
மிகச்சிறந்த வெற்றியாளர்களை கவனித்துப்பாருங்கள். அவர்கள் நேரம், சூழலுக்கு ஏற்ப தங்கள் உடைகள், பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள் என யாவற்றிலும் ஒரு எளிமையை கடைப்பிடிப்பவர்களாகவே இருப்பார்கள். உதாரணமாக தங்களிடம் பணி செய்பவர்கள் வீட்டு விசேஷங்களில் விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிந்து தங்கள் பகட்டினை பறைசாற்ற மாட்டார்கள்.
மேலும் பணி இடங்களில் உத்தரவு போடும்போது ஒரு விதமாகவும் பணியாளர்களிடம் பேசும்போது வேறு விதமாகவும் இருப்பதை கவனித்திருக்கலாம். உத்தரவில் ஒரு முதலாளியின் கடமையாக கணீர் என்ற குரலும் பணியாளர்களிடம் பேசும்போது காரிய நோக்கோடு கனிவான குரலும் இருக்கும்.
அதேபோல் எந்த இடத்திலும் அவசரப்படாமல் பதட்டம் என்பதே இல்லாமல் நிதானமாகவும் அமைதியுடனும் பொறுமையாக தங்கள் எண்ணங்களை எடுத்துச்சொல்வார்கள். செயல்களை செய்து முடிப்பார்கள். கொக்கு தன் இரை வரும்வரை காத்திருப்பது போல தங்களுக்கான நேரம் வரும்வரை காத்திருப்பார்கள்.
ஆக எளிமை, பொறுமை, கனிவு இவை மூன்றும் அனைத்து மனிதருக்கும் சமமாக கிடைக்கக்கூடிய பொக்கிஷங்களே. இதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே வெற்றியினை தீர்மானிக்கிறது.
இந்த மூன்றின் வழியாக வெற்றி பெற்றவர்களை எளிதாக கண்டு கொள்ளலாம். ஏனெனில் சிலர் மட்டுமே இந்த மூன்றையும் கைக்கொண்டவர்களாக இருப்பார்கள் அப்படிப்பட்டவர்களில் மிகப் பிரபலமான மசாலா கம்பெனியின் நிறுவனர்களான இந்த தம்பதி இன்றும் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள்.
ஈரோடு நகரத்திலிருந்து அவர்கள் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறார்கள் என்றால் அதன் அடிப்படை இந்த மூன்றும்தான் என்பது அவர்களின் சுயசரிதை புத்தகத்தின் மூலம் அறியலாம். "ஒரு விதையின் கதை" எனும் இந்த புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு இருந்தால் நிச்சயம் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஏனெனில் அதில் அவர்கள் எப்படி இந்த துறைக்கு வந்து முன்னேறினார்கள், எப்படி தங்கள் முன் வந்த தடை கற்களைத் தாண்டி சாதித்தார்கள் என்பது மிக எளிமையாக சொல்லப்பட்டு இருக்கிறது.
வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் இளைஞிக்கும் இவர்களின் வாழ்க்கை வரலாறு நம்பிக்கையின் வரலாறாக சாதிக்க வைக்கும்.
இவர்களில் மனைவி சிறு வயதிலேயே சூழல் காரணமாக படிப்பை நிறுத்தியவர். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். அவரின் கணவரோ சிறு வயதில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கடுமையான முயற்சி எடுத்து சில காரணங்களால் நிறைவேறாமல் தன் தந்தையின் தொழிலான மஞ்சள் வியாபாரத்தை செய்ய துவங்குகிறார். இதுதான் அவர்கள் சாதனை வாழ்வின் துவக்கம்.
தங்கள் தொழிலுக்கு ஒரு இருசக்கர வாகனம் வாங்க சிரமப்பட்டது முதல் எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் அந்தப் புத்தகம் மூலம் நமக்கு கடத்தி நமக்குள்ளே சாதிக்கவேண்டும் என்ற ஊக்கத்தை தருகின்றனர்.
இன்று பல கனிவான சேவைகள் எளிமையான பண்புகள் மற்றும் பொறுமையான குணங்களால் பல விருதுகளுக்கு பெருமை சேர்க்கிறார்கள்.
நாமும் இந்தப் பொக்கிஷங்களை நமதாக்கி வாழ்வில் வெற்றி பெறுவாமா?