உங்கள் குழந்தைகளின் திறமையை அடையாளம் காணுங்கள். சாதனையாளராக மாற்றுங்கள்!

Identify your children's talents
Motivational articles
Published on

பேட்மிண்டன், கிரிகெட், கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா, ஓவியம், வாய்ப்பாட்டு, வயலின், புல்லாங்குழல், கீபோர்டு, கிடார், பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ், அபாகஸ், கேரம், செஸ், நீச்சல், நாடகம், கையெழுத்துப் பயிற்சி, ஓரிகாமி, ஸ்கேட்டிங். ஹிந்தி பயிற்சி வகுப்பு, ஆங்கிலப் பயிற்சி வகுப்பு, பேச்சுக்கலை, இவையெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள். இவ்வளவு சிறப்பு வகுப்புகள் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இதுமட்டுமில்லை. தற்காலத்தில் இன்னும் நிறைய பயிச்சி வகுப்புகள் உள்ளன. இப்படி எல்லா சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கும் ஒரே சமயத்தில் குழந்தைகளை அனுப்புவது சரியா தவறா? வாருங்கள் இந்த பதிவில் அதைப் பற்றித் தெரிந்துகொள்ளுவோம்.

தற்காலத்தில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒருமணி நேரத்திற்கு ஒரு பயிற்சி என்று தினமும் பல பயிற்சிகளுக்கும் அனுப்புகிறார்கள். இடையில் படிக்கவும் வேண்டும். முதல் மதிப்பெண் பெறவும் வேண்டும். ஒரே சமயத்தில் இத்தனை சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் குழந்தைகளுக்கு ஒருவித சோர்வும் வெறுப்பும் ஏற்படும் என்பதை உண்மை.

ஒரே நேரத்தில் இத்தனை பயிற்சிகளை மேற்கொண்டால் எந்த ஒரு கலையிலும் தேர்ச்சிபெற முடியாது என்பதை பெற்றோர்கள் சிந்திப்பதே இல்லை. பெண் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார்கள். எட்டாம் வகுப்பு வந்ததும் அரங்கேற்றம் செய்து முடித்து நடனப்பயிற்சியை நிறுத்தி விடுகிறார்கள். ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைந்ததும் எல்லா சிறப்பு பயிற்சிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. ஐஐடி, நீட் முதலான பயிற்சிகள் தொடங்குகின்றன. அடுத்தாக மதிப்பெண்ணை நோக்கிய பயணம் தொடங்குகிறது.

படிப்பும் முக்கியம். அதைவிட முக்கியம் ஏதாவது ஒரு பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு அதில் தங்களை ஈடுபடுத்தி வளர்த்துக்கொள்வது. நம்முடைய விருப்பத்திற்கு குழந்தைகள் இருக்க வேண்டுமா? அல்லது அவர்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொண்டு நாம் நடக்கவேண்டுமா? இரண்டாவதே முக்கியமானதாகும்.

இதையும் படியுங்கள்:
எங்கும் எதிலும் நிதானம் அவசியம்!
Identify your children's talents

குழந்தைகள் எதை விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல பெற்றோர்கள் இதை முயற்சி செய்து பார்ப்பது கூட கிடையாது. எல்லா சிறப்பு வகுப்புகளிலும் குழந்தைகளை சேர்த்து அவர்களைத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

கலை, இலக்கியம், விளையாட்டு இதெல்லாம் ஒரு மனிதனுக்கு அவசியம்தானா? என்று கேட்டால் நிச்சயம் அவசியம் என்பதுதான் விடையாக இருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு காட்ட வேண்டும். டென்ஷன் நிறைந்த வாழ்க்கையில் நமது டென்ஷனையும் மனச்சோர்வையும் அகற்றி மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வல்லமை படைத்தவை கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

சரி. நாங்கள் என்னதான் செய்யவேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள். அதைப் பற்றி சற்று தெரிந்துகொள்ளுவோம்.

ஆறாம் வகுப்பிற்கு வந்ததும் குழந்தைகளை சனி, ஞாயிறுகளில் மட்டும் சில சிறப்பு பயிற்சிகளில் சேர்த்து விடுங்கள். உதாரணமான பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, செஸ், டென்னிஸ், கேரம், ஓவியம், பிறமொழிகளைக் கற்றல் இப்படியாக இரண்டொரு சில பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விடுங்கள். உங்கள் குழந்தையின் முகத்தில் எந்த ஒரு சிறப்புப் பயிற்சியில் அதிக ஆர்வம் வெளிப்படுகிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

உதாரணமாக சில குழந்தைகள் பரதநாட்டியத்தில் ஆர்வம் காட்டுவார்கள். சில குழந்தைகள் வாய்ப்பாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். சில குழந்தைகள் ஓவியம், டென்னிஸ், கராத்தே இப்படியாக ஏதாவது ஒரு கலையில் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த ஒரு கலை அவர்களுக்கு அதிகமாகப் பிடித்திருக்கிறது என்பது அர்த்தம்.

உங்கள் மகனோ மகளோ எந்த ஒரு கலையில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்களோ அடுத்த வருடத்தில் இருந்து அந்த ஒரு கலையில் மட்டும் சிறப்பு வகுப்பில் சேர்த்துத் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். பிற்காலத்தில் உங்கள் மகனோ மகளோ அந்த கலையில் ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் பயிற்சி பெற்று தேசிய மற்றும் உலக சாதனை படைப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வருடத்தில் இருந்து இதை முயற்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம்.

இதையும் படியுங்கள்:
சுயக்கட்டுப்பாடே சுதந்திரத்திற்கான வழி!
Identify your children's talents

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com