வாழ்க்கை ஒரு போராட்டமா? பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சந்திக்காததா? படிங்க பாஸ்...

சாதிப்பதற்கான மனத்திடம் இருந்தால் சாதனை என்பது எட்டாக்கனி அல்ல!
Benjamin Franklin
Benjamin Franklin - motivation life story
Updated on

தனது தந்தைக்கு, தான் பதினைந்தாவது குழந்தையா அல்லது பதினாறாவது குழந்தையா என்று கூடத் தெரியாத அளவுக்குப் படிப்பறிவு இல்லாத சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்!

மெழுகுவர்த்தி உற்பத்தி செய்து விற்பனை செய்த இவரது தந்தையால் ஃப்ராங்க்ளினை ஒரே ஒரு வருடம்தான் பள்ளிக்கூடம் அனுப்ப முடிந்தது. பிறகு பன்னிரெண்டு வயதைத் தாண்டும் முன்னரே தனது அண்ணனின் அச்சகத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்.

அச்சகம் என்பதால் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அச்சடிப்பதற்காக வந்த கையெழுத்துப் பிரதிகள் அனைத்தையும் ஃப்ராங்க்ளின் படிப்பார். அவருக்குப் படிப்பதில் ஆர்வம் இருந்ததால் தனக்குக் கூலியாகக் கிடைத்த பணத்தையெல்லாம்கூட புத்தகங்கள் வாங்குவதற்கே பயன்படுத்தினார். ஃப்ராங்க்ளின் ஓரளவுக்கு வளர்ந்ததும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு, தான் வேலை செய்த அச்சகத்தையே விலைக்கு வாங்கினார்.

பிறகு சொந்தமாகப் பத்திரிகை ஆரம்பித்தார். பத்திரிகை அமோகமாக விற்பனையாக, ஃப்ராங்க்ளின் அமெரிக்காவின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்தார். காகிதப் பணம், தீயணைப்பு, இன்ஸ்யூரன்ஸ், கார்ப்பரேட், மருத்துவமனை, வீதிகளைச் சுத்தமாகப் பராமரிப்பது என்று கால் பதித்த ஃப்ராங்க்ளின் பல துறைகளிலும், அமெரிக்காவுக்கு அத்தனை துறைகளிலும் வழிகாட்டியாக இருந்தார். இன்று பெரும்புகழோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இவர் நிறுவியதுதான்.

சுதந்திரம் அடைந்த பின்னர் அமெரிக்கா முதன்முதலில் இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது. அதில் ஒன்று தனது முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டளைக் கௌரவப்படுத்த, இரண்டாவது பெஞ்சமின் ஃப்ராங்க்ளிளை நினைவுகூற!

இதையும் படியுங்கள்:
ஸ்ட்ரெஸ்ஸை 'ஸ்விட்ச் ஆஃப்' செய்ய முடியுமா? நகைச்சுவை எனும் மேஜிக் பட்டன்!
Benjamin Franklin

வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னம்பிக்கை நிறைந்தவருக்கே வெற்றி கிடைக்கிறது என்பதற்கு பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுடைய வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.

தன்னம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அதை நாம் வளர்த்துக்கொள்வது கிடையாது.

தன்னம் பிக்கையை வளர்த்துக் கொண்டவர்கள் சாதிக்கிறார்கள். வரலாறு படைக்கிறார்கள். தன் பெயரை உலகம் புகழும் பெருமையைத் தேடிக் கொடுத்துவிட்டு மரணிக்கிறார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் புலம்பிப் புலம்பியே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.

இதுவரை சாதித்தவர்கள் யாருக்கும் 'ஏழு அறிவு' இருந்ததென்று கூற முடியாது. சாதித்தவர்களும் நம்மைப் போல ஆறறிவு படைத்தவர்கள் தான்.

வாழ்க்கையில் எந்த இடத்தில் தட்டினால் எப்படி வெற்றி பெறலாம் என்பதை தெரிந்து கொண்டவர்கள் அவர்கள். அதற்காக பல கசப்பான அனுபவங்களை கூட அவர்கள் சந்தித்து இருப்பார்கள்.

ஆகவே, சாதிப்பதற்கான மனத்திடம் இருந்தால் சாதனை என்பது எட்டாக்கனி அல்ல.

logo
Kalki Online
kalkionline.com