
உறவுகளைக் காட்டிலும் நட்புக்கு முக்கியத்துவம் தரவேண்டியது மிகவும் அவசியம். திருவள்ளுவர் நட்பை போற்றி ஒரு அதிகாரமே எழுதியுள்ளது நட்பின் சிறப்பை விவரிக்கும். 'உடுக்கை இழந்தவன் கை போலே அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' இது வள்ளுவரின் கூற்று. எப்படி இடுப்பு வேஷ்டி அவிழும் போது கை தானாக சென்று சரி செய்கிறதோ அது போல் கஷ்டங்கள் வரும்போது நட்பு நமக்கு கை கொடுக்கும் என்கிறார்.
நம்முடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும், நம் உணர்வுகளுக்கு மதிப்பு தரவும் நண்பர்களால் மட்டுமே முடியும். இன்றிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்! என்று நினைக்கும் அளவிற்கு நட்பு அமைவது என்பது பெரிய வரம்தான்.
பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத சில விஷயங்களைக் கூட நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும். நண்பர்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே இயலாது. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நண்பர்களைபோல் வராது. நட்பு எதையும் சார்ந்திராமல் சுயநலம் அற்றதாக இருக்கும். நட்பிற்கு வயது, மொழி, இனம், நாடு போன்ற எல்லைகள் கிடையாது. புரிந்து கொள்வதையும், ஒருவரை ஒருவர் அனுசரித்தலையும் அடிப்படையாகக் கொண்டதுதான் நட்பு.
நண்பர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதுதான் உண்மையான நட்பின் அடையாளம். வாழ்வில் நம்பிக்கை ஏற்படவும், பாதுகாப்பிற்கும் நட்பு மிகவும் அவசியமாகிறது. உண்மையான நட்பு என்பது அன்பும் அக்கறையும் கொண்டது.
சுயநலம் இல்லாமல் பழகக்கூடியது. துன்பம் வரும்போது துடித்துப்போய் உதவ கூடியது. நட்பின் சிறப்பை சங்ககாலத்தில் இருந்தே அறிய முடிகிறது. கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே இருந்த நட்பு, பாரிக்கும் கபிலருக்கும் இடையில் இருந்த நட்பு, அதியமானுக்கும் அவ்வையாருக்கும் இடையில் இருந்த நட்பு போன்றவை நட்பிற்கு பெருமை சேர்க்கும் சிறந்த உதாரணங்களாகும்.
உண்மையான நட்பு என்பது நம் வாழ்நாள் முழுவதும் தொடரும். உண்மையான நட்பிற்கு இணை எதுவும் இல்லை. இது ஒருவரது வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். அந்த காலத்திலும் சரி, இன்றைய சூழ்நிலையிலும் சரி பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நட்புக்கு என்றுமே தடையாக இருப்பதில்லை.
கிருஷ்ணன் - குசேலன் நட்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இளமைப் பருவத்தில் நம் வாழ்வில் எதிர்ப்படும் சிக்கல்களை தீர்க்க உதவும் நண்பர்கள் முதுமையில் ஆதரவாகவும், ஆறுதல் படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமே நண்பர்களின் துணை மிகவும் அவசியம். நட்பு என்பது நம்மை வெறுமையான சூழலில் இருந்து மீட்டெடுக்கவும், தேவைப்படும் நேரத்தில் தகுந்த ஆலோசனைகளை வழங்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கவும் பெரிதும் உதவும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத நட்பு கிடைப்பது பெரும் பாக்கியமே!
உண்மையான நட்பில் மன்னிப்பதும், குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்வதும், கடினமான காலங்களில் ஆதரவளிப்பதும், நட்புக்கு முன்னுரிமை அளிப்பதும் நட்பை மேலும் வலுவாக்கும். சில சமயம் பெற்றோரின் அன்பு, உறவினர்களின் பாசம் சாதிக்க முடியாததைக் கூட நட்பு சாதித்து காட்டும்.
நட்பு நீடித்திருக்க இரு பக்கமும் முயற்சிகளும், நல்ல புரிந்து கொள்ளும் உணர்வும், பிறர் நலம் காணும் குணமும், சுயநலம் இல்லாத பண்பும் தான் உண்மையான நட்பை தக்க வைத்துக்கொள்ள உதவும்.
நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே!