
புரட்டாசி மாசம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அசைவ விரும்பிகள் அனைவரும் இம்பாலாக்களாக மாறி இருப்பார்கள். 'இம்பாலா' என்றால் தாவர உண்ணிகள் என்று பெயர். இந்த காலகட்டத்தில் பலரும் அசைவத்திற்கு மாற்றாக பன்னீர் (Paneer) அல்லது சோயா சங்கை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் தற்போது பன்னீரை அதிகமாக சாப்பிடும் பழக்கம் அதிகரித்து உள்ளது. சோயாவில் பல வித உணவு வகைகளை செய்ய முடியாது. ஆனால், பன்னீரில் விரும்பியபடி பல சுவையான உணவுகளை சமைத்து சாப்பிட முடியும்.
பன்னீரில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதை தினசரி உணவில் வட இந்தியர்கள் சேர்த்துக் கொள்கின்றனர். தமிழர்களுக்கு முக்கிய உணவுப் பொருளாக இது இல்லா விட்டாலும் சைவ உணவு காலங்களில் அதிகமாக சாப்பிடுகின்றனர். சைவர்களுக்கு புரதச் சத்து கிடைக்க பன்னீர் ஒரு நல்ல தேர்வு. இதில் கால்சியம், கொழுப்பு மற்றும் ஏராளமான வைட்டமின்கள் கலந்து உள்ளன.
பன்னீர்(Paneer) தினசரி சாப்பிடலாமா?
தினசரி புரதத் தேவையை கருத்தில் கொண்டு, பன்னீரை ஒரு வேளை மட்டும் குறைவான அளவில் சாப்பிடலாம். தினமும் 50 கிராமுக்கு அதிகமாக பன்னீரை சாப்பிடுவது நல்லது அல்ல.
இந்த விஷயத்தில் வட இந்தியர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொள்ள வேண்டாம். அதிக பால், நெய், வெண்ணெய், பன்னீர் ஆகியவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு அவர்களின் மரபணு உள்ளது. அதே வேளையில் அவர்கள் மிகக் குறைந்த அளவில் கார்ப்போஹைட்ரேட் எடுத்துக் கொள்வதால், கொழுப்பு சேர்வதில்லை.
தினசரி பன்னீர் சாப்பிடுவதால் நன்மையை விட தீமையே அதிகரிக்கிறது. அதிக அளவில் பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்வோம்.
1. அஜீரணம்
பன்னீர் அதிகம் சாப்பிட்டால், முதலில் வரும் பிரச்னை அஜீரணம் மற்றும் வயிறு உப்புசம். பலருக்கும் அவர்களை அறியாமல் லாக்டோஸ் ஒவ்வாமை இருக்கிறது. இது வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
2. அதிக கால்சியம் மற்றும் கொழுப்பு
பன்னீரில் உள்ள கால்சியமும், கொழுப்பும் தேவைக்கு அதிகமாக உடலில் சேரும் போது, கால்சியம் கற்களாக மாற வாய்ப்புள்ளது. அதிகப்படியான கொழுப்புகள் இரத்தத்தில் சேர்ந்து இரத்த அழுத்தம் போன்றவற்றை உருவாக்கலாம்.
3. அழற்சி
பன்னீரின் அதிக நுகர்வு வளர்சிதை மாற்றத்தில் தடையை ஏற்படுத்தி கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டில் மந்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் நீரழிவு நோயின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். கல்லீரல் வீக்கம், இரத்த அழுத்தம், PCOS, அதிக கொழுப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பன்னீரை தவிர்ப்பது நல்லது.
பன்னீர் (Paneer) தரம்:
கடையில் வாங்கப்படும் மற்றும் உணவகத்தில் கிடைக்கும் பன்னீர் தரம் கேள்விக்குரியதாக இருக்கலாம். பன்னீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலின் தரம் எப்படிப்பட்டது என்றும் தெரிந்திருக்காது.
முந்தைய கால பன்னீர் சுத்தமான பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது. இன்றைய காலத்தில் பாக்கெட் பால்களில் கலப்படம் அதிகமாக உள்ளது. அந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரில், தேவையற்ற இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்திருக்கும்.
பன்னீரை எவ்வளவு சாப்பிடலாம்?
உடலின் கால்சியம் மற்றும் ஆற்றல் தேவைக்காக வாரம் இருமுறை பன்னீரை 100 கிராம் அளவில் சாப்பிடலாம். பன்னீர் ஏற்கனவே கொழுப்பு என்பதால், அதனுடன் அதிகப்படியான எண்ணெய், வெண்ணெய், கிரீம் சேர்ப்பதை தவிர்க்கவும்.
பசும்பாலை வாங்கி திரித்து வீட்டிலேயே பன்னீர் செய்யுங்கள். வீட்டில் செய்யும் பன்னீர்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து சாப்பிடுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)