
Gen – Z க்கள் வாழ்வில் விரைவில் வெற்றிபெற விரும்பினால் சில விஷயங்களைத் தவிர்த்தும் சிலவற்றை அவசியம் செய்யவும் வேண்டும். அந்த முக்கியமான 7 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. இன்டெர்நெட் எல்லா நேரத்திலும் உங்கள் நண்பனல்ல;
விரல் நுனியில் எக்கச்சக்க தகவல்கள், வேடிக்கையும் கேளிக்கையும் நிறைந்த விளையாட்டுகள், பொழுது போக்குகள் என நாள் முழுவதும் இணைய உலகம் உங்களை மகிழ்விக்கும். அதேநேரத்தில் ஏராளமான மனச்சோர்வையும், அழுத்தத்தையும் தரும். பல மணி நேரங்களை விழுங்குவதோடு ரீல்ஸ் வீடியோக்களில் காட்டப்படும் நிழல் உலகம் குறித்து ஏங்கவும் வைக்கிறது. தெளிவாக சிந்திக்கும் திறனை இணையம் மழுங்கடிக்கும். எனவே தேவைக்கு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும்.
2. வெற்றி ஒரே இரவில் கிடைக்காது;
ஆன்லைனில் பிடித்த உணவு, உடையை வெகு சீக்கிரம் பெறும் வசதியும், பெருகிவிட்ட தொழில்நுட்ப வசதியும் ஏராளமாக இருந்தாலும் வெற்றி என்பது திரைப்படத்தில் வருவதுபோல ஒரே இரவில் கிடைத்துவிடாது. அதை அடைய நிதானம், பொறுமை, கடினஉழைப்பு, விடாமுயற்சி, சிக்கல் தீர்க்கும் திறன், தோல்வியைத் தாங்கும் மனவலிமை என இத்தனையும் தேவை.
3. எல்லோருக்கும் உங்களைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை;
சமூக வலைதளங்களில் எளிதில் கிடைக்கும் லைக்குகள்போல நிஜ வாழ்வில் கிடைக்காது. எல்லோருக்கும் உங்களைப் பிடிக்காது. எத்தனை நல்லவராக, அன்பானவராக, பிறருக்கு உதவும் இயல்போடு இருந்தாலும் யாராவது சிலர், குற்றம் குறை சொல்லிக்கொண்டே தானிருப்பார்கள். எல்லா மனிதர்களையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் மற்றவர்கள் மீது ஒருபோதும் அதிருப்தி ஏற்படாது.
4. தோல்வி ஒரு அழகிய அனுபவப்பாடம்;
இளம் வயதில் தோல்வியை சந்திப்பது வருத்தமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கலாம். ஆனால் அது நிறைய அனுபவங்களை அள்ளித் தருகிறது. தம்மை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பைத் தருகிறது. தோல்வி வலியைத் தருவதாக இருந்தாலும் கூடவே பக்குவம் சகிப்புத்தன்மை போன்றவற்றையும் சேர்த்தே தருகிறது.
5. கம்போர்ட் சோன் என்பது ஆபத்தானது;
பழகிய, பிடித்த இடத்தில் வாழ்வதும் வேலை செய்வதும் மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். ஆனால் வளர்ச்சியும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கும். புதிய விஷயங்களில் ரிஸ்க் எடுக்கத் தேவையான துணிச்சலையோ ஊக்குவிப்பையோ கம்போர்ட் சோன் தராது. எனவே அதை விட்டு வெளியே வர கற்றுக்கொள்ள வேண்டும்.
6. பண மேலாண்மை;
இளம் வயதில் ஆன்லைன் ஷாப்பிங், காண்டாக்ட் லென்ஸ் பேமென்ட் என்பது டிஜிட்டல் உலகில் ஒரு மாயாஜாலம் போலத் தெரியும். ஆனால் பண மேலாண்மையை அது கண்டிப்பாக கற்றுத்தராது. பணம் சம்பாதிப்பது மட்டும் முக்கியமல்ல. அதை சரியாக சேமிக்கவேண்டும். பட்ஜெட் போட்டு செலவு செய்யவேண்டும். சரியான விதத்தில் முதலீடு செய்து, எதிர்காலத்தை எப்படி திட்டமிட வேண்டும் என்பதை பற்றி அறிந்துகொள்வது மிக அவசியம். இது நீண்டகால நிதி மேலாண்மைக்கு வழிவகுக்கும். உடனடியாக திருப்தி தரும் விஷயங்களில் பணத்தை செலவழித்துவிட்டால் எதிர்காலத்தில் துன்பப்பட நேரும்.
7. தன்னை கவனித்துக்கொள்ளுதல்;
சோர்வின்றி உழைக்கவும் உற்சாகமாக பணிபுரியவும் ஆரோக்கியமான உடலும் மனமும் மிக அவசியம். அவற்றைப் பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சரியான ஓய்வு, சமச்சீரான உணவு, தேவையான உடற்பயிற்சிகள், இவற்றுடன் மனதை ஆரோக்கியமாக இலகுவாக வைத்துக்கொள்வது உடல் மன நலனை பேணுவதற்கு சிறந்த வழியாகும்.
இந்த ஏழு விஷயங்களையும் பின்பற்றி சிந்தித்து செயல்பட்டால் Gen – Z க்கள் விரைவில் தங்கள் வாழ்வில் முன்னேற்றமும் வெற்றியும் பெறுவது உறுதி.