
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது மிகவும் முக்கியம். திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதில் ரிஸ்க் எடுப்பதும் ஒரு இன்றியமையாத விஷயமாகும். ரிஸ்க் எடுக்கும் திறன்தான் ஒருவரது இலக்குகளையும் கனவுகளையும் அடையவும், தனி நபர் வளர்ச்சி மற்றும் தம்மை சுற்றியுள்ள உலகிற்கு நன்மை செய்யவும், அர்த்தமுள்ள பங்களிப்புகளை செய்யவும் உதவுகிறது.
ரிஸ்க் எடுப்பதற்கான அவசியமும் காரணங்களும்
1. இலக்குகளை அடைய வைக்கிறது:
ரிஸ்க் எடுப்பதற்கான மிக முக்கியமான காரணங்களில் முதன்மையானது ஒருவரது இலக்குகளையும் கனவுகளையும் பின் தொடர வைப்பதுதான். ஒருவர் மிக மோசமான நிலையில் வாழ்ந்தாலும், ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால் மிக உயரத்திற்குச் செல்ல முடியும். அவரது இலக்கை அடைவதற்கு ரிஸ்க் எடுக்கத் துணியும் மனோநிலை இருந்தால் அவரது முயற்சிகள் வெற்றி பெறும்.
2. புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது:
வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களும் சாதனைகளும் ஒரு புதிய வாய்ப்பைப் பெறுவதில் இருந்தே தொடங்குகின்றன. ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பதாக இருந்தாலும் தொழிலை தொடங்குவதாக இருந்தாலும் யாரையாவது உதவி கேட்பதாக இருந்தாலும் அவற்றில் ரிஸ்க் இருக்கின்றன.
விரும்பிய வேலை கிடைக்காமல், கேட்ட உதவி கிடைக்காமல் தொழில் தொடங்குவதில் சிரமங்களும் ஏற்படலாம். ஆனால் மனம் சோர்ந்து போகாமல், இதற்கு மாற்று வழி என்ன செய்யலாம் என்று யோசித்து புதிய வாய்ப்புகளை உருவாக்க வைக்கிறது, தேடிச்செல்லவும் வைக்கிறது.
3. தோல்விகளை எதிர்கொள்ளும் தைரியம்:
எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் யாராலும் வெற்றியடைய முடியாது. தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்திக்க நேரும். ஆனாலும் அவற்றை தைரியமாக எதிர்கொள்ளும் துணிச்சலையும் மீண்டும் அவற்றை செய்யலாம் என்கிற நம்பிக்கையையும் ரிஸ்க் எடுக்கும் திறன் உருவாக்குகிறது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையைத் தருகிறது.
4. தனிப்பட்ட வளர்ச்சி:
ஒரு ரிஸ்க்கான வேலையை செய்யும்போது அதிலுள்ள சிரமங்களையும் சிக்கல்களையும் எதிர்கொண்டு சமாளித்து விடும் ஆற்றல் கிடைக்கிறது. இதனால் ஒரு மனிதர் தன்னுடைய பலம், மதிப்பு, திறன், ஆற்றல் போன்றவற்றை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும். ஆபத்தான சூழ்நிலைகளை வெற்றிகரமாக கையாள்வது தன்னம்பிக்கையை கணிசமாக அதிகரிக்கும். தான் திறமையானவர் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை ஒரு மனிதருக்கு தருவதன் மூலம் அவரது தனிப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.
5. புதுமை:
பழகிய இடத்திலேயே இருப்பது, தெரிந்த வேலையை செய்வது ஒரு நாளும் முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது. ஆனால் ரிஸ்க் எடுத்து புதிய விஷயங்களை செய்யத் தொடங்கும்போது புதுமையான யோசனைகள் பிறக்கும். ஒரு புதிய தொழிலை கையில் எடுக்கும் போது அதில் என்னவெல்லாம் புதுமையாக செய்ய முடியும் என்கிற உத்திகளும் யோசனைகளும் பிறக்கும். அவற்றை முயற்சி செய்யவும் புதுமையான தீர்வுகளை கண்டறியவும் முடியும்.
6. புதிய அனுபவங்கள்:
வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் மனிதர்களை பண்படவும், கற்றுக் கொள்ளவும் வைக்கின்றன. ஒரு மனிதனுக்கு கூடுதல் ரிஸ்க் எடுத்துச் செய்யும் செயல்கள் புதிய, அரிய, அபூர்வமான அனுபவங்களைப் பெற்றுத்தரும். அவை தனக்கு மட்டும் அல்லாமல், பிறர்க்கும் பயன்படக் கூடிய பாடங்களாக இருக்கும்.
பல வெற்றிகரமான தொழில் முனைவோர் மற்றும் தலைவர்கள் தங்கள் வெற்றிக்கு காரணம், வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க தாங்கள் தயாராக இருந்தது தான் என்று கூறுகிறார்கள். இனி ரிஸ்க் எடுக்கறதுன்னா ரஸ்க் சாப்பிடற மாதிரி என நினைத்துக்கொண்டு நாமும் ரிஸ்க் எடுத்து வாழ்வில் உயர்வோம்.