சண்டை போட போறீங்களா? கொஞ்சம் நில்லுங்கள்!

வாழ்வில் ஒன்றுக்கும் பயனில்லாத அன்றாட சண்டைகளை விட்டொழித்தாலே நாம் எதை சாதிக்க ஆசைப்படுகிறோமோ அதை நோக்கி நம்மிடைய பீடு நடை தொடங்கி விடும்!
Keep Calm
Inner peace and success
Updated on

ஒரு முறை ஒரு சாதனைப் பெண்மணியைப் பார்த்து "உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக விளங்குவதற்கான ரகசியங்கள் என்ன? எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அந்த கேள்வி அவர் முகத்தில் ஒரு புன்முறுவலை பூக்கச் செய்தது.

"நானும் எல்லோரையும் போல ஒரு சாமான்ய பெண்ணாகத் தான் இருந்தேன். தினந்தோறும் கோபம், தாபம், மன உளைச்சல் என்று அலைக்கழிந்து கொண்டு தானிருந்தேன். பிறகு யோசித்து, யோசித்து சின்னச் சின்ன வாக்குவாதங்கள், சண்டைகள் எல்லாவற்றையும் சிறிய லெவலில் சண்டை போடுபவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டேன். அதிலிருந்து விடுபட்டவுடனேயே என் வெற்றி ஆரம்பித்து விட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது."

"அதன் பிறகு என்னைப் பற்றி வம்பு பேசுபவர்களினால் ஆத்திரமடைந்து, சம்பந்தப்பட்டவர்களோடு போடும் சண்டைகளையும் நிறுத்திக் கொண்டேன். என் கூடவே இருந்து குழி பறிக்கும் கூட்டாளிகளோடு ஏற்படும் சச்சரவுகள், அதனால் நடக்கும் காராசாரமான விவாதங்கள், அதன் விளைவாகப் போடும் சண்டைகள் எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தேன். எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்கிற உந்துதல், அதற்காகப் பாடுபடுதல் அதன் பொருட்டு சண்டைகள் போடுவதை விட்டு விட்டேன். பிறர் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று எப்பொழுதும் யோசித்து கவலைப்பட்டு அதற்காக போடும் சண்டைகளையும் விட்டு விட்டேன்."

"பல வேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். அதன் விளைவுகள் தான் சண்டை சச்சரவுகள் என்பது நமக்குப் புரிவதில்லை. கோபம் இருந்தால்தான் நமக்கு வீரம், தைரியம், ஏன் நாம் மனிதர்கள் என்றே மற்றவர்கள் மதிப்பார்கள் என்று தப்பாக அர்த்தம் செய்துக் கொள்கிறோம். கோபத்தின் விளைவுகளாலான இந்த மாதிரி சண்டைகள், சண்டை போடுவதற்கு விஷயங்கள் இல்லாமல் ஆவேசமாகத் துடித்துக் கொண்டு இருப்பவர்களுக்கென்றே பிரத்யேகமாக இருக்கட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டேன்." 'கல கல' வென்று சிரித்தார் அந்த பெண்மணி.

"நான் என் வாழ்க்கையை இப்பொழுது உற்று நோக்க ஆரம்பித்தேன். இந்த வாழ்க்கையில் என் குறிக்கோள் என்ன, என் கனவுகள் என்ன, நான் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் சாதிக்க வேண்டிய விஷயங்கள் மட்டுமே என் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. என் கவனம் அதிலேயே இருந்தது. எந்த நாளில் இந்த சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகளை நான் தவிர்த்து அதிலிருந்து முழுமையாக வெளியே வந்தேனோ அந்த நாளிலிருந்தே என் வெற்றி ஆரம்பித்து விட்டது".

இதையும் படியுங்கள்:
சண்டை இல்லாத சம்சார வாழ்க்கை வேண்டுமா? இந்தச் சிறு மாற்றங்களைச் செய்து பாருங்கள்!
Keep Calm

வாழ்வில் ஒன்றுக்கும் பயனில்லாத அன்றாட சண்டைகளை விட்டொழித்தாலே நாம் எதை சாதிக்க ஆசைப்படுகிறோமோ எதற்காக நாம் பாடுபட வேண்டுமோ அதை நோக்கி நம்மிடைய பீடு நடை தொடங்கி விடும்! வெற்றி துவங்கிவிடும்!

logo
Kalki Online
kalkionline.com