பிழைகளுக்குள் ஒரு உண்மை இருக்கு தெரியுமா?

Errors in human life
Errors in human lifeImg credit: AI Image
Updated on

‘பிழைகள்’ இந்த வார்த்தையை சிலருக்கு பிடிக்காது. காரணம், மிகச் சரியாய் இருப்பதுதான் வாழ்வில் ஏற்றம் தருவதற்கு உறுதுணையாகும் என நினைப்பார்கள். பிழைகள் இல்லாத இவ்வுலக இயக்கமே இல்லை எனலாம்.

நீலவானத்தில், பெளர்ணமி நாளில் அழகுப் பெண்ணாக காட்சியளிக்கும் நிலா, அமாவாசையில் காணாமல் போய்விடுகிறது. அதுவும் பிழைதான், ஆனால் இயற்கையின் சுழற்சிக்கு தேவையான பிழையாகும். இயற்கையால் அங்கீகரிக்கப்பட்ட செயலுமாகும்.

இறைவன் படைத்துள்ள அனைத்திலும் பிழை இல்லாமல் இருக்காது. மயில்களில், ஆண் மயிலுக்கு தோகை இருக்கும். பெண் மயிலுக்கு தோகை இருக்காது. நியாயமாக பார்த்தால் பெண் மயிலுக்கு தான் தோகை இருக்க வேண்டும். இது இடமாறு தோற்ற பிழை போல் தோன்றுகிறது அல்லவா? இந்த பிழையை கூட ஆண் மயில், பெண் மயிலை மயக்குவதற்காக தோகையை விரித்துக்காட்டி, வலைவீசும் அஸ்திரமாக பயன்படுத்தும்.

அதே போன்றுதான், ஆண் சிங்கத்திற்கு அழகான பிடரி உண்டு. பெண் சிங்கத்திற்கு பிடரி கிடையாது. ஆண் யானை அழகான நீண்ட தந்தங்களை கொண்டிருக்கும். பெண் யானைக்கு தந்தம் இருக்காது. இது இயற்கை வகுத்துள்ள நியாயமான பிழையாகும்.

சென்னை அண்ணா சாலையில் தீவுத்திடல் எதிரே கம்பீரமான ‘மன்றோ சிலை’ உள்ளது. அதைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரு பிழை கண்ணுக்கு புலப்படும். யாரும் அதைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

மன்றோ, குதிரையின் மேல் அமர்ந்திருப்பார். அவர் கால் வைக்கும் இடத்தில் சேணமிருக்காது. குதிரையின் மேல் அமர்பவர்கள் விழாமல் இருக்க சேணம் அவசியம் தேவை. இந்த பிழை  சிற்பியின் கவனக்குறைவா? இல்லை.., தன்னுடைய கலைத்திறனில் ஏதாவது ஒரு பிழை இருக்கட்டுமே! என்று சிற்பி விட்டுவிட்டதா? சிற்பிக்குத் தான் தெரியும்.

ஒரு பேரரசர் பெரிய மாளிகை கட்டினார். அவ்வப்போது கட்டிட வேலையை  நோரடியாகவே கண்காணித்து வந்தார். அந்த மாளிகையை பதினாறு தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன. பெரிய மாளிகையை பதினாறு தூண்கள் தாங்குமா? பேரரசருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அரசர், கட்டிட வல்லுநரை கூப்பிட்டு, “இன்னும் இரண்டு தூண்கள் கூடுதலாக கட்டுங்கள்” என்று ஆணையிட்டார்.

பேரரசர் கட்ட சொன்ன இரண்டு தூண்கள் அவசியமில்லாதது என கட்டிட வல்லுநர் கருதினார். ஆனால், ஆணையிட்டவார் பேரரசர் ஆயிற்றே! யோசித்தார்.

