
நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு உரிய ஆற்றலே பகிர்வு. நமது செல்வத்தையும் விலை மதிப்புள்ள பொருட்களையும் பிறருடன் சரியான முறையில் பகிர்ந்து கொள்வதில்தான் வளர்ச்சி அடங்கியுள்ளது.
பகிர்வு நமது செல்வக் குவிப்பிலிருந்து பிறப்பது அல்ல; நமது பரந்த மனப் பண்பிலிருந்து உருவாவது.
நமது அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்வதற்கு பகிர்வு உறுதி தருகிறது.பகிர்வு பதில் உதவியை எதிர்பார்ப்பது இல்லை.பகிர்வு, தன்னலத்தை வென்றுவிடுகிறது.
இறைவன் நம்மீது வைத்திருக்கும் திட்டவட்டமான வெளிப்பாட்டின் அடையாளமாகப் பகிர்வு நிகழ்கிறது.
அது இறைவனது நன்மைத் தளத்தில் நம்மையும் பங்கு கொள்ளச் செய்கிறது. தன்னலம் இல்லாமல் மற்றவருக்காகப் பணி புரிபவராகப் பகிர்வு ஒருவரை மாற்றுகிறது.
அளவற்ற செல்வம் உடைய ஒருவன் மனம் இறுகிப்போன நிலையில், வாழ்வின் தொடக்கத்தில் இருந்த இன்பம் தற்போது இல்லையே என்ற கவலையை, குருநாதர் ஒருவரிடம் கூறினான்.
குரு அவனிடம், "இங்கு, பார்! இந்தக் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும்போது, உன் கண்களுக்கு என்ன தெரிகிறது?" என்று கேட்டார்.
"மக்கள் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்" என்றான். அவன் வெளியே பார்த்துவிட்டு.
பின்னர் அந்தக் குரு அவனிடம் ஒரு கண்ணாடியைக் கொடுத்தார்.
''இதைப் பார்த்து, என்ன தெரிகிறது என்று சொல்! என்றார். "என் உருவம் தெரிகிறது" என்றான் அவன்.
"அப்படியென்றால் மக்கள் யாரும் அந்தக் கண்ணாடியில் தெரியவில்லையா?" என்று கேட்டார் குரு. தன்னலக்கார மனம் தன்னையே எண்ணுவதால் வருவதே கவலையும் துன்பமும் என்றார் குரு. தகுதியான நற்செயல்களுக்கு நிதியுதவி அளித்தல். பொதுவான நல்வாழ்வுத் திட்டங்களில் பங்கேற்றல். இவை யாவும் பகிர்ந்து கொள்ளுதலே.
ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக ஒத்துழைப்பு கொடுக்குமாறு ஒருமைப்பாட்டுணர்வு ஆர்வம் ஊட்டுகிறது.
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவரை மற்றவர் புரிந்து மதிக்கவும் அது உறுதுணை செய்கிறது.
ஒன்றுபட்ட லட்சியங்கள், குறிக்கோள்கள் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களை ஒன்றிணைக்கும் பண்பே கூட்டு ஒருமை உணர்வு எனலாம்.
கூட்டாகச் செயல்படுவதற்கு உரிய கொள்கைகளின் அடிப்படையில் ஒன்று சேருகின்ற கூட்டு நிகழ்ச்சித் திட்டங்களை மெய்யான அர்ப்பண ஈடுபாட்டுடன் அது மேற்கொள்ளும்.
தோழமையுணர்வு, நட்புணர்வு, கூட்டுப்பணி ஆகியவற்றில் வளர்ச்சிபெற கூட்டு ஒருமை உணர்வு உதவி செய்யும்.
பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஒன்று சேர்ந்து உழைத்து நல்லுறவுகளை மற்றவர்களுடன் வளர்த்துக் கொள்ளுங்கள்.