
நம்முடைய உடலை நோயற்றுப் பாதுகாக்கவும் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கவும் உடலின் செல்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் நம்மை உடல் பலத்துடன் வைத்துக் கொள்ளவும் புரதச்சத்து மிகவும் அவசியம். தினசரி நாம் சாப்பிடும் உணவு பசிக்காகவும் ருசிக்காகவும் மட்டும் இல்லாமல் புரதம் நிறைந்ததாக இருந்தால் மட்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்கிறார்கள். நம் உடலில் தங்கும் கிருமிகள், சட்டென ஏற்படும் காயம் போன்ற பிரச்சனைகளுக்கு எதிர்ப்பாற்றல் சக்தியை தரக்கூடியதும் இந்த புரதச்சத்துதான்.
நமக்கான பெரிய பற்றாக்குறையான சத்து புரதம். மற்ற நாடுகளில் எல்லாம் புரதச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் 50 சதவீதம் மக்களிடம் புரதச்சத்து என்பது மிகவும் குறைவாகவே உள்ளது என்கிறது ஐ.நாவின் ஆய்வு குறிப்புகள். தற்போது புரதம் எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பொதுவாகவே மருத்துவர்கள் ஒரு கிலோவிற்கு 6 கிராம் புரதம் தேவை என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் நம் உடலில் ஒரு கிலோ எடைக்கு 6 கிராம் புரதம் என நம் உடலின் எடைக்கு ஏற்றவாறு புரதச்சத்தை கணக்கிட்டு நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அசைவம் சாப்பிடுபவர்களுக்கு புரதம் நிறைய கிடைக்கிறது. சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு புரதத்திற்காக கூடுதல் உணவுகளை தேடி சாப்பிட வேண்டும். சைவ உணவுகளில் எல்லாம் ஒரே மாதிரி புரதம் இருப்பது இல்லை. உதாரணமாக 'பீனட் பட்டரில்' புரதம் அதிகம். ஆனால் அதிகமாக சாப்பிட முடியாது... அதே வேளையில் பன்னீரில் கலோரி குறைவு ஆனால் கொழுப்பு அதிகம்.
அதிக புரோட்டீனும் குறைந்த கலோரியையும் கொண்ட உணவுகள்.
பீனட் பட்டர் - சைவ பிரியர்களுக்கு ஒரு நல்ல புரத மூலமாக உள்ளது. மேலும் வைட்டமின் பி6, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, செலினியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 கிராமில் 635 கலோரியும் 25 கிராம் புரோட்டீனும் உள்ளது.
பாதாம் பருப்பு - புரதத்துடன் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. 100 கிராமில் 610 கலோரியும், 20 கிராம் புரதமும் உள்ளது.
சியா விதை - 100 கிராமில் 530 கலோரிகள் இருக்கிறது. புரோட்டின் 20 கிராம், 34 கிராம் ஃபைபர் இருக்கிறது. கொழுப்பு, 30 கிராம் அளவுக்கு இருக்கிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு 17 கிராம் இருக்கிறது. கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்களும் அடங்கியுள்ளது.
கொண்டைக் கடலை - புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கும் இதில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைடிரேட் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சிக்கும் உதவும். இதில் 100 கிராமில் 385 கலோரியும் 20 கிராம் புரோட்டீனும் உள்ளது.
குயினோவா - ஒரு முழுமையான புரதம். இதில் 9 அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன. 100 கிராமில் 330 கலோரியும் 15 கிராம் புரோட்டீனும் உள்ளது.
பருப்புகள் - இதிலுள்ள அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். இதய நலன் காக்கும். 100 கிராமில் 325 கலோரிகள் மற்றும் 25 கிராம் புரதமும் உள்ளது.
பதப்படுத்தப்பட்ட சீஸ் - புரதத்தின் ஒரு நல்ல மூலமாகும். இது தசைகள் பழுதுபார்ப்பதற்கும், வளர்வதற்கும், ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கும் அவசியம். கால்சியம் சத்தின் சிறந்த ஆதாரம். சீஸ் 100 கிராமில் 310 கலோரியும், 20 கிராம் புரதமும் உள்ளது.
பனீர் - புரதம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களின் ஒரு நல்ல மூலமாகும். இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 100 கிராமில் 280 கலோரியும் 20 கிராம் புரோட்டீனும் உள்ளது.
அவகாடோ பழம் - இதில் 20-க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் உள்ளது. இதனுடன் தாதுக்கள், மினரல்கள் போன்றவை நிறைந்துள்ளன. 100 கிராமில் 160 கலோரிகள் மற்றும் 2 கிராம் புரோட்டீனும் உள்ளது.
டோஃபு - சோயா பீன்ஸில் இருந்து தயாராகும் இது சிறந்த தாவர புரதமாகும் . தசைகள் வளர்ச்சிக்கு உதவும் புரதம் . 100 கிராமில் 115 கலோரியும் 15 கிராம் புரோட்டீனும் உள்ளது.