
எதற்கெடுத்தாலும் சிலர் வாதம் செய்வார்கள். தான் சொல்வதுதான் சரி என்று விடாப்பிடியாக இருப்பார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று சாதிப்பார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் வாதம் செய்வது என்பது சரியான போக்குதானா? தேவையற்ற வாதம் பிரச்சனைகளுக்கு வழி வகுக்காதா? வாதம் முற்றி போய் கருத்து வேறுபாடுகள் அதிகமாகும் பொழுது சண்டைக்கு வழி வகுக்கும் அல்லவா? எனவே எதற்கெடுத்தாலும் வாதம் செய்வது சரியான முறையல்ல.
வாதம் செய்வது என்பது ஒரு விவாதம் அல்லது கருத்தை முன் வைப்பதுடன் நில்லாமல் அதை சரி என்று நிரூபிக்க முயற்சிக்கும் செயலாகும். இது ஒருவருடைய கருத்தை மற்றவரிடம் எடுத்துச் சொல்லும் ஒரு வழியாகும். சில சமயங்களில் இது பயனுள்ளதாக தோன்றினாலும் வேறு சில சமயங்களில் இவை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சில விஷயங்களை வாதம் செய்வதன் மூலம் புதிய யோசனைகள் பிறக்கலாம்.
கருத்து வேறுபாடுகளை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளலாம். ஒரு பிரச்னை ஏற்படும் பொழுது அதனை தீர்ப்பதற்கான முயற்சியில் இறங்குவோம் அல்லவா அப்போது வாதம் செய்வது ஒன்றும் தவறல்ல.
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும், பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும் வாதம் செய்வதில் தவறில்லை. ஆனால் தேவையற்ற விஷயங்களில் விடாப்பிடியாக நின்று, தான் சொல்வதுதான் சரி என்று வாதம் செய்வது மற்றவர்களிடையே கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்கும்.
சிலர் மற்றவர்களை காயப்படுத்தும் எண்ணத்துடன் விவாதம் செய்வார்கள். எதிர் தரப்பினர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்காமல், அவர்களுடைய எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவது என்பது மிகவும் தவறான செயலாகும்.
எதற்கெடுத்தாலும் வாதம் செய்வது கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும். சண்டை சச்சரவுகளுக்கு வழிவகுக்கும். அதனால் காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்த நேரிடலாம். இதனால் எதிர் தரப்பினரின் மனம் புண்படும். தேவையற்ற வாதங்களில் ஈடுபடுபவர்கள், தாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ள முயற்சிக்கலாம். இதனால் மனக்கசப்பு அதிகரித்து அவர்கள் கூறும் எந்த கருத்துக்களையும் (நல்ல கருத்துக்களாக இருந்தாலும் கூட) கேட்காமல் போகலாம்.
இதனைத் தவிர்க்க எதற்கெடுத்தாலும் வாதம் செய்பவர்களிடம் நம் வாதத்தை வைக்காமல் அமைதிகாப்பது நல்லது. அவர்கள் பேசும் போது குறிக்கிடாமல் அமைதியாகவும், பொறுமையாகவும் கேட்பதும், இடையில் புகுந்து உணர்ச்சிவசப்பட்டு பேசாமலும் கோபப்படாமலும் இருப்பது நல்லது.
அதாவது மௌனமாக இருந்து எதிர்வினை ஆற்றாமல் இருப்பது நல்லது. இதனால் விவாதம் முற்றி சண்டை வருவதை தவிர்க்கலாம். மனம் காயப்படுவதையும் தவிர்க்கலாம். அத்துடன் இந்த வாதம் தன்னை வருத்தப்பட வைப்பதாகவும், இதைப்பற்றி வேறு ஒருநாள் பேசலாம் என்று சமூகமாக முடித்து வைப்பதும் பிரச்சினைகளை தவிர்க்க உதவும்.