இதையும் படியுங்கள்:
நாலு பேர் உங்களை மதிக்கணுமா. அப்போ இந்த 5 ரகசியத்தை உடனே ஃபாலோ பண்ணுங்க!
Errors in human life

கூடுதலாக இரண்டு தூண்கள் கட்டி முடிக்கப்பட்டது. பேரரசருக்கும் திருப்தி ஏற்பட்டு பாராட்டினார். கட்டிட வல்லுநர் கூடுதலாக  இரண்டு தூண்கள் கட்டினாரே ஒழிய, அந்த இரு  தூண்களும் பெரிய மாளிகையை தாங்காதவாறு, இரண்டு அங்குல இடைவெளி விட்டு கட்டப்பட்டது. இது பேரரசர் பார்வையில் படாத உயரத்தில் இருந்தது. பேரரசரை திருப்திப்படுத்த வேண்டுமே என்று  கட்டிட வல்லுநர் தெரிந்தே செய்த பிழை தான் இது.

இந்தப் பிழையைச் செய்யாது பேரரசரிடம், தாம் கட்டிட துறையில் வல்லவன்; நல்லவன் என வாக்குவாதம் செய்து இருந்தால், கட்டிட வல்லுநர் கதை அல்லவா பிழையாகி போய் இருக்கும்.

இப்பொழுதுதான், கணக்கு எழுதுவதற்கு ‘டேலி’ பயன்படுத்தப்படுகிறது. முன்பெல்லாம் கணக்கு பிள்ளைகள் கணக்கு எழுதி அதை சரிபார்க்க  ‘ஐந்தொகை’ போடுவார்கள். அதுதான் இன்று டிரையல் பேலன்ஸ் ஆகும். ‘ஐந்தொகை’ ஒரே தடவையில் சரியாக வந்து விட்டால், ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அதில் பிழை இருக்கிறது. மீண்டும் சரி பார்க்க சொல்வார்கள்.

மீண்டும் சரி பார்த்தால், பிழை நிச்சயம் கண்ணுக்கு புலப்படும். அந்தப் பிழைதான் ‘ஐந்தொகையை’ சரி செய்வதற்கான சரியான  விடையாகும்.

இதையும் படியுங்கள்:
சிறந்த மேலாளராக மாற இதோ 7 'மேஜிக்' சூத்திரங்கள்!
Errors in human life

பிழைகள் யாரிடமும்  தோன்றும். வீட்டுப் பாடங்கள் ஒழுங்காக எழுதும் பிள்ளைகளிடமும், அலுவலகங்களில் ஒழுங்காக வேலை செய்யும் பணியாளர்களிடமும் பிழைகள் தோன்றும். அவர்களிடமே ஆசிரியர்களும், அலுவலர்களும் பிழைகளைக் கண்டுபிடிப்பார்கள்.

வீட்டுப்பாடம் எழுதாத பிள்ளைகள், வேலையே செய்யாத பணியாளர்கள். அந்த பிழைகள்தாம்,  அவர்களை இனங்கண்டு கொள்ளக்கூடிய ஆதாரமானதாகும்.

“நான் பிழை செய்யாத நூறு சதவீத அக்மார்க் ஆள்” என்று யாராவது பீற்றிக் கொண்டால், அதுவே பிழை என நாம் எண்ண வேண்டும்.

காவல் துறையில் விசாரணையின் போது  பிழைகள் உள்ள வாக்குமூலங்கள் தரும் நபர் நிரபராதியாகவும், பிழையே இல்லாது மனப்பாடமாக சாட்சிய சந்தர்ப்பங்களை வாக்குமூலங்கள் தரும் நபர்களை குற்றவாளிகளாக கண்டறிவது வழக்கமான நடைமுறையாகும். ஏன் என்றால், குற்றவாளிகள்தான் குற்றத்தை மறைக்க முன்னேற்பாடாக எல்லாவற்றையும்  நினைவில் வைத்துக் கொள்வார்கள். நிரபராதிகளின் எந்த செயலையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பிழைகள் ஏற்படாமல் வாழ முடியாது. அப்பிழைகள் மற்றவரின் உயிருக்கும், தன்மானத்திற்கும் உலை வைக்காதவரை பிழை நல்லதுதான்.

பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள். பிழைகளை பேரின்பமாக மாற்றிக் கொள்ளுங்கள். இதுவே பொன்னான பாதையில் செல்ல உதவும் வழியாக கூட இருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com