கும். ஆழமாக கற்க வேண்டும் என்ற ஆவல் உடைய பிரெய்லிக்கு கடினமான எழுத்துக்கள் உற்சாகம் ஊட்டக்கூடியதாக இல்லாததால் மிகவும் சோர்வுற்றார்.

விடுமுறையில் வீட்டிற்கு வந்த பிரெய்லி தன் தந்தையை பார்த்து, "வீட்டில் உள்ள பொருட்களை தொட்டு பார்த்து தெரிந்து கொள்கிறேன். ஆனால், எனது காதுகளுக்கும் கைகளுக்கும் எட்டாத தொலைவில் என்ன இருக்கின்றன என்பவற்றை அறிந்து கொள்ள முடியவில்லை. பார்வையற்றவர்களுக்கு பயன்படக்கூடிய புத்தகங்கள் இல்லையே. அத்தகைய நூல்கள் என்னை போன்றவர்களுக்கு கிடைக்காதா?" எனக் கேட்டார்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி எது தெரியுமா?
louis braille

அல்லும் பகலும் பிரெய்லி இந்தக் குறையைப் போக்க சிந்தித்தார். அதே பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆசிரியர் ஆனார். ஒருநாள் தன் நண்பர் ஒருவருடன் சிற்றுண்டி சாலைக்கு சென்றபோது அவரது நண்பர் ஒரு பத்திரிக்கையை பிரித்து படித்தார். பிரெஞ்சு படை தலைவர் ஒருவர் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இருளில் படிக்கக்கூடிய புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக செய்தி ஒன்றை தெரிந்து கொண்டார்.

அந்த பிரெஞ்சு படைத் தலைவரிடம் சென்ற பிரெய்லி, "பத்திரிக்கையில் என் நண்பர் தாங்கள் உருவாக்கியுள்ள இருளில் படிக்கக்கூடிய புத்தகம் பற்றிய செய்தியை வாசிக்கத் தெரிந்து கொண்டேன். இருளில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மிகுதியாக பயன் தரும் புத்தகத்தைப் பற்றி விளக்கம் கொடுங்கள்" எனக் கேட்டார்.

"உங்களுக்கு உதவுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்" என படைத்தலைவர் கூறினார். "கெட்டியான காகிதம் ஒன்றில் கூர்மையான ஆணியினால் புள்ளிகளை குத்தினேன். அது காகிதத்தின் மற்றொருபுறம் மேடுகளை உண்டாக்கியதை விரலால் வருடி தெரிந்து கொள்ளலாம். ராணுவ வீரர்களுக்கு இதை குறிப்பின் வாயிலாக செய்திகளை தெரிவிக்கவே கண்டுபிடித்தேன்" என விளக்கம் கொடுத்தார்.

ஐந்து ஆண்டுகள் அது சம்பந்தமாக பிரெய்லி உழைத்ததன் பயனாக 'பிரெய்லியின் முறை' என்ற புத்தகம் உருவாயிற்று. இந்த புத்தகத்தை இன்று உலகில் கோடிக்கணக்கான பார்வையற்றோர் படித்து பயன் பெறுகின்றனர். கண் பார்வை தெரியாத பிரெய்லிக்கு இருந்த ஆர்வமும் உழைப்பும் அவரது சாதனையின் வெற்றிக்கு உதவி புரிந்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com