
நம்பிக்கை. இந்த ஒற்றைச்சொல் யானையின் தும்பிக்கையைவிட பலம் வாய்ந்தது. நம்பிக்கை ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து முயன்று முன்னேறி சாதித்து புகழின் உச்சியைத் தொட்டவர்கள் ஏராளம். எவ்வளவு பெரிய திறமைசாலிகளாக இருந்தாலும் நாள் முழுவதும் உழைத்தாலும் “நம்பிக்கை” என்ற ஒரு விஷயம் மனதில் இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றி பெறவே முடியாது. சாதிக்கவும் முடியாது.
இத்தகைய நம்பிக்கையை உங்கள் குழந்தைகளின் இளம்வயதிலேயே அவர்களின் மனதில் விதைத்து அவர்களை சாதனையாளர்களாக மாற்ற வேண்டியது பெற்றோர்களாகிய உங்கள் தலையாய கடமை என்பதை மனதில் வையுங்கள்.
அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ். ஆனால் இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும் பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரை துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.
பயணம் பல மாதங்கள் நீடித்தன. திட்டமிட்டபடி எதையும் கொலம்பஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டது. அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். ஆனால் கொலம்பஸோ அவர்களின் நம்பிக்கை இழந்த சொற்களை காதில் வாங்கவே மறுத்துவிட்டார். திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார். தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் அவர் மனதில் நிறைந்திருந்தது.
கொலம்பஸ் உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள். அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்றுவிட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.
மறுநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார். உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப்போகிறார்கள்.
அச்சமயத்தில் கொலம்பஸ் சந்தோஷத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து வந்து கொண்டிருந்தன. அருகில் ஒரு நிலப்பரப்பு இருக்கிறது என்பதை கொலம்பஸ் இதன் மூலம் புரிந்துகொண்டார். தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்ததுபோல அது இந்தியா அல்ல. அமெரிக்கா. கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
சிலர் தங்கள் பிள்ளைகளை பிற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டிப் பேசுவதைப் பார்க்க நேரிடுகிறது. இது பெரும் தவறு என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும். சில பெற்றோர் ஒருபடி மேலே சென்று "நீ எதுக்கும் லாயக்கில்லை" என்று கடுமையாகப் பேசுவதையும் காண நேரிடுகிறது. ஒரு சிறு மண்புழு நிலத்தைக் கிளறி உழவர்களுக்கு பெரும் உதவியைச் செய்கிறது.
ஆறறிவு படைத்த ஒரு சிறுவனால் பெரும் செயல்களைச் செய்ய முடியாத என்ன? “நீ எதற்கும் லாயக்கில்லை” என்று கூறி அவர்களை மட்டம் தட்டுவதற்கு மாறாக “முயற்சி செய். உன்னால் எதையும் சாதிக்க முடியும்” என்ற நம்பிக்கை வார்த்தைகளைப் பிரயோகித்துப் பாருங்கள். அவர்கள் சாதனை குழந்தைகளாக ஜொலிப்பார்கள்.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு திறமை இருக்கத்தான் செய்கிறது. அந்த திறமையைக் கண்டறிந்து அவர்களை நம்பிக்கைச் சொற்களின் மூலம் ஊக்குவித்து வாழ்க்கையில் உயரச்செய்வதே நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கவேண்டும். நம்பிக்கையை விதைப்போம். சாதனைகளை அறுவடை செய்து மகிழ்வோம்.