
இந்த உலகில் வெற்றி பெறுவதற்கு திறம்பட பேசும் திறன் ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். வயதில் மூத்தவர்களிடம் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களிடம், அந்நியர்களிடம் பேசும் போது சிலர் பதட்டமாக அல்லது தயக்கமாக உணர்கிறார்கள், இந்த ஆரம்பக்கட்ட பயத்தை வெல்வது பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை. பேச்சுத் திறனை வளர்த்துக் கொண்டால்தான் ஒருவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் முன்னேற முடியும்.
பலரும் தன் வயதை ஒத்த, தனக்குத் தெரிந்தவர்களிடம் பேசும் போது சகஜமாக பேசுவார்கள். ஆனால் வயதில் மூத்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், அலுவலகத்தில் தனது மூத்த அதிகாரிகள் மற்றும் அறிமுகமில்லாத மனிதர்களிடம் பேச அஞ்சுவார்கள். இந்தப் பிரச்சனையை எளிதாக சரி செய்யலாம். அவற்றுக்கு சில பயிற்சிகள் அவசியம்.
1. சுத்தமான உடையலங்காரம்:
அழகாக உடை உடுத்திக் கொண்டால் அது தனியான தன்னம்பிக்கையை தரும். மிகவும் விலையுயர்ந்த அல்லது புதிய உடைகளை அணிய வேண்டியதில்லை. இருக்கும் உடையை நீட்டாக அயர்ன் செய்து அணிந்து கொள்ளலாம். அதேபோல தோற்றத்தில் கவனம் வைத்து, ஒழுங்காக தலை சீவி நேர்த்தியாக இருக்க வேண்டும். இது பிறரிடம் இருந்து உங்களை வித்தியாசமாக வேறுபடுத்தி காட்டும். உங்கள் மீது மரியாதையும் வரும்.
2. தெளிவு/ எளிமை:
சொல்ல வந்த விஷயத்தை சுற்றி வளைத்து சொல்லாமல், எளிமையான வார்த்தைகளால் தெளிவாகப் பேசுவது முக்கியம். சிலர் ஆங்கிலத்தில் கடினமான வார்த்தைகளை தேடித் தேடி பேசுவார்கள். ஆனால் அதில் எந்தப் பயனுமில்லை. தனது தாய் மொழியிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதட்டமின்றி பேச வேண்டும்.
3. உடல் மொழி/ குரல் தொனி:
பேசும்போது இயல்பாக இருக்க வேண்டும். பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் மொழி மொழியில் தனி கவனம் செலுத்த வேண்டும். தோள்களைக் குறுக்காமல் நேராக நின்று, பிறருடைய கண்களைப் பார்த்து பேச வேண்டும். நிமிர்ந்து நின்று, பேசும்போதும் நடக்கும் போதும் அது தனி கம்பீரத்தைத் தரும். பிறரிடம் கைகுலுக்கும் போது முரட்டுத்தனமாகவோ, லூசாகவோ இல்லாமல் உறுதியாக கைகுலுக்க வேண்டும். இது ஒருவருடைய தன்னம்பிக்கையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.
4. பேசும் முறை:
யாரிடம் பேசுகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். குழந்தைகளிடம் பேசும் போது அவர்களுடைய நிலையிலிருந்து புரிந்து கொண்டு பேச வேண்டும். மூத்தவர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும். சக வயதில் இருப்பவர்களிடம், சகாக்களிடம் சமமாக சகஜமாக பேசலாம். தலைவர்கள் தங்களுடைய தொண்டர்களிடம் பேசும் போது அருமையான தகவல் தொடர்புகளை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் தான் அவர்களுக்கென்று ஒரு தனிக்கூட்டமே இருக்கிறது.
5. பயிற்சி:
பேச்சு என்பது ஒரு கலை. அதைப் பயிற்சி செய்து பேசும்போது அந்தக் கலை கைவரப் பெறும். சிறந்த பேச்சாளர்கள் அல்லது தகவல் தொடர்பில் சிறந்தவர்கள் பிறருடைய நிலையில் நின்று பேசுவார்கள். புரிதலையும் ஆதரவையும் அவர்களது வார்த்தைகள் வெளிப்படுத்தும். தினமும் வீட்டில் கண்ணாடியைப் பார்த்து நன்றாக பேசிப் பழக வேண்டும். தனக்கு உற்சாகமளிக்க, ஊக்கமளிக்க, நேர்மறையான சுய உறுதிமொழிகளை பேசுவது தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
6. சிறந்த பேச்சு:
பேச்சில் பணிவு இருக்க வேண்டும். பிறர் பேசும் போது கூர்மையாக கவனித்துக் கேட்க வேண்டும். சின்ன சின்ன சொற்றொடர்களாக புரியும் வண்ணம் பேச்சு இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களை பேசக்கூடாது. நீங்கள் பேசுவது பிறரை மேம்படுத்தும் வகையிலும் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும். முக்கியமாக யார் மனதையும் காயப்படுத்தாத வகையில் பேச்சு இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் நீங்கள் தான் பேச்சில் ராஜா.