
சேமிப்பு என்பது ஒவ்வொரும் தம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கும் வழக்கம் என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். இளம் வயதிலிருந்து சேமிக்கும் வழக்கத்தைக் கடைபிடிப்பவர்கள் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள்.
உங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கு ஒரு மண் உண்டியலை வாங்கிக் கொடுங்கள். அதில் நீங்கள் தினமும் அவர்களுக்கு இரண்டு ரூபாயைக் கொடுத்து அதில் பாதியை உபயோகமான முறையில் செலவழிக்கக் கற்றுத் தந்து மீதமிருக்கும் பாதியை மண் உண்டியலில் போட்டு சேமிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இது சிறுதொகைதான். ஆனால் அதை சிறுவர்களான அவர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுத்தரும்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் பத்தாம் வகுப்பை நெருங்கியதும் தபால் அலுவலகத்தில் மாதாமாதம் நூறு ரூபாய் அல்லது இருநூறு ரூபாயை செலுத்தும் வகையில் ஒரு தொடர் வைப்புக் கணக்கினைத் (Recurring Deposit) தொடங்கி அந்த கணக்கில் மாதாமாதம் அவர்களுக்கு பணத்தைத் தந்து அதை அவர்களே தபால் அலுவலகத்தில் டெபாசிட் செய்யும்படிச் செய்யுங்கள்.
ஐந்து வருடங்கள் இந்த திட்டத்தில் சேமித்து வந்தால் முடிவில் ஒரு பெரும்தொகை கிடைக்கும். இத்தகைய செயல்கள் அவர்களுக்கு சேமிப்பின் ஆர்வத்தை மனதில் விதைக்கும். பிற்காலத்தில் இது அவர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு செம்மையாக அமைத்துக்கொள்ள உதவும்.
நாங்கள் படித்த காலத்தில் எங்கள் பள்ளிகளில் “சஞ்சயிகா” என்ற சிறுசேமிப்பு வங்கிக்கணக்கு இருந்தது. பள்ளி மாணவர்கள் ஒரு சேமிப்புக் கணக்கைத் துவக்கி தங்களிடம் இருந்த இருபத்தி ஐந்து காசு ஐம்பது காசு முதலான சிறுதொகையை அவ்வப்போது அதில் சேமித்து வருவார்கள். பள்ளிப்படிப்பை முடித்துச் செல்லுகையில் மாணவர்களின் கணக்கில் உள்ள தொகையை பள்ளி நிர்வாகத்தினர் திருப்பித் தருவார்கள். இது ஒரு சிறந்த திட்டமாகும். பள்ளிப்பருவத்திலிருந்தே சேமிக்கும் வழக்கத்தை உருவாக்க அக்காலத்தில் இத்திட்டம் பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
தற்காலத்தில் வங்கிகளில் ஒரு வயது முதல் பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சேமிப்புக் கணக்குத் துவக்கும் வசதி உள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மேற்பார்வையில் இந்த கணக்கு துவக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு பதினெட்டு வயது பூர்த்தியானதும் அந்த கணக்கை வழக்கமான சேமிப்புக் கணக்காக மாற்றிக்கொள்ளலாம்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இத்தகைய சேமிப்புக் கணக்கு ஒன்றைத் துவக்கி உண்டியலில் சேமிக்கும் பணத்தை ஒவ்வொரு மாதமும் வங்கிக்கணக்கில் செலுத்தி வரவேண்டும். “சிறுதுளி பெருவெள்ளம்” என்பார்கள். சிறுசேமிப்புக்கு இந்த பழமொழி பெரிதும் பொருந்தி வரும். இப்படியாக சிறுக சிறுக சேமிக்கும் தொகையானது ஒரு கட்டத்தில் பெருந்தொகையாக மாறி அவர்களுக்கு பிரமிப்பூட்டும்.
பெரும் செல்வந்தர்கள் கூட திட்டமிட்டு சேமிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்துவிடக்கூடிய சூழ்நிலைகள் உருவாவதையும் நாம் பார்க்கிறோம். குறைவாக சம்பாதிக்கும் பலர் தங்கள் வருமானத்தில் மாதந்தோறும் ஒரு சிறுதொகையை முறையாக சேமித்து நிம்மதியாக வாழ்வதையும் நாம் காண்கிறோம்.
சேமிப்பு என்பது எதிர்காலத்திற்கும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்கவும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை நம் வீட்டுச் சிறுவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். வாசிக்கும் வழக்கமும் சேமிக்கும் வழக்கமும் ஒரு மனிதனின் இரண்டு கண்கள் என்பது அனுபவப்பூர்வமான உண்மை.
சிறுவயதில் சிறுவர்களுக்கு ஏற்படும் சேமிப்புப் பழக்கம் அவர்களின் மனதில் நிரந்தரமாகப் பதிந்து அப்பழக்கம் அவர்தம் ஆயுள் முழுவதும் தொடரும். இதனால் அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாய் பிரகாசிக்கும். இன்றே உங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கு ஒரு உண்டியலை வாங்கிக் கொடுத்து அவர்களின் மனதில் சேமிப்பின் அவசியத்தை ஏற்படுத்துங்கள்.