பணிவு என்பது பலவீனம் அல்ல; அதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம்!

Humility
HumilityImg Credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தற்பெருமை என்பது ஒரு நபர் தனது சாதனைகள், திறமைகள் அல்லது உடைமைகளைக் குறித்து மற்றவர்கள் முன்பு அதிகப்படியான அகங்காரத்துடன், சுய திருப்தியுடன் பெருமையாகப் பேசுவதைக் குறிக்கும். இதனைத் தற்புகழ்ச்சி, பகட்டு, தம்பட்டம் அல்லது அகந்தை என்றும் அழைக்கலாம்.

உண்மையான திறமைக்குத் தற்பெருமை தேவையில்லை; பணிவே ஒருவரைச் சிறந்த மனிதராக உயர்த்தும். தற்பெருமை ஒரு மனிதருக்குத் தலைக்குனிவைத் தான் தரும். அறியாமை இருப்பதினால் தான் தற்பெருமை வருகிறது. தற்பெருமையினால் ஆணவம் வரும்; எங்கு ஆணவம் உண்டாகிறதோ, அங்கு தலைகுனிவும் அழிவும் தானாகவே தேடி வரும்.

மற்றவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொடுக்கும் தற்பெருமை, ஒரு கட்டத்தில் நம்மைத் தனிமைப்படுத்தி விடும். தற்பெருமை கொள்வது தனிநபர் வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்கும் கெடுதலை விளைவிக்கும். பணிவும், இயல்பான பண்புமே நிலையான நற்பெயரையும் ஆரோக்கியமான உறவுகளையும் தரும்.

பணிவு (Humility) என்பது:

அடிமையாக இருப்பதோ, சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதோ இல்லை. எதற்கெடுத்தாலும் 'ஆமாம் சாமி' போடுவதும் இல்லை. இது உடலில் வெளிப்படும் மாற்றமோ அல்லது நடிப்போ கிடையாது. உள்ளத்திலிருந்து ஏற்படும் தன்னடக்கம் மற்றும் நாவடக்கமே ஆகும்.

அத்துடன் பிறரைப் புண்படுத்தாமலும், மற்றவர்களைப் புரிந்துகொண்டு மதித்து நடத்துவதுமே உண்மையான பணிவாகும்.

அதிகப்படியான தற்பெருமை மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நினைத்தாலும், அது நெருக்கமான உறவுகளில் கசப்பை உண்டாக்கி, அவர்களை நெருங்க விடாமல் தூர நிறுத்தும். தற்பெருமை அகங்காரத்தைத் தூண்டும். வாழ்வில் அமைதியையும் மதிப்பையும் நிலைநாட்ட வேண்டுமென்றால், தற்பெருமை வேண்டாம்.

ஒருவருடைய சொந்த திறமையையோ அல்லது வசதியையோ அளவுக்கு அதிகமாகப் பேசும் போது, அது மற்றவர்களிடையே இடைவெளியை உருவாக்கும். அத்துடன் தற்பெருமை கொள்ளும் நபர்கள் மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்க மறுப்பதால், புதிய ஆக்கப்பூர்வமான முயற்சிகள் அழியும்.

எவரும் எவரையும் விட உயர்ந்தவர்கள் இல்லை; எனவே, பணிவுடன் நடப்பதே சிறந்தது. பிறரின் உணர்வுகளை மதித்து, தற்பெருமையைத் தவிர்ப்பது உண்மையான மனிதநேயமாகும்.

இதையும் படியுங்கள்:
உங்களை காயப்படுத்துபவர்களை வீழ்த்த இதோ ஒரு 'Eagle Formula'!
Humility

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற"

என்ற வள்ளுவரின் வாக்குப்படி, பணிவும் இனிய சொல்லுமே ஒருவருக்கு உண்மையான அணிகலன்களாகும். வாழ்வில் முன்னேறத் திறமை மற்றும் கடின உழைப்பு தேவையே தவிர, தற்பெருமை அல்ல. தற்பெருமையை கைவிட்டுப் பணிவுடன் செயல்படுவதன் மூலமே வாழ்வில் உண்மையான வெற்றியை அடைய முடியும்.

மனதின் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்தி, உண்மையான திறமையையும் ஒழுக்கத்தையும் மறைத்து, தனிப்பட்ட மதிப்பை இழக்கச் செய்யும் இந்தத் தீய பண்பு நமக்குத் தேவைதானா நண்பர்களே? நீங்களே சொல்லுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